தூய வெள்ளை தாடி, சிவப்பு நிற உடை, அன்பும் கனிவும் நிறைந்த பார்வை, சிரித்த முகம், கை நிறைந்த பரிசுகள் - இந்த உருவத்தைப் பார்த்தவுடன் சின்னக் குழந்தைகள் "கிறிஸ்துமஸ்" தாத்தா என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிடுவார்கள். இன்று வரை, பல நாடுகளிலும் ஒவ்வொரு சிறு குழந்தையும், கிறிஸ்துமசுக்கு முதல் நாள் இரவு அவர்கள் விரும்பும் பரிசுப்பொருளை கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் அல்லது அவர்களது காலுறைக்குள் "சாண்டா க்ளாஸ்" என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வைப்பதாக நம்புகிறார்கள். மேல்நாட்டில், குழந்தைகள் தமக்கு விருப்பமான பரிசுப்பொருள்கள் குறித்து கிறிஸ்துமஸ் தாத்தாவிற்குக் கடிதம் எழுதுவது கூட உண்டு.
இவர் வட துருவத்தில் வசிப்பவர், இவர் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்திய இரவு, பறக்கும் கலைமான்கள் பூட்டிய ஸ்லெட்ஜ் எனப்படும் வண்டியில் வந்து குழந்தைகளுக்குப் பரிசுகள் கொடுப்பார். இவரிடம் நல்ல குழந்தைகள், கெட்ட குழந்தைகள் இவர்கள் குறித்த பட்டியல் இருக்கும். இவர் நல்ல குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் பரிசை அளிப்பார். மோசமான குழந்தைகளுக்குப் பரிசே கொடுக்கமாட்டார் என்றெல்லாம் நிறையக் கற்பனைக்கதைகள் தலைமுறை தலைமுறையாகக் குழந்தைகள் மத்தியில் வழங்கி வருகின்றன.
இந்தக் கிறிஸ்துமஸ் தாத்தா யார்? இவர் வரலாறு என்ன என்பதை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகலத்தில் மூழ்கியிருக்கும் இந்த நேரத்தில் தெரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்தானே?
சான்டா க்ளாஸ் குறித்த பலவிதமான வரலாறுகள் நிலவுகின்றன. முக்கியமாக, செயிண்ட் நிகோலஸ் என்ற பாதிரியாரின் தாக்கமே "சான்டா க்ளாஸ்" என்பது பெரும்பாலாரது கருத்து. இந்த அருளாளர் கி.பி. மூன்றாம் நூற்றண்டில் மிரா என்று பண்டைக்காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய துருக்கி நாட்டில் வாழ்ந்தவர். இவர் குழந்தைகளிடம் மிக்க அன்பாக இருந்தவர் என்றும், பெருந்தன்மையும் கருணையும் நிரம்பியவரான இவர் பல அற்புதங்களை நிகழ்த்தியவர் என்றும் பல விதமான கதைகள் நிலவுகின்றன. இவர் எப்பொழுதும் தம்மிடம் பல பரிசுப்பொருட்களை வைத்திருப்பார் எனவும், திடீர் திடீர் என்று குழந்தைகளுக்குப் பரிசுகள் கொடுப்பது இவருடைய வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளம்பெண்கள், வரதட்சணை கொடுக்க இயலாததால் திருமணமாகாமல் இருக்கவேண்டியிருந்ததையும், இதன் காரணமாக அவர்கள் அடிமைகளாக விற்கப்பட நேரிடும் என்பதையும் அறிந்த இவர், இரவு நேரத்தில் அவர்களது வீட்டின் புகைபோக்கி வழியாக தங்கக் காசுகள் நிறைந்த மூன்று பைகளைப் போட்டதாகவும், அப்பைகள் அப்பெண்கள் தமது வீட்டின் கணப்பின் அருகில் காயப்போட்டிருந்த காலுறைகளில் விழுந்ததாகவும் கதை நீள்கிறது. சிலரோ, அவர் வீட்டு வாசலில் கிடந்த அப்பெண்களின் காலுறை நிறையத் தங்கக்காசுகளைப் போட்டதாகவும் கூறிவருகின்றனர். இதன் காரணமாகவே இன்றும் சில நாடுகளில் குழந்தைகள் தமது காலுறைகளில் கிறிஸ்துமஸ் தாத்தா தாம் விரும்பும் பரிசுகளை நிரப்புவார் என நம்பி வருகின்றனர்.
செயிண்ட் நிகோலஸ் குறித்த இன்னொரு கதையும் பிரபலமானதே! மூன்று சிறுவர்கள் ஒரு நாள் இரவு நேரத்தில் ஒரு பண்ணையில் தங்க இடம் கேட்டு வந்ததாகவும், அந்தப்பண்ணைக்குச் சொந்தக்கார ஒரு கொடிய விவசாயியும் அவனது மனைவியும் அந்த மூன்று சிறுவர்களையும் கொன்று சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துவிட்டதாகவும், அக்கொடுஞ்செயலைத் தமது அதிசயத்திறனால் அறிந்து கொண்ட பாதிரியார் அக்கொடியவர்களைத் தண்டித்து, இறந்த சிறுவர்களை உயிர்ப்பித்ததாகவும் சொல்கிறது அந்தக் கதை.
டச்சுக்காரர்கள் குடியிருப்புகளில் வழங்கி வந்த நம்பிக்கையான செயிண்ட் நிகோலஸ், நெதர்லாந்து நாட்டினரின் சின்டர் க்ளாஸ் (Sinter Klass) பரிசுகள் வழங்குபவர் என்பதும், ஜெர்மன் நாட்டினரது நம்பிக்கையான "ஸான்ட் நிக்கலஸ்" (Sankt Niklaus ), பிரஞ்சு நாட்டினரது "பியர் நோயல்" (இங்கிலாந்து நாட்டின் "கிறிஸ்துமஸ் தந்தை" முதலிய அனைத்து நம்பிக்கைகளும் "செயின்ட் நிகோலஸ்" பாதிரியாரின் அடிப்படையிலேயே உருவானவைதான். அமெரிக்க நாட்டில் குடியேறியவர்கள் தம்முடன் எடுத்துச் சென்ற கலாசாரங்களில், நம்பிக்கைகளில் இந்த "கிறிஸ்துமஸ்" பரிசுகளும் அடங்கும். புதிதாகக் குடியேற்றம் உண்டான நாடான அமெரிக்காவில் எல்லாம் ஒன்று கலந்து, ஸான்டா க்ளாஸ் உருவானார் என்பது ஒரு சாரார் கருத்து. டச்சு நாட்டினரின் "சிண்டர் க்ளாஸ்" வேகமாகக் குழந்தைகளால் உச்சரிக்கப் படுகையில் "சாண்ட்டி க்ளாஸ்" என தொனித்து, பின் "சாண்டா கிளாசாக" நிலை கொண்டுவிட்டது என்பது மற்றொரு சாரார் கருத்து.
சாண்டா கிளாசின் இன்றைய உருவம் பலவேறு மாறுதல்களுக்குப் பிறகு உருவானது. இந்த உருவத்திற்கான வருணனை, 1823ம் ஆண்டில் க்ளெமெண்ட் க்ளார்க் மூர் என்பவர் தமது குழந்தைகளுக்காக எழுதிய ஒரு பாட்டில் இருந்து எடுக்கப் பட்டது. இது "சாண்டா க்ளாஸ் (செயிண்ட் நிகோலஸ்) இரவு நேரத்தில் வருவார். இவர் மகிழ்ச்சியும் வேடிக்கையும் நிறைந்தவர். எட்டுக் கலைமான்களால் இழுக்கப்படும் வண்டியில் வருபவர். கிறிஸ்துமசுக்கு முதல் நாள் இரவு குழந்தைகளுக்குப் பரிசுகளுடன் வருவார்" என்றெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லும் விதமாக எழுதப்பட்ட பாடல். இதன் அடிப்படையிலும், வாஷிங்டன் இர்விங் என்பவர் எழுதிய "செயின்ட் நிகோலஸ்" என்ற நூலின் அடிப்படையிலும் கி.பி 1863ம் ஆண்டு முதல் தாமஸ் நஸ்ட் என்ற ஓவியர் சான்டா கிளாசின் உருவங்களை தமது பத்திரிக்கையில் விதவிதமாக வரைந்து வந்தார். இதன் பிறகும் பல்வேறு பத்திரிகைகளில், சான்டா க்ளாஸின் பல விதமான தோற்றங்கள் தொடர்ந்து கலைஞர்களால் உருவாக்கப் பட்டு வந்தன. கடைசியாக 1930ம் ஆண்டு இன்று புகழ் பெற்று விளங்கும் சிவப்பு நிறக்கோட்டு, சிவப்புத் தொப்பி, கையில் பரிசுகள் நிரம்பிய மூட்டையுடன் கூடிய கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவம் நிலை பெற்றது.
கிறிஸ்துமஸ் தாத்தா உண்மையோ, மாயையோ? ஆரம்பத்தில் சொன்ன மாதிரி, நல்ல குழந்தையாக இருந்தால்தான் பரிசு என்ற விதியின் மூலம் நல்ல பழக்க வழக்கங்களை சிறுவர் சிறுமியர் மத்தியில் கொண்டு வரவும், குழந்தைகளைப் பண்டிகை நாளன்று அவர்களை அதிசயத்தில் ஆழ்த்தவும் பெற்றோர்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவின் பெயரைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று கொள்ளலாம். தாமே தம் பிள்ளைகளுக்குப் பரிசு தருவதை விட, கிறிஸ்துமஸ் தாத்தாவின் பரிசு என்று சொல்லி பரிசளிப்பது பெற்றோருக்கும் அதிக மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. ஏனெனில் குழந்தைகளின் ஆனந்தம் தானே பெற்றவர்களுக்குப் பேரின்பம்??
நன்றி:ஈழநேசன்
4 comments:
arumai nanba!
Happy Christmas Dileep :)
//சகியே! said...
arumai nanba!//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகி
//Harini Nathan said...
Happy Christmas Dileep :)//
Thank you Harini...........
Post a Comment