கேப்டன் காம்பிர் சதம், கோஹ்லி அரை சதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்துக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஸ்ரீசாந்த் வேகத்தில் தடுமாறிய நியூசிலாந்து அணி, மீண்டும் ஏமாற்றம் அளித்தது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது போட்டி நேற்று ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் மைதானத்தில் நடந்தது. "டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் காம்பிர், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. காயம் குணமான நிலையில், வெட்டோரி, சவுத்தி ஆகியோர் நியூசிலாந்து அணிக்கு திரும்பினர்.
ஹவ் "அவுட்':
நியூசிலாந்து அணிக்கு, கப்டில், ஹவ் துவக்கம் தந்தனர். ஸ்ரீசாந்த் பந்து வீச்சில் அனல் பறந்தது. இவரது வேகத்தில் வெறும் 5 ரன்களுக்கு அவுட்டானார் ஹவ். அடுத்து வந்த வில்லியம்சன், சற்று நேரம் தாக்குப் பிடித்தார். இவர் (29), முனாப் பந்தில் "கிளீன் போல்டானார்'. ரோஸ் டெய்லர் (15) இந்த முறை சோபிக்க வில்லை.
ஒரு புறம் விக்கெட்டுகள் விழ, துவக்க வீரர் கப்டில் பொறுப்புடன் ஆடினார். இவருடன் இணைந்த ஸ்டைரிஸ் அதிரடி காட்டினார். ஒரு நாள் அரங்கில் 8 வது அரை சதம் கடந்தார் கப்டில். இந்த ஜோடி 3 வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த நிலையில், கப்டில் (70) அவுட்டானார்.
"ஹாட்ரிக்' நழுவல்:
அடுத்து வந்த கேப்டன் வெட்டோரி, ஸ்டைரிசுடன் இணைந்து ரன் குவிப்பில் இறங்கினார். ஒரு நாள் அரங்கில் 26 வது அரை சதம் கடந்தார் ஸ்டைரிஸ். இந்நிலையில் இந்த ஜோடிக்கு முற்றுப் புள்ளி வைத்தார் ஸ்ரீசாந்த். ஆட்டத்தின் 46 வது ஓவரில், ஸ்டைரிஸ் (59), வெட்டோரி (31) இருவரையும் அடுத்தடுத்து அவுட்டாக்கினார். மூன்றாவது பந்தை ஹாப்கின்ஸ் தடுத்து ஆட, "ஹாட்ரிக் விக்கெட்' கைப்பற்றும் வாய்ப்பு நழுவியது. பின்வரிசையில் ஹாப்கின்ஸ் (11*), நாதன் மெக்கலம் (12), மில்ஸ் (13) ஓரளவு ரன் சேர்க்க, 50 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி, 258 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் ஸ்ரீசாந்த் 4 விக்கெட் வீழ்த்தினார்.
நல்ல துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி நல்ல துவக்கம் கண்டது. காம்பிர் அடித்து ஆட, முரளி விஜய் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த நிலையில், வெட்டோரி சுழலில் போல்டானார் முரளி விஜய் (33).
காம்பிர் அசத்தல்:
பின்னர் காம்பிருடன், விராத் கோஹ்லி இணைந்தார். இந்த ஜோடி நியூசிலாந்து பந்து வீச்சை விளாசித் தள்ளியது. முதல் போட்டியில் அசத்திய கோஹ்லி நேற்றும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு நாள் அரங்கில் 9 வது அரை சதம் கடந்தார் கோஹ்லி. மறுமுனையில் மெக்கே பந்து வீச்சில், சூப்பர் பவுண்டரி அடித்த காம்பிர், டெஸ்ட் அரங்கில் 8 வது சதம் கடந்தார். கோஹ்லி 64 ரன்களுக்கு (8 பவுண்டரி) வெளியேறினார். பின்னர் யுவராஜ் கைகொடுக்க, 43 ஓவர் முடிவில் இந்திய அணி 259 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. காம்பிர் 138 (18 பவுண்டரி), யுவராஜ் 16 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை காம்பிர் தட்டிச் சென்றார்.
இவ்வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 2-0 கணக்கில் முன்னிலையில் உள்ளது.
பாக்ஸ் செய்திகள்:
1000 ரன்கள்
நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில், ஒரு நாள் அரங்கில் 1000 ரன்களை கடந்தார். நேற்று 11 ரன்கள் எடுத்த போது இவர், இந்த இலக்கை எட்டினார். இதுவரை 35 போட்டிகளில், இவர் 1059 ரன்கள் எடுத்துள்ளார்.
* நேற்று, 21 ரன்கள் எடுத்த போது, நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி ஒரு நாள் அரங்கில் 2000 ரன்களை எட்டினார். இதுவரை 259 ஒரு நாள் போட்டிகளில், இவர் 2010 ரன்கள் எடுத்துள்ளார்.
கப்டில் குழப்பம்
நியூசிலாந்து வீரர் கப்டில்(70), "அவுட்' தொடர்பாக குழப்பம் ஏற்பட்டது. இவர், அஷ்வின் வீசிய பந்தை அடிக்க, அதனை விக்கெட் கீப்பர் சஹா அருமையாக "கேட்ச்' செய்தார். பின் "ஸ்டம்பிங்' வேறு செய்தார். அம்பயராக செயல்பட்ட இந்தியாவின் ஹசாரே, "கேட்ச்' பிடித்ததற்கு அவுட் கொடுத்தார். அதே சமயம் லெக் அம்பயரான நைஜல் லாங், "ஸ்டம்பிங்' செய்ததற்காக மூன்றாவது அம்பயரிடம் முறையீடு செய்தார். "ஸ்டம்பிங்' படி பார்த்தால் கப்டில் "அவுட்' இல்லை. "கேட்ச்' பிடித்ததன் அடிப்படையில் "அவுட்' என அறிவிக்கப்பட்டார்.
நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் பந்து வீச்சில் மிரட்டினார் ஸ்ரீசாந்த். 46 வது ஓவரை வீசிய இவர், ஸ்டைரிஸ் (59), வெட்டோரி (31) இருவரையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் நியூசிலாந்தின் ரன் குவிப்புக்கு முட்டுக் கட்டை போட்டார். கவுகாத்தியில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியிலும், 46 வது ஓவரை வீசிய ஸ்ரீசாந்த், முதல் இரண்டு பந்துகளில் விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
மேற்கூரை இடிந்தது
நேற்றைய போட்டி நடந்த ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் மைதானத்தின் வடமேற்கு பகுதியில் இருந்த, மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில், 5 பார்வையாளர்கள் காயமடைந்தனர். ஆனால், பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை என மைதான பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஸ்கோர் போர்டு
நியூசிலாந்து
கப்டில் (கே) சகா (ப) அஷ்வின் 70 (102)
ஹவ் (கே) சகா (ப) ஸ்ரீசாந்த் 5 (13)
வில்லியம்சன் (ப) முனாப் 29 (46)
டெய்லர் (கே) கோஹ்லி (ப) யூசுப் 15 (23)
ஸ்டைரிஸ் (கே) சகா (ப) ஸ்ரீசாந்த் 59 (56)
வெட்டோரி (ப) ஸ்ரீசாந்த் 31 (32)
ஹாப்கின்ஸ் -- அவுட் இல்லை- 11 (12)
நாதன் மெக்கலம் -ரன் அவுட் (சகா)- 12 (9)
மில்ஸ் (ப) ஸ்ரீசாந்த் 13 (6)
சவுத்தி -அவுட் இல்லை- 2 (1)
உதிரிகள் 11
மொத்தம் (50 ஓவரில் 8 விக்., இழப்பு) 258
விக்கெட் வீழ்ச்சி: 1-14 (ஹவ்), 2-64 (வில்லியம்சன்), 3-96 (டெய்லர்), 4-161 (கப்டில்), 5-219 (ஸ்டைரிஸ்), 6-219 (வெட்டோரி), 7-243 (நாதன் மெக்கலம்), 8-256 (மில்ஸ்).
பந்து வீச்சு: நெஹ்ரா 9-1-45-0, ஸ்ரீசாந்த் 9-1-47-4, முனாப் 8-0-34-1, அஷ்வின் 10-0-52-1, யுவராஜ் 9-1-48-0, யூசுப் 4-0-23-1, ரெய்னா 1-0-4-0.
இந்தியா
முரளி விஜய் (ப) வெட்டோரி 33 (58)
காம்பிர் --அவுட் இல்லை- 138 (116)
கோஹ்லி (கே) டெய்லர் (ப) மெக்கே 64 (73)
யுவராஜ் -அவுட் இல்லை- 16 (11)
உதிரிகள் 8
மொத்தம் (43 ஓவரில் 2 விக்., இழப்பு) 259
விக்கெட் வீழ்ச்சி: 1-87 (முரளி விஜய்), 2-203 (கோஹ்லி).
பந்து வீச்சு: நாதன் மெக்கலம் 9-0-37-0, மில்ஸ் 7-0-49-0, மெக்கே 7-0-59-1, ஸ்டைரிஸ் 3-0-20-0, வெட்டோரி 8-0-32-1, சவுத்தி 5-0-33-0, வில்லியம்சன் 4-0-29-0.
நன்றி:தினமலர்
0 comments:
Post a Comment