உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?! அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா?
உடல்-மூளை தொடர்பு !
நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா, சில நோய்களுக்கு மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை , நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் “ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே” வெகு காலமா இருந்து வருது!
இதுக்கு ஆங்கிலத்துல “ப்ளாசிபோ எஃபெக்ட்”, அப்படின்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது?! அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை!
அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)
உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால் நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்!
இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பத்தின ஆய்வு என்னைக்குமே ஒரு தெளிவான முடிவைத் தராது, மனுஷனுக்கு அப்பாற்பட்டது அப்படின்னும் சொல்றாங்க. அப்ப்டின்னா, கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராவேதான் இருக்குமா? தெரியல, காலந்தான் பதில் சொல்லனும்!
இறப்பை ஒத்த அனுபவங்கள்/ இறப்புக்குப் பின் வாழ்வு (புனர்ஜென்மம்?!)
நம்மில் சில பேர், சமயத்துல சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதப்பத்தி சொல்லும்போது “செத்துப் பொழச்சவண்டா” அப்படின்னு சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, அப்படின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவங்க, அந்த அனுவபம் பத்தி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ள போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துல வந்து, சொந்த பந்தங்களோட இணைஞ்ச மாதிரி ஒரு உணர்வு” அப்படின்னு எல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? (குறைந்தபட்சம் சினிமாவுலயாவது பார்த்திருப்போம்!) .
அதாவது, கல்லரையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு?! இதுமாதிரி கதைகள்? பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை! இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் காயப்பட்ட/பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவுல் இல்லை அப்படின்னு சொல்றாங்க!
யு.எஃப்.ஓ/UFOs
ufo யு.எஃப்.ஓ என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருள்களை?! பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, அப்பப்போ வானத்துல திடீர்னு எதாவது ஒன்னு பறக்கிற மாதிரி தெரியும் (ஏரோப்ளேன் இல்லீங்க!), அது விண்கற்களா/ஏவுகனைகளா அப்படின்னு அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனுஷனோட வேலையா கூட இருக்கலாம் அப்படிங்கிறது இன்னொரு விஷயம்! என்னதான் கூர்மையா கவனிச்சி ஆய்வு பண்ணாலும் இது என்னன்னே தெரியாமதான் இருக்கோம் இதுவரைக்கும்?
தேஜா வு (Deja vu)
“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது, இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் அப்படின்னு சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாவேதான் இருக்கு!
பேய்/பிசாசு/ஆவி
நம்ம பாரம்பரியத்துல, கலாச்சாரத்துல ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பா நாம எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பா இருக்கும். எனக்கு நியாபகம் இருக்கிற வரைக்கும் சொல்லனும்னா, நான் அதிகமா கேட்டது/சினிமாவுல பார்த்தது “வெள்ளையா ஒரு புடவ கட்டிகிட்டு, ஜல் ஜல்னு கொலுசு சத்தம் கேட்கிற மாதிரி நடந்து வர்ர ஒரு பொம்பள பேய பத்தித்தாங்க!
அதுக்காக, நான் நெசமாவே அப்படி ஒரு பேயைப் பார்த்தேன்னு எல்லாம் உங்க கிட்ட கப்சா உடறதுக்கு எனக்கு விருப்பமில்லீங்கோ! சரி, நாம மேட்டருக்கு வருவோம். அதாவது, நான் மேல சொன்ன மாதிரி உலகத்தோட எல்லா மூலைகள்ல இருந்தும் இந்த மாதிரி கதைகள் நெறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிக்கவேயில்லீங்க சாமி! அது ஒரு அழகிய?! மர்மமாவேதான் இருக்கு
மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)
பொதுவா மனுஷங்க தொலைஞ்சு போறதும், கொஞ்ச காலம் கழிச்சு திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்துல சாதாரணமா நடக்கிற ஒன்னு! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம் அப்படியில்ல. நெசமாவே, நம்ம கூட இருந்துக்கிட்டிருக்கிற ஒருத்தரு திடீர்னு மறைஞ்சு போறது எப்படி சாத்தியம்? அது எப்படின்னு தெரியாது, ஆனா இது மாதிரி நெறைய நடக்குது (குறைந்தது அமெரிக்காவுலயாவது!). தொலைஞ்சு போனவங்க கெடைச்சிட்டா பரவாயில்ல, ஆதாரம் எதுவுமே இல்லாம, தொலைஞ்சு போறவங்கள பத்தி விசாரனை பண்ணாலும் அவங்க கிடைக்கிறதில்ல அப்படிங்கிறப்ப, அது ஒரு மர்மம்தானே?
ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)
நம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன். அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம்.
உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல
மனிதன் போன்ற மிருகம்/Bigfoot
பல வருஷ காலமா அமெரிக்காவுல, பெரிய, அடர்த்தியான முடியோட, மனுஷன்மாதிரியே இருக்கிற “பிக்ஃபூட்”, அப்படிங்கிற மிருகத்தப் பார்த்ததா நெறைய பேர் சொல்லியிருக்காங்க! அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செஞ்சுகிட்டிருந்தா குறைந்தது ஒன்னையாவது, இல்லன்னா அதோட ஒரு பிணத்தையாவது கண்டுபிடிச்சிருக்கனுமில்ல இதுவரைக்கும்?! ஆனா அப்படி ஒன்னையும் இதுவரைக்கும் கண்டும் புடிக்கல, வேட்டையாடவும் இல்லங்கறதுதான் உண்மை! வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வச்சுகிட்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்குன்னு சொல்றதுல எந்த யதார்த்தமும் இல்ல அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்
டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum)
அமெரிக்காவுல, நியூ மெக்சிகோவுல இருக்கிற ஒரு சின்ன நகரத்துக்கு பேருதான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தச் சேர்ந்த சில மக்கள் பல வருஷமா, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்துல ஒரு சத்தம் கேட்டுகிட்டு இருக்கிறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க! ஆனா வெறும் 2 விழுக்காடு மக்கள்தான் இதச் சொல்றாங்களே தவிர, மத்தவங்கள்லாம் இது ஏதோ ஒலி அலைகள்னால ஏற்படற ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் இல்லங்கிறாங்களாம். எது எப்படியோ, அது என்ன சத்தம்னு இதுவரைக்கும் யாராலயும் உறுதியாச் சொல்லமுடியலயாம்!
4 comments:
தரமான தேடல்
நன்றி மால்குடி
அருமையான பதிவு....
தேஜ வு நான் இதை பல முறை உணர்திருகிரனே..
நன்றி ராஜா ....
தேஜ வு நானும் உணர்ந்து இருக்குறேன்
Post a Comment