"டுவென்டி-20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி ஜோராக கைப்பற்றியது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. கீஸ்வெட்டரின் அதிரடி அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. இதன் மூலம் ஐ.சி.சி., நடத்தும் உலக கோப்பை தொடர்களில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை "டுவென்டி-20 உலக கோப்பை துரதிருஷ்டம் தொடர்ந்தது. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியதால், வாய்ப்பை பரிதாபமாக இழந்தது.
வெஸ்ட் இண்டீசில் மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் நடந்தது. நேற்று பார்படாசில் நடந்த பைனலில் "ஆஷஸ் எதிரிகளான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் கோலிங்வுட் துணிச்சலாக பீல்டிங் தேர்வு செய்தார்.
சைடுபாட்டம் மிரட்டல்:
ஆஸ்திரேலிய அணி எடுத்த எடுப்பிலேயே ஆட்டம் கண்டது. சைடுபாட்டம் வீசிய முதல் ஓவரில் வாட்சன் அடித்த பந்து, "கீப்பர் கீஸ்வெட்டர் "கிளவுசில் பட்டு நழுவியது. அதனை சுவான் சாமர்த்தியமாக பிடிக்க, 2 ரன்களுக்கு வெளியேறினார். மைக்கேல் லம்ப்பின் நேரடி "த்ரோவில் வார்னர்(2) நடையை கட்டினார். பின் சைடுபாட்டம் வேகத்தில் பிராட் ஹாடின் (1), கீஸ்வெட்டரின் சர்ச்சைக்குரிய "கேட்ச்சில் அவுட்டானார். பந்து, ஹாடின் தொடையில் பட்டு வந்தது "ரீப்ளேவில் தெளிவாக தெரிந்தது. இப்படி "டாப்-ஆர்டர் விரைவில் சரிய, 2.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 8 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
கிளார்க் ஏமாற்றம்:
பிரஸ்னன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட இங்கிலாந்து வேகங்கள் மிக துல்லியமாக பந்துவீச, "பவர் பிளே ஓவரில் ரன் வறட்சி ஏற்பட்டது. சுவான் சுழலில் கோலிங்வுட்டின் சூப்பர் "கேட்ச்சில் கேப்டன் மைக்கேல் கிளார்க்(27) வெளியேற, ஆஸ்திரேலிய அணி 9.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்து திணறியது.
டேவிட் ஹசி ஆறுதல்:
இதற்கு பின் கேமரான் ஒயிட், டேவிட் ஹசி இணைந்து போராடினர். யார்டி வீசிய 13வது ஓவரில் டேவிட் ஹசி, ஒரு சிக்சர் அடித்தார். பின் ஒயிட் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 21 ரன்கள் கிடைத்தது. ஒயிட் 30 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த சகோதரர் மைக்கேல் ஹசி "கம்பெனி கொடுக்க, டேவிட் ஹசி அரைசதம் எட்டினார். இது சர்வதேச "டுவென்டி-20 போட்டிகளில் இவரது 3வது அரைசதம். இவர் 59 ரன்களுக்கு(2 சிக்சர், 2 பவுண்டரி) ரன் அவுட்டானார். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் வாணவேடிக்கை காட்டிய மைக்கேல் ஹசி(17*), இம்முறை அதிரடியாக ரன் சேர்க்க இயலவில்லை. ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்தது.
கீஸ்வெட்டர் கலக்கல்:
எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு லம்ப்(2) ஏமாற்றம் அளித்தார். இதற்கு பின் கீஸ்வெட்டர், பீட்டர்சன் இணைந்து கலக்கினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்த இவர்கள், மிக எளிதாக ரன் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய கீஸ்வெட்டர், வாட்சன், நானஸ் ஓவர்களில் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். இவர் சர்வதேச "டுவென்டி-20 போட்டிகளில் தனது முதல் அரைசதம் கடந்து அசத்தினார். மறுபக்கம் நானஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய பீட்டர்சன்(47) அரைசதத்தை நழுவ விட்டார். சிறிது நேரத்தில் ஜான்சன் வேகத்தில் கீஸ்வெட்டர் 63 ரன்களுக்கு(7 பவுண்டரி, 2 சிக்சர்) போல்டாக, லேசாக பதட்டம் ஏற்பட்டது.
பின் மார்கன், கேப்டன் கோலிங்வுட் இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். வாட்சன் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த கோலிங்வுட், அணியின் கோப்பை கனவை நனவாக்கினார். இங்கிலாந்து அணி 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் "டுவென்டி-20 உலக கோப்பையை முதல் முறையாக வென்றது. ஆஸ்திரேலியா மீண்டும் ஏமாற்றம் அளித்தது.
ஆட்ட நாயகனாக கீஸ்வெட்டர் மற்றும் தொடர் நாயகனாக பீட்டர்சன் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய வரலாறு
நேற்று சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் நடத்தப்படும் தொடர்களில், முதன்முறையாக கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது. முன்னதாக ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடரில் மூன்று முறை (1979, 87, 92), சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) தொடரில் ஒரு முறை (2004) பைனல் வரை சென்று, கோப்பை வெல்ல தவறியது. தவிர இது, "டுவென்டி-20 உலக கோப்பை அரங்கில், இங்கிலாந்து அணியின் முதல் சாம்பியன் பட்டம்.
ஆஸி.,க்கு இல்லை ராசி
ஒரு நாள் போட்டியில் நான்கு முறை(1987, 99, 2003, 07) உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு "டுவென்டி-20 தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் ராசி இல்லை. மிக முக்கியமான நேற்றைய பைனலில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சொதப்பி, கோப்பை வாய்ப்பை இழந்தது.
ஜெயவர்தனா அபாரம்
மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில், இலங்கையின் மகிலா ஜெயவர்தனா முதலிடம் பிடித்தார். ஆறு போட்டியில் விளையாடிய ஜெயவர்தனா ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 302 ரன்கள் குவித்தார்.
இத்தொடரில் 200 ரன்களுக்குமேல் குவித்த வீரர்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
ஜெயவர்தனா (இலங்கை) 6 302 1/2
பீட்டர்சன் (இங்கிலாந்து) 6 6 248 0/2
சல்மான் பட் (பாக்.,) 6 6 223 0/2
கீஸ்வெட்டர் (இங்கிலாந்து) 7 7 222 0/1
ரெய்னா (இந்தியா) 5 5 219 1/1
நானஸ் துல்லியம்
மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில், ஆஸ்திரேலியாவின் நானஸ் முதலிடம் பிடித்தார். ஏழு போட்டியின் விளையாடிய நானஸ் 14 விக்கெட் வீழ்த்தினார்.
இத்தொடரில் 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்த வீரர்கள்:
வீரர் போட்டி விக்கெட்
நானஸ் (ஆஸி.,) 7 14
லாங்கிவெல்ட் (தெ.ஆ.,) 4 11
ஸ்மித் (ஆஸி.,) 7 11
அஜ்மல் (பாக்.,) 6 11
சுவான் (இங்கிலாந்து) 7 10
ஜான்சன் (ஆஸி.,)
நெஹ்ரா (இந்தியா) 5 10
சைடுபாட்டம் (இங்கிலாந்து) 7 10
ரெய்னா அதிரடி
மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடரில், ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சுரேஷ் ரெய்னா முதலிடம் பிடித்தார். இவர் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 60 பந்தில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். இவரை தொடர்ந்து இலங்கையின் மகிலா ஜெயவர்தனா (64 பந்து, 100 ரன்கள்) உள்ளார். தவிர, இத்தொடரில் சதம் கடந்த வீரர்கள் என்ற பெருமையை ரெய்னா, ஜெயவர்தனா பெற்றனர்.
"சிக்சர் மன்னன் ஒயிட்
மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடரில், அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் காமிரான் ஒயிட் முதலிடம் பிடித்தார். இவர் 7 போட்டியில் விளையாடி, 12 சிக்சர் விளாசினார். இவரை தொடர்ந்து ஜெயவர்தனா (இலங்கை), கீஸ்வெட்டர் (இங்கிலாந்து), வாட்சன் (ஆஸி.,) ஆகியோர் தலா 11 சிக்சர் விளாசினர். உமர் அக்மல் (பாக்.,), டேவிட் ஹசி (ஆஸி.,), டேவிட் வார்னர் (ஆஸி.,) ஆகியோர் தலா 10 சிக்சர் விளாசினர்.
அதிர்ச்சியான துவக்கம், சந்தோஷமான முடிவு
மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு, ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்து. ஏனெனில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் போட்டியில், "டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி தோல்வியை சந்தித்தது. இதனால் 2வது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போட்டி மழை காரணமாக கைவிடப்பட, "ரன்-ரேட் அடிப்படையில் "சூப்பர்-8 வாய்ப்பை பெற்றது. இதில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து, பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது.
"ஸ்கிரீன் பிரச்னை
இங்கிலாந்து பேட் செய்த போது, 3வது ஓவரில் மைதானத்தில் இருந்த "ஸ்கிரீனில் பிரச்னை ஏற்பட்டது. "ஸ்கிரீன் முழுவதும் கருப்பு நிறமாக மாறாததால் சுமார் 5 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. ஒருவழியாக சரி செய்யப்பட, போட்டி தொடர்ந்து
0 comments:
Post a Comment