வெந்நீரூற்று அல்லது வெந்நீர்ச்சுனை (Geyser) என்பது நீரானது, நீராவியுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படுவதாகும். குறிப்பிட்ட சில நீர்நிலவியல் நிலைமைகளில் மட்டுமே இவ்வாறான வெந்நீரூற்றுகள் காணப்படுகின்றன.
புவியின் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகையான வெந்நீரூற்றுகள் இருப்பதனால், இது ஒரு அரிதான தோற்றப்படாகவே கருதப்படுகிறது. பொதுவாக இவை இயக்கநிலையிலுள்ள எரிமலைகள் இருக்கும் இடங்களில், பாறைக் குழம்புகளுக்கு அண்மையாகவே தோன்றியிருக்கும்.
நிலநீரானது நிலத்தினடியில் கிட்டத்தட்ட 2000 மீட்டர் ஆழத்தில் சூடான பாறைகளைத் தொட்டுச் செல்லும். அப்போது உருவாகும் அழுத்தம் கூடிய கொதிக்கும் நீரானது நிலத் துளைகளூடாக சூடான ஆவியுடன் கூடிய நீரை வேகத்துடன் வெளியேற்றும் செயற்பாட்டினால் இந்த வெந்நீரூற்றுகள் உருவாகின்றன.
உலகில் இருக்கும் கிட்டத்தட்ட 1000 வெந்நீரூற்றுகளில் அரைவாசியானவை அமெரிக்காவிலுள்ள வயோமிங்கு என்னும் இடத்தில் உள்ள எல்லோசுட்டோன் தேசியப் புரவகம் (Yellowstone National Park, Wyoming) என்ற இடத்திலேயே இருப்பதாக அறியப்படுகிறது.
வெந்நீரூற்றுப் பகுதியில் ஏற்படும் கனிமப் படிவுகள், அருகில் ஏற்படும் எரிமலை வெடிப்புக்கள், ஏனைய அருகாமையிலுள்ள பீறிட்டு மேலே நீர் பீச்சியடிக்காமல் காணப்படும் வெந்நீரூற்றுக்களின் (Hot springs) தாக்கம், மனிதர்களின் குறுக்கீடுகள் போன்றவற்றால், ஒரு வெந்நீரூற்று இடையே நிறுத்தப்படவோ, அல்லது முற்றாக நின்று போகவோ நேரலாம்.
வெந்நீரூற்றானது, ஒரு தற்காலிகமான புவியியல் தொழிற்பாடேயாகும். ஒரு வெந்நீரூற்றின் வாழ்வுக் காலம், சில ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே. பொதுவாக இவை எரிமலை செயற்பாட்டுடன் தொடர்புடையதாகவே இருக்கும். நிலத்தின் கீழாக நீரானது கொதிக்கும்போது உருவாகும் அமுக்கமானது, உயர் வெப்பநிலையைக் கொண்ட நீரையும், நீராவியையும் நிலத்தின் உள்ளிருந்து வரும் குழாய்நிரல் அமைப்பினூடாக மேற்பரப்பை நோக்கி வேகமாக வெளியேற்றும்.
வெந்நீரூற்றின் தோற்றத்திற்கு, உயர் வெப்பநிலை, நிலத்தடி நீர், நிலத்தினடியில் இருந்து மேற்பரப்பை நோக்கி வரும் குழாய் போன்ற அமைப்பு ஆகிய மூன்று நிலவியல் நிலைமைகளும் மிகுதேவையாகின்றன.
உயர் வெப்பநிலை
இந்த நிலைமை எரிமலையில் இருந்து வெளியேறிய நிலப்பரப்பிற்கு அண்மையாக நிலத்தினுள்ளே படிந்திருக்கும் பாறைக் குழம்பினால் ஏற்படும். இப்படியான இடங்களில் இருக்கும் மேலதிக அமுக்கம் காரணமாக, சாதாரண வளிமண்டல வெப்பநிலையில் நீர் கொதிக்கும் கொதிநிலையைக் காட்டிலும் அதிகரித்த கொதிநிலையிலேயே நீர் கொதிநிலையை அடையும்.
நிலத்தடி நீர்
நிலத்தினடியில் காணப்படும் நீர், நிலத்தில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புக்களினால் உண்டான நிலத் துளைகள் ஊடாக, நிலத்தினடியிலிருந்து மேற்பரப்புக்கு வர வேண்டும்.
குழாய் அமைப்புக்கள்
இவ்வமைப்பில், நிலத்தினடியில் நீரைக் கொண்டுள்ள நீர்த் தேக்கமும் அடங்குகின்றது. நிலத்தினுள் காணப்படும் குழாய் அமைப்புக்களில் ஏற்படும் ஒடுக்கங்களினால் வரும் அமுக்க மாற்றமே இவ்வகையான நீர் வெளித்தள்ளலுக்கு உதவுகின்றது. நிலத்தினுள் காணப்படும், வெடிப்புகள், துளைகள், குழிகள் போன்ற அமைப்புக்களே, இத்தகைய குழாய் அமைப்பை ஏற்படுத்துகிறன.
1. Steam rises from heated water 2. Pulses of water swell upward 3. Surface is broken 4. Ejected water spouts upward and falls back
வெந்நீரூற்ருகளில் காணப்படும் வழக்கத்துக்கு மாறான சூழ்நிலைகளையும் மீறி அங்கு வாழும் உயிரினங்களே, வெந்நீரூற்றுகளின் வேறுபட்ட நிறத்துக்கு காரணமாகின்றன. பொதுவாக உயர் வெப்பநிலையில் வாழக்கூடிய நிலைக்கருவிலிகள் (Prokaryotes) என்னும் உயிரினங்களே இங்கு காணப்படுகின்றன. 60 பாகை செல்சியசுக்கு மேலான வெப்பநிலையில் வாழக்கூடிய மெய்க்கருவுயிரி (Eukaryotes) எதுவும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை ஆதலால் அவை வெந்நீரூற்றுகளில் இருப்பதற்கான வாய்ப்புக்கூறுகள் இல்லை எனலாம்.
1960 ஆம் ஆண்டுகளில் வெந்நீரூற்றுகளைப் பற்றி ஆய்ந்த அறிவியலாளர்கள், 73 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் உயிரினங்கள் வாழ முடியாது என்ற கொள்கையையே நம்பியிருந்தனர். அதுவே சயனோபாக்டீரியா (Cyanobacteria) வின் உயர்ந்த தாங்கும் வெப்பநிலையாகக் கருதப்பட்டது. ஆனால் பின்னர் பல பாக்டீரியாக்கள் நீரின் கொதிநிலை வரை கூட வாழக்கூடியவை எனக் கண்டறியப்பட்டது. அப்படியான உயிரினங்கள் இந்த வெந்நீரூற்றுகளில் வாழும்போது, அவற்றின் நிறைத்திற்கேற்ப வெந்நீரூற்றின் நிறமும் காணப்படுகிறது.
வெந்நீரூற்றுகள் உருவாவதற்கு உயர் வெப்பநிலை, நிலத்தடி நீர், நிலத்தினுள் காணப்படும் குழாய் அமைப்புக்கள் ஆகிய மூன்றும் இணைந்திருத்தல் அவசியம் என்பதனால் உலகில் மிகச்சில இடங்களிலேயே இவை காணப்படுகின்றன.
யெலோஸ்டோன் தேசியப் பூங்கா, ஐக்கிய அமெரிக்கா
இந்த இடத்திலேயே அதிகளவிலான வெந்நீரூற்றுகள் காணப்படுகின்றன. உலகிலுள்ள வெந்நீரூற்றுகளில் அரைவாசியானவை இங்கேயே காணப்படுகிறது. ஆயிரக் கணக்கில் நீர் மேலே பீறிட்டு எழும்பாத Hot springs எனப்படும் வெந்நீரூற்றுகளும், 300-500 நீர் பீறிட்டு எழும் வெந்நீரூற்றுகளும் இங்கே உள்ளன. அனேகமானவை Wyoming, USA பகுதியிலும் ஏனையவை Montana, Idaho பகுதியிலும் காணப்படுகின்றன. இங்கேயே மிகவும் இயங்கு நிலையிலுள்ள உயர்வெப்ப வெந்நீரூற்றும் உள்ளது.
வெந்நீரூற்றுப் பள்ளத்தாக்கு, உருசியா
வெந்நீரூற்றுப் பள்ளத்தாக்கு (Valley of Geysers) உருசியாவில் காம்ச்சட்கா (Kamchatka) மூவலந்தீவில் (தீபகற்பத்தில்) உள்ளன. இந்த ஒரு இடத்திலேயே இரசியாவில் வெந்நீரூற்றுகள் இருப்பதாயும், அவையே உலகில் இரண்டாவது பெரிய வெந்நீரூற்றுகள் நிறைந்த இடம் எனவும் அறியப்படுகிறது. இந்த இடத்தை 1941 இல் தாத்தியானா உசித்தினோவா (Tatyana Ustinova) என்பவர் கண்டு பிடித்தார். இங்கே கிட்டத்தட்ட 200 வெந்நீரூற்றுகள், வேறும்(?) அதிகளவிலான நீரை வெளியே உயரத்துக்கு எழுப்பாத வெந்நீரூற்றுகளுடன் சேர்ந்து உள்ளன. மிகவும் தீவிரமான எரிமலை வெடிப்புக்களாலேயே இவை உருவாகியுள்ளன. இங்கு மிகவும் மாறுதலான வகையில், சாய்வாக நீர் பீறிட்டு எழும். ஜூன் 3, 2007 இல் ஏற்பட்ட மண்சரிவினால் குறிப்பிட்ட பள்ளத்தாக்கின் மூன்றில் ஒரு பகுதி தாக்கப்பட்டது. இதனால் இந்த இடத்தில் சூடான ஏரி உருவானதாக அறியப்பட்டது. ஆனாலும் முற்றாக மூடப்படாமல், வெந்நீரூற்றுகள் தொடர்ந்தும் இயங்குநிலையில் இருந்தது பின்னர் சில நாட்களில் கண்டறியப்பட்டது.
எல் டாத்தியோ, சிலி
எல் தாத்தியோ (El Tatio) என்பது தென்னமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் கடல் மட்டத்திலிருந்து 4200 மீ உயரத்திலுள்ள ஆண்டிய மலைப்பகுதியில், மிகவும் கனன்று கொண்டிருக்கும் நிலையிலுள்ள எரிமலைகளால் சூழப்பட்ட இடத்திலுள்ள பெரிய பள்ளத்தாக்கில் இருக்கும் ஒரு இடமாகும். இந்த பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட 80 வெந்நீரூற்றுகள் காணப்படுவதுடன், இது மூன்றாவது பெரிய வெந்நீரூற்று நிலப்பகுதியாகக் கருதப்படுகிறது. இவை உயரம் குறைந்தவையாகும். இங்கே அதி உயரமாக 6 மீட்டர் மட்டுமே இருப்பினும், நீராவியுடன் சேர்த்து 20 மீட்டர் வரை செல்லும்.
தாவுப்போ எரிமலை வலயம், நியூசிலாந்து
நியூசிலாந்தின் வடக்குத் தீவிலுள்ள தாவுப்போ எரிமலை வலயத்தில் (Taupo Volcanic Zone) வெந்நீரூற்றுகள் உள்ளன. 500 மீட்டர் உயரம்வரை செல்லக் கூடிய வெந்நீரூற்றுக்கள் இங்கே உள்ளன.
நெவாடா (Nevada) பகுதியில் காணப்பட்ட இரு பெரிய வெந்நீரூற்றுகள், அப்பகுதியில் உருவாக்கப்பட்ட புவி வெப்ப ஆற்றல் மின் உற்பத்தி நிலையத்தால் அழிந்து போனது. இந்த நிலையத்தை உருவாக்கும்போது, நிலத்தடி நீரும், வெப்பமும் குறைவதால் வெந்நீரூற்று தன் இயங்கு நிலையை இழக்கிறது.
கடந்த நூற்றாண்டில் நியூசிலாந்தில் உள்ள பல வெந்நீரூற்றுகள் மனிதர் நடவடிக்கைகளால் அழிக்கப்பட்டது. பல இயற்கையாகவும் இயங்கு நிலையை இழந்தது. தற்போது இருப்பவை முக்கியமாக ரோட்டூருவாவில் உள்ள வாக்கரேவரெவா (Whakarewarewa), Roturua) என்ற இடத்திலேயே உள்ளது. Orakei Korako இலிருந்த மூன்றில் ஒரு பங்கு வெந்நீரூற்றுகள் 1961 வெள்ளத்தால் அழிந்தது. 1958 இல் Wairakei இலிருந்தவை, புவி வெப்ப ஆற்றல் மின் உற்பத்தில் நிலைய உருவாக்கத்தால் அழிந்தன
ஐசுலாந்தானது அதிகளவில் வெந்நீரூற்றுகளைக் கொண்ட ஒரு நாடாகும். ஐசுலாந்து தீவு முழுமையிலும், இவ்வகையான வெந்நீரூற்றுகள் பரவிக் காணப்படுகின்றன. 5-8 நிமிடங்களுக்கு ஒரு தடவை 30 மீட்டர் உயரத்திற்கு நீரை வெளியேற்றக் கூடிய ஒரு வெந்நீரூற்று இசுற்றோக்கூருக்கு (Strokkur) அருகில் காணப்படுகின்றது.
வணிக நோக்கிலான பலன்கள்
மின்சார உற்பத்தி, சுடுநீர்த் தேவை, சுற்றுலாத்துறை போன்ற வணிகநோக்கிலான தேவைகளுக்கு இந்த வெந்நீரூற்றுக்கள் பயன்படுகின்றன. 1920 ஆம் ஆண்டு முதல், ஐசுலாந்தில் உணவுக்கான தாவரங்களை வளர்க்கப் பயன்படும் பசுமைக்குடில்களை (greenhouse) சூடாக்கி வைத்திருக்க இந்த வெந்நீரூற்றுக்கள் பயன்படுகின்றன்.
ஐசுலாந்தின் தட்பவெப்பநிலை (காலநிலை) வெளியிலே தாவரங்களை வளர்த்தெடுக்க உகந்ததாக இல்லாமல் இருப்பதால் இந்த முறை மிகவும் பயனுள்ளதான் அமைகின்றது. 1943 ஆம் ஆண்டு முதல் வீடுகளை சூடாக்குவதற்கும் அங்கே இவை பயன்படுத்தப்படுகின்றன.
Post Comment
2 comments:
அறியாத தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி.
//sivatharisan said...
அறியாத தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா
Post a Comment