சிறுமியை அதில் தள்ளிவிடுவதற்கு மற்றவர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். சடங்குகள் நடந்துகொண்டிருந்தன.எதற்காக அவளை தீயில் தள்ளப்போகிறார்கள்? இரண்டாவது ‘ஃபாரம்’ படித்துக் கொண்டிருந்த அவளுக்கு வயது 7. கட்டாய திருமணம் செய்துவைத்தார்கள். திருமண சடங்குகள் அவளுக்கு புதிதாக, சுவாரசியமாக இருந்தது. கட்டியவன் ஒரே ஆண்டில் இறந்தான். கல்யாணத்தில் நடந்த சடங்குகள் எல்லாம் தலைகீழாய் நடந்தது. சோகம்கூட புரிபடாத அவளுக்கு அவையும் புது அனுபவமாகவே இருந்தது.
“கன்னி கழியாமல் விதவையாகிவிட்டாள். அவளை உடன்கட்டை ஏற்றவேண்டும்” & ஊர் ‘பெரிய’ மனிதர்கள் முடிவெடுத்தார்கள். சிறுமியின் பெற்றோர் சம்மதத்துடன் இப்போது சுடுகாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறாள். கதறக் கதற அவளை நெருப்பில் தள்ளிவிட்டுவிட்டு, சொந்தமும் மற்ற ஜனங்களும் திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டிருந்தார்கள். இந்த கொடுமையை பார்த்து அக்னிக்கே இரக்கம் வந்திருக்கும் போல. உயிர் பயத்தில் இருந்த சிறுமி, நெருப்பின் நடுவே இங்கும் அங்கும் ஓடியவள் வெளியே வந்து விழுந்தாள். வெகு நேரம் கழித்து மயக்கம் தெளிந்தது. நடக்க முடியாமல் வீடு வந்து சேர்ந்தாள். “அம்மா! காப்பாத்துமா” ஈனக்குரலில் முனகினாள்.நெருப்பில் போட்டவள் திரும்பி வந்ததை பார்த்து, தாய் என்ற அந்த பெண் அதிர்ந்தாள். “நீ தீட்டு பட்டவள். ஏன் வந்தாய்? ஓடிப்போ” என்றாள்.தாயே இப்படி சொன்னது, சுடுகாட்டில் சுட்டதைவிட அந்த சிறுமியை அதிகம் சுட்டது. ஊர் மீது ஆத்திரம் வந்தது. “தப்பே செய்யாத என்னை துடிக்கத் துடிக்க நெருப்புக் குழியில் தள்ளினீங்களே, நீங்க நல்லா இருக்கமாட்டீங்க. சோத்துக்கே சிரமப்படுவீங்க” என்று கதறினாள். அதுவரை உடலில் ஒட்டிக்கொண்டிருந்த உயிர் மெல்ல பிரிந்தது.ஊர் மீது எரிச்சலும் கோபமும் உள்ள சிறுமியின் ஆவி 150 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கேயே சுற்றிக்கொண்டிருப்பதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இந்த பீதி ஏற்பட்டது தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அடுத்துள்ள முத்தாலங்குறிச்சியில்.
அடுத்து 2&வது ஆவி. இது ஒரு மந்திரவாதியுடையதாம்.
“அந்த மந்திரவாதி சலவைத்தொழில் செய்துவந்தான். ஊரிலேயே அவன் பெரும் பணக்காரன். ஆவி, பேய், பிசாசு, வசியம், துர்தேவதைகள் பூஜையில் ஈடுபாடு கொண்டவன். அனவரதநல்லூர் தென்னம்பாண்டி சாமியை மை போட்டு வசியம் செய்து வைத்திருந்தான். இவன் குளித்துவிட்டு வரும்போது தலைக்கு மேல் குடை போல வேட்டி பறந்துகொண்டே வரும். தனக்கு ஏவல் காரியங்கள் செய்ய சிலோனில் இருந்து ஒரு மோகினியை மந்திரவாதி கொண்டு வந்திருந்தான். வண்ணான்துறையில்தான் அது உலாத்திவந்தது. மந்திரவாதி என்ன சொன்னாலும் செய்து வந்தது. வேண்டாதவர்களை சாகடிக்கவும் இந்த மோகினியை அவன் பயன்படுத்தி வந்தான்.
ஒருநாள், திடீரென ஆற்றில் அடித்துக்கொண்டு போய் இறந்துவிட்டான். அப்போதிருந்து அவன் ஆவியும் இங்கு சுற்றுகிறது. அவன் இறந்ததில் இருந்தே அவனது மனைவி பிரமை பிடித்தது போல இருந்தாள். ‘தெய்வங்களை வசியம் செய்து என்ன புண்ணியம்? என் புருஷன் உயிரை யாரும் காப்பாற்றவில்லையே’ என்று கத்துகிறாள். நாக்கை அறுத்து கோயில் முன்பு வீசிவிட்டு, ‘இந்த கோயிலும் ஊரும் உருப்படாது’ என்று சொல்லிவிட்டு அவளும் செத்துவிடுகிறாள். இருவரது ஆவியும் இங்குதான் சுற்றுகின்றன” என்று பெரிய கதை சொல்லி முடிக்கின்றனர் ஊர் மக்கள். “சிறுமி, மந்திரவாதி, அவன் மனைவி என 3 ஆவிகள் அலைவதால் இங்குள்ள சிவன் கோயிலுக்கு 100 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்த முடியவில்லை. 7 தலைமுறைக்கு முன்பு இந்த கிராமத்தைவிட்டு சென்றவர்களைக் கொண்டு சமீபத்தில் கோயிலில் ஹோம, பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. ஆவிகளை கலையத்தில் அடைத்து தாமிரபரணியில் விடப்பட்டுள்ளது. ஊரில் இருந்த தீய சக்திகள் ஓடிவிட்டன. விரைவில் கும்பாபிஷேகம் நடக்கப்போகிறது” என்று மகிழ்ச்சியுடன் சொல்கின்றனர் முத்தாலங்குறிச்சி மக்கள்.
படவிளக்கம் : 3 ஆவிகள் நடமாட்டதால் 100 ஆண்டுகளாய் கும்பாபிஷேகம் தடைபட்ட சிவன் கோயில்.
நன்றி :Dinakaran
0 comments:
Post a Comment