அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

நதிகள் எவ்வாறு உருவாகின்றது ?
மழை பெய்யும்போது தெருவில் நீர் வழிந்தோடுவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி நீர் ஓடுவதைப் பார்த்தே, நதி எப்படி உருவாகிறது என்று நீங்கள் அறிந்துகொள்ளலாம். மழை நீர் ஒன்று சேர்ந்து சிறுசிறு ஓடைகளாகின்றன. இந்த ஓடைகள் மற்றும் சில ஓடைகளுடன் சேர்ந்து ஒரு பெரிய நீரோட்டமாகிறது. இதேபோலத்தான், மலைகளிலும் குன்றுகளிலும் பெய்யும் மழை நீர் பல சிறு ஓடைகளாக ஓடிப் பிறகு ஓன்றாகச் சேர்ந்து ஒரு பெரிய நதியாக உருவாகிறது.நதிகள் பெரும்பாலும் மலைகளிலேயே உற்பத்தியாகின்றன. சில சமயம் நீர் ஊற்றுகளும் ஆறாக ஓடுவது உண்டு. இமயமலைபோன்ற பகுதிகளில் சூரிய வெப்பத்தினால் பனிக்கட்டிகள் உருகி, நீர் நதியாகப் பாய்கிறது. ஆகவே, பனிக்கட்டிகளும் நதிகளை உருவாக்குகின்றன.


பெரிய நதிகளுடன் வந்து கலக்கும் சிறு ஆறுகளுக்குத்தான் துணையாறுகள் என்று பெயர். பெரிய நதிகளிலிருந்து சில ஆறுகள் கிளையாகப் பிரிந்து செல்வதும் உண்டு. இந்த    ஆறுகளைக் கிளையாறுகள் என்கிறோம். நதியின் நீர் எந்தப் பகுதியிலிருந்து வடிந்து வருகிறதோ அந்தப் பகுதிக்கு வடி நிலம் என்று பெயர். நதிநீர் விரைவாக ஓடுவதற்கு நிலம் சரிவாக இருக்க வேண்டும். சரிவில் ஓடி வரும்போது நதிநீர், நிலப்பரப்பை அரித்துக்கொண்டே வரும். அரிக்கப்பட்ட பகுதி பள்ளத்தாக்கு எனப்படும். நதிநீர் வேகமாக ஓடும் இடத்தில் பள்ளத்தாக்கு ஆழமாக இருக்கும். நதிநீர் மெதுவாக ஓடும் இடத்தில் பள்ளத்தாக்கு அகலமாக இருக்கும். சரிவு திடீரென அதிகமாகும்போது நீர்வீழ்ச்சிகள் உண்டாகும்.


நதிநீர் பெரும்பாலும் கலங்கலாகவே இருக்கும். ஏனெனில், அதில் மண் மிகுதியாகக் கலந்திருக்கும். நதிநீர் வேகம் குறைந்து மெதுவாகச் செல்லும்போது மண், ஆற்றின் அடியில் படிந்துவிடும். இதற்கு வண்டல் என்று பெயர். வெள்ளம் பெருக்கெடுத்தால் நதிநீர்  கரைகளை உடைத்துக்கொண்டு சமநிலங்களில் பாயும். வெள்ளம் வடியும்போது, சமநிலங்களில் வண்டல்மண் படியும். வண்டல் மண் படிந்த பகுதி மிகவும் செழிப்பாக இருக்கும். (பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது உழவு நிலங்களில் உள்ள வளமான மண் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டுவிடுவதும் உண்டு.) நதி கடலை அடையும் இடத்திற்கு கழிமுகம் என்று பெயர். கழிமுகத்தில் வண்டல் மண் படிவதால் ஏற்படும் செழிப்பான பகுதியைக் கழிமுகத்தீவு என்பார்கள்.இந்தியாவில் ஓடும் நதிகளை இமய நதிகள் என்றும், தீபகற்ப நதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய நதிகள் இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக் காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டி உருகிக் இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை ஜீவநதிகள் என்று கூறுகிறார்கள். தீபகற்ப நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, வையை, தாமிரபருணி முதலியவை தீபகற்ப ஆறுகளில் முக்கியமானவை.
மிகப் பழைய நாகரிகங்கள் யாவும் நதிகளை ஒட்டியே வளர்ந்திருக்கின்றன. 


ஏனெனில், மக்கள் வாழ்க்கைக்குக் தேவையான பல பொருட்களும் நதிக் கரைகளில் எளிதில்         கிடைத்தன. முக்கியமாக, நதிநீர் குடி நீராகப் பயன்படுகிறது. நீர்ப்பாசனத்திற்கு உதவுகிறது. போக்குவரத்திற்கு நதி மிகவும் உதவிகரமாக இருக்கிறது. மீன்களும் நதிகளில் அதிகமாகக் கிடைக்கும். நதிநீரைக் கொண்டு மின்சாரமும் உற்பத்தி செய்கிறார்கள். இவ்வாறு நதிகள் மக்களுக்குப் பல வழிகளில் பயன்படுகின்றன. உலகத்தின் முக்கியமான பல நகரங்கள் நதிக் கரைகளில்தான் உள்ளன.


வியட்நாமின் "ஹானோயி' நகரம் சிவப்பு நதியின் கரையில் இருக்கிறது. தாய்லாந்தின் "பாங்காக்' நகரம் சாவோப்ராயா நதிக் கரையில் இருக்கிறது. இராக்கின் "பாக்தாத்' நகரம் டைக்ரிஸ் நதிக் கரையில் இருக்கிறது. எகிப்தின் "அலக்ஸன்டிரியா' நகரம் நைல் நதிக் கரையில் இருக்கிறது. எகிப்தின் "கெய்ரோ' நகரமும் நைல் நதிக் கரையில்தான் இருக்கிறது. "ஹாங்காங்' நகரம் பேல் நதியின் கரையில் இருக்கிறது. ரஷ்யாவின் "மாஸ்கோ' நகரம் மோஸ்கவா நதியின் கரையில் இருக்கிறது.


சிரியாவின் "டமாஸ்கஸ்' நகரம் பராதா நதியின் கரையில் இருக்கிறது. இந்தோனேஷியாவின் "ஜகார்த்தா' நகரம் கிலிவுங் நதியின் கரையில் இருக்கிறது. "லண்டன்' நகரம் தேம்ஸ் நதியின் கரையில் இருக்கிறது. ஸ்பெயினின் "மாட்ரிட்' நகரம் மான்ஸநாரஸ் நதியின் கரையில் இருக்கிறது. அயர்லாந்தின் "டப்லின்' நகரம் லிபி நதியின் கரையில் இருக்கிறது. "பாரீஸ்' நகரம் ஸீன் நதியின் கரையில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் "மெல்போர்ன்' நகரம் யாரா நதியின் கரையில் இருக்கிறது.


உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி வெனிஸ்வேலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சியாகும்.  வடகிழக்கு ஆப்பிரிக்காவில் ஓடும் நைல் நதியை ஒன்பது நாடுகள் சார்ந்திருக்கின்றன. ஆசியாவில் உள்ள நீளமான நதி சீனாவின் யாங்ட்ஸி நதி. இது உலகில் உள்ள நீளமான நதிகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதன் நீளம் 6300 கிலோ மீட்டர். இதற்கு எழுநூறுக்கும் அதிகமான கிளை ஆறுகள் உள்ளன. உலகின் நீளமான நதிகளில் நான்காவது இடத்தில் இருக்கும் நதி, அமெரிக்காவில் உள்ள மிஸ்ஸிஸிப்பி நதி. இதற்கு 42 கிளை ஆறுகள் உள்ளன.உலகத்தில் மொத்தமுள்ள நதி நீரில் ஐந்தில் ஒரு பங்கு, தென் அமெரிக்காவில் ஓடும் அமேசான் நதியில் உள்ளது. இந்த நதி 6448 கிலோமீட்டர் நீளமுடையது. இரண்டாயிரத்திற்கும் அதிகமான மீன் இனங்கள் இங்கே இருக்கின்றன. உலகத்திலேயே பெரிய நதி அமேசான் நதிதான் என்று சிலரும், நைல் நதிதான் என்று சிலரும் சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. பெரிய நதி என்று சொல்வதன் மூலம் நாம் எதைக் குறிப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியமானது.


மிகவும் கடைசியாக நடத்திய கணக்கெடுப்பின்படி, நைல் நதியின் நீளம் 6670 கிலோ மீட்டர். அமேசான் நதியின் நீளம் 6448 கிலோ மீட்டர். சில ஆவணங்களில் அமேசான் நதியின் நீளம் 6750 கிலோ மீட்டர் என்றும் காணப்படுகிறது. அமேசான் நதி கடலை நெருங்கும்போது அதற்கு ஒரு கிளை நதி உண்டு. இது பாரா எனும் மற்றொரு நதியைச் சென்றடையும். இந்த நதிவழி, அட்லாண்டிக் கடலை அடையும் தூரத்தைக் கணக்கிடும்போதுதான், அமேசானுக்கு 6750 கிலோ மீட்டர் நீளம் வருகிறது.


ஆனால், அந்த நதி அமேசானின் கிளை நதி அல்ல. நீரியலின்படி அது, டோக்காட்டின்ஸ் பகுதியில் இருக்கிறது. எனவே, அமேசான் நதி அட்லாண்டிக்கை அடைவது, தோ-நோர்த்  எனும் கனால் வழியாகத்தான். அந்த வழியில் உள்ள நீளத்தைத்தான், அமேசான் நதியின் சரியான நீளமாகக் கொள்ள வேண்டும். அமேசான், 6448 கிலோ மீட்டர் நீளமுடையது என்று சொல்வதற்கு இதுதான் காரணம்.
ஆனால், மிகப் பெரிய நதி எது என்று முடிவு செய்வதற்கு நாம் நதிகளின் நீளத்தை மட்டும் கணக்கிலெடுப்பது அறிவியல் பூர்வமானது அல்ல. நதி உட்கொள்கின்ற நீரின்     அளவு, நதியின் பரப்பளவு, நதி பயணிக்கும் பகுதியின் நீளம் எனும் அம்சங்களையும் நாம் பரிசீலிக்க வேண்டும். 


இந்தத் தன்மைகளின்படி ஆராய்ந்து பார்க்கும்போது அமேசான் நதிதான் முதலிடத்தில் இருக்கிறது. அமேசான் நதியின் வழியாக சாதாரண நேரங்களில் ஒரு வினாடிக்கு 42,00,000 கன மீட்டர் தண்ணீர் செல்கிறது. வெள்ளப் பெருக்கு ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் இது வினாடிக்கு 70,00,000 கன மீட்டராக அதிகரிக்கிறது.


நைல் நதி உட்பட மற்ற எந்த நதியிலும் இந்தளவு நீர்ப்போக்கு ஏற்படுவது கிடையாது. பரப்பளவிலும் அமேசான் நதிதான் முதலிடத்தில் இருக்கிறது. இதன் பரப்பளவு ஏறத்தாழ 27,20,000 சதுர மைலாகும். உலத்தில் மற்ற எல்லா நதிகளையும்விட இந்த நதிதான் அதிகமான கிளை நதிகளைக் கொண்டிருக்கிறது. 15,000 கிளை நதிகள் உண்டு இதற்கு. நீளத்தைப் பற்றிய விஷயத்தில் விவாதம் இருந்தாலும் உலகத்திலேயே பெரிய நதி அமேசான் நதிதான் என்பதில் சந்தேகம் இல்லை.நீங்கள் மேட்டூர் அணை, பவானி சாகர் அணை, சாத்தனூர் அணை முதலான பல அணைகளில் ஒன்றையாவது பார்த்திருக்கக்கூடும். எதற்காக இந்த அணைகளைக் கட்டியிருக்கிறார்கள் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் மற்றொரு முறை தெரிந்து கொள்ளுங்கள். நதிகளில் சில பருவங்களில்தான் வெள்ளம் பெருக்கெடுத்து வரும்.


மழையில்லாத காலங்களில் நதிகளில் தண்ணீர் மிகவும் குறைந்துபோகும். வெள்ளம் பெருகி வரும்போது அதை அப்படியே விட்டுவிட்டால் அது கடலில் போய்க் கலந்துவிடும். அந்த வெள்ளம் விவசாயம் முதலான தேவைகளுக்குப் அதிகமாகப் பயன்படாமல்போய்விடும். அந்த வெள்ளத்தைத் தடுத்து ஓரிடத்திலே தேக்கி வைத்துவிட்டால், நதியில் தண்ணீர் குறைகிற காலங்களில், தேக்கி வைத்த நீரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா? அணைகளால் கிடைக்கும் ஒரு நன்மை இது.


அணைகள் பல வகைகளில் நமக்குப் பயன்படுகின்றன. நதியிலிருந்து வயல்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய்கள், சில இடங்களில், நதியின் மட்டத்தைவிட உயரமாக இருக்கும். அப்போது, நதியில் தண்ணீர் குறையுமானால் கால்வாய்களில் தண்ணீர் ஏறாது. அதனால் வயல்களுக்கு தண்ணீர் கிடைக்காது.


இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு, நதியின் நீர் மட்டத்தை உயர்த்தி, கால்வாயில் எப்போதும் தண்ணீர் ஓடச் செய்வார்கள். இதற்காகவும் நதியின் குறுக்கே அணை கட்டுவது உண்டு. நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள மக்களுக்குக் குடி தண்ணீர் வழங்கவும் நதிகளில் அணைகள் கட்டப்படுகின்றன.
மழைக் காலங்களில் நதிகளில் வெள்ளம் பெருகும்போது நதியின் கரைகள் உடைந்துபோவதுண்டு. அப்போது கரையோர ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடும். நதியின் ஏற்ற இடத்தில் அணை கட்டித் தண்ணீரைத் தேக்கிவிட்டால் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாது. தேங்கிய தண்ணீர் பாசனத்திற்கும் பயன்படும்.


நதிகளில் பெரிய வெள்ளம் வரும்போது, தண்ணீரின் வேகம் மிக அதிகமாக இருக்கும். நதிக்கரையில் உள்ள நிலங்கள் அரிக்கப்பட்டுவிடும். உழவு நிலங்களில் உள்ள வளமான மண் ஆற்றில்போய்விடும். அதனால் நிலம் விவசாயத்திற்குப் பயன்படாமல் போய்விடும். இப்படி மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காகவும், அணைகள் கட்டித் தண்ணீரின் வேகத்தைக் குறைக்க வேண்டியுள்ளது.
அணையின் அடியில் தண்ணீரின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். மதகின் கதவைத் திறந்தால் தண்ணீர் மிகவும் வேகமாக வெளியே பாயும். அதைக்கொண்டு பெரிய சக்கரங்களைச் சுழலவிட்டு மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள்.


இப்படிப் பல நோக்கங்களுடன் அணைகளைக் கட்டுகிறார்கள். அணையைக் கட்ட வேண்டிய இடத்தின் அமைப்பு, நதியின் வேகம், அருகில் கிடைக்கும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கு ஏற்றவாறு அணையை அமைப்பார்கள். அணைகளை முக்கியமாக மண்ணாலும், கல்லாலும், சிமென்டுக் காங்கிரீட்டாலும் கட்டுகிறார்கள்.


உலகில் கட்டப்பட்டுள்ள அணைகளில் மிகவும் உயரமானது சுவிட்சர்லாந்தில் உள்ள மெவாய்சின் அணை ஆகும். அதன் உயரம் 777 அடி.


நன்றி தினமலர்

Post Comment


7 comments:

sivatharisan said...

நல்ல படிக்க வேண்டிய தகவல் நன்றி பகிர்வுக்கு

மணிபாரதி said...

Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


www.ellameytamil.com

மணிபாரதி said...

இப்பகுதியில் செய்திகள், தொழில்நுட்பம், தமிழ் வரலாறு, தமிழ் சினிமா, நகைச்சுவை, கதை, கவிதை, சினிமா பாடல்கள் மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இங்கே கிடைக்கும்...

www.ellameytamil.com

Jana said...

நதிமூலம் பார்க்கக்கூடாது என்பார்கள். எனினும் தங்கள் பதிவு பாராட்டப்படவேண்டிய ஒன்று. தொடர்ந்தும் அறிவியல் சார்ந்த
பதிவுகளை தயங்காமல் பதிவியடுங்கள்

டிலீப் said...

//sivatharisan said...
நல்ல படிக்க வேண்டிய தகவல் நன்றி பகிர்வுக்கு//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா....

டிலீப் said...

நன்றி மணிபாரதி

டிலீப் said...

//Jana said...
நதிமூலம் பார்க்கக்கூடாது என்பார்கள். எனினும் தங்கள் பதிவு பாராட்டப்படவேண்டிய ஒன்று. தொடர்ந்தும் அறிவியல் சார்ந்த
பதிவுகளை தயங்காமல் பதிவியடுங்கள்//

உங்கள் ஊக்கம் எனக்கு இன்னும் ஆர்வத்தை தூண்டுகிறது அறிவியல் சம்பந்தமாக எழுதவதற்கு...
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜனா அண்ணா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.