இரவு நேரம். ஆனால் ஸ்டெப்பி எனும் பரந்த வெளியில் இடிச் சத்தமும் உறுமலும் கேட்கின்றன. விசித்திரமான நிழல்கள் நிலவின் ஒளியைக் கிழித்துக்கொண்டு தூரத்தில் சென்று மறைகின்றன. அவை என்ன? பனிப்பாறைகள் சரிந்து விழுகின்றனவா? அல்லது பூகம்பமா? இரண்டுமே இல்லை. "பிரான்டோதேரியா' என்ற மிருகக் கூட்டம் எதனாலோ பயந்துவிட்டது. எனவேதான் அந்த மிருகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
எங்கிருந்தோ பயங்கரமான உறுமல் கேட்கிறது. உரோமம் நிறைந்த ஒரு மிருகத்தின் உடல் நிலவு வெளிச்சத்தில் தோன்றி மறைகிறது. அதன் கண்கள் நெருப்புபோன்று மிகப் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன. அதைப் பார்ப்பவர்களுக்கு நடுக்கம் ஏற்படும். அதன் வாய் மிக அகலமாக இருக்கும். அதில் வரிசை வரிசையாகப் பற்கள். அந்தப் பற்களின் பிரகாசமான பளபளப்பு பார்ப்பதற்குப் பயங்கரமாக இருக்கும். "இரவின் பயங்கரம்' என்று சொல்லப்பட்ட "ஆன்ட்ரூஸர்ஹஸ்' வேட்டைக்குப் புறப்பட்டுவிட்டது. விலங்குகளே தப்பியோடுங்கள்!
எலியைப்போன்ற ஒரு சிறு பிராணி ஒரு ஓரமாகப் பதுங்கி மறைகிறது. இதுதான் அனைத்து முள்ளெலிகளுக்கும் மூதாதை. இதன் பெயர் "ப்ஸயூடிக்டாப்ஸ்'. இது ஸ்டெப்பி நிலத்தில், இரவு நேரத்தில் பயந்து பயந்து வாழ்க்கை நடத்துகிறது. அதன் உடலில் இன்னும் முட்கள் வளரவில்லை.
எங்கும் அமைதியாக இருக்கும்போது நிலவு வெளிச்சத்தில் சில பிராணிகள் குதித்து விளையாடுகின்றன. நரியின் அளவில் இருக்கும் சிறு குதிரைகள் ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு "இயோஹிப்பஸ்' என்று பெயர். அவற்றின் பிளந்த குளம்புகள் மூன்று சிறு விரல்களைக் கொண்டிருக்கின்றன. பனி விழுந்திருக்கும் புற்களின் மீது அவை சத்தமில்லாமல் நடக்கின்றன. குட்டையான வால். வாலின் முடிவில் குஞ்சத்தைப் போன்ற உரோமம். இந்தக் குஞ்சம் காற்றிலே அசைந்தாடுகிறது. இந்தக் குதிரைகள் நன்றாக வளர்ந்து வேகமாக ஓடக் கற்றுக்கொண்ட பிறகுதான் உண்மையான குதிரைகளாக முடியும்.
நன்றி:தினமணி
2 comments:
நல்ல தகவல் டிலீப்
//Harini Nathan said...
நல்ல தகவல் டிலீப்//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி Harini
Post a Comment