இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று டர்பனில் நடக்கிறது. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி சாதிக்கும் பட்சத்தில், தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, முதலில் டெஸ்ட் தொடரை (1-1) டிரா செய்தது. பின் "டுவென்டி-20' போட்டியில் வென்று கோப்பை கைப்பற்றியது. தற்போது 5 போட்டிகள் கொண்ட, ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று டர்பனில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.
காயம் காரணமாக சேவக், காம்பிர் ஆகியோர் ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 11 மாதங்களுக்குப் பின், சச்சின் மீண்டும் ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறார். இவர் கடைசியாக கடந்த பிப்ரவரியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான குவாலியர் போட்டியில், இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.
எழுச்சி பெறுவார்களா?
சச்சினுடன் இணைந்து தமிழகத்தின் முரளிவிஜய் துவக்கம் தரவுள்ளார். கடந்த "டுவென்டி-20' போட்டியில் அபாரமாக பேட் செய்த ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, தங்களது திறமைமை மீண்டும் நிரூபிக்கலாம். யுவராஜ் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பின் வரிசையில் கேப்டன் தோனி, யூசுப் பதான் அணியின் ஸ்கோரை உயர்த்த உதவலாம்.
பிரவீண் அவுட்:
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. இடது முழங்கை காயம் காரணமாக பிரவீண் குமார் நாடு திரும்புகிறார். ஜாகிர், ஸ்ரீசாந்த் இன்று விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இதனால் ஆஷிஸ் நெஹ்ரா, முனாப் படேலை கொண்டு, சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் தோனி உள்ளார். சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன், அஷ்வின் கைகொடுக்கலாம்.
பேட்டிங் பலம்:
தென் ஆப்ரிக்க அணிக்கு "ஆல் ரவுண்டர்' காலிஸ் இல்லாதது பெரும் இழப்பு. இருப்பினும், அணியின் கேப்டன் ஸ்மித், டுமினி, ஆம்லா, டிவிலியர்ஸ் போன்றோர், பேட்டிங்கில் சாதிக்க காத்திருக்கின்றனர். இவர்களுடன் இங்ராம், டு பிளசிஸ் ஆகியோரும் உதவலாம். தவிர, சமீபத்தில் தென் ஆப்ரிக்க குடியுரிமை பெற்ற இம்ரான் தாகிர், இன்றைய போட்டியில் முதல் வாய்ப்பு பெறுவார் எனத் தெரிகிறது.
மீண்டும் ஸ்டைன்:
டெஸ்ட் தொடரில் 21 விக்கெட் வீழ்த்தி, இந்திய வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த ஸ்டைன், மீண்டும் மிரட்ட தயாராகியுள்ளார். இவருடன் இணைந்து மார்னே மார்கல், பார்னல் டிசோட்சபே கூட்டணி இந்திய வீரர்களின் ரன்குவிப்புக்கு அணை போடலாம். சுழலில் போத்தா தன்பங்கிற்கு அசத்தலாம்.
தென் ஆப்ரிக்கா ஆதிக்கம்
இரு அணிகள் மோதிய 60 ஒருநாள் போட்டிகளில், தென் ஆப்ரிக்கா 36, இந்தியா 22 ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகளுக்கு முடிவில்லை
* தென் ஆப்ரிக்க மண்ணில் இரு அணிகள் பங்கேற்ற, ஒருநாள் தொடரை இதுவரை இந்திய அணி வென்றதில்லை. கடந்த 1992-93 (2-5), 2006-07 (0-4) என, இரண்டு முறை நடந்த தொடரிலும், மோசமாக தோற்றுள்ளது.
* கடைசியாக இரு அணிகள் பங்கேற்ற 5 போட்டிகளில் 4ல் இந்தியாவும், ஒன்றில் தென் ஆப்ரிக்காவும் வென்றுள்ளன.
* பேட்டிங்கில் இந்திய அணி அதிகபட்சமாக 401/3 (குவாலியர், 2010), தென் ஆப்ரிக்கா 365/2 (ஆமதாபாத், 2010) ரன்கள் எடுத்துள்ளன.
* குறைந்தபட்சமாக இந்திய அணி 91 (2006), தென் ஆப்ரிக்கா 117 (1999) ரன்களுக்கும் சுருண்டன.
டிவிலியர்ஸ் அதிகம்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 54 போட்டிகளில் பங்கேற்ற இந்தியாவின் சச்சின், 1859 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இதில் 4 சதம், 8 அரைசதம் அடங்கும். தென் ஆப்ரிக்கா சார்பில் தற்போதைய டிவிலியர்ஸ் 466 (12 போட்டி) ரன்கள் எடுத்துள்ளார்.
"நம்பர்-1' வாய்ப்பு'
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை, இந்திய அணி வெல்லும் பட்சத்தில், 2வது இடத்திலிருந்து (121 புள்ளி), முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதேநேரம் முதல் மற்றும் 5வது இடத்திலுள்ள ஆஸ்திரேலியா (128), இங்கிலாந்து (112) அணிகள் இடையிலான, ஒருநாள் தொடரின் முடிவைப் பொறுத்தும் "ரேங்கிங்' மாற்றம் அமையும்.
வீரர்களுக்கு நெருக்கடி
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் குறித்து, தென் ஆப்ரிக்க அணி கேப்டன் ஸ்மித் கூறுகையில்,"" எந்த வீரரும் உலக கோப்பை தொடரில் பங்கேற்பதைத் தான் விரும்புவார்கள். இதனால் கிடைக்கும் வாய்ப்பில் சிறப்பாக செயல்பட முயற்சிக்கலாம் என்பதால், எப்போதும் ஒருவித நெருக்கடியுடன் தான் இருப்பார்கள். தவிர, இந்திய துணைக்கண்டத்தில் போட்டிகள் நடப்பதால், வீரர்கள் தேர்வு அதற்கு தகுந்தபடி தான் இருக்கும்,'' என்றார்.
நன்றி தினமலர்
2 comments:
நமக்குதான் வெற்றி.........
//“நிலவின்” ஜனகன் said...
நமக்குதான் வெற்றி........//
ஜெய்.. ஹொ...
Post a Comment