அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


தொல்லுயிரியல் என்றால் மிகவும் தொன்மையான காலத்திலிருந்த (மிகப் பழங்காலத்திலிருந்த) விலங்குகளைப் பற்றிய விஞ்ஞானம் என்று அர்த்தம்.

எல்லா நாடுகளிலும் சொல்லப்படுகின்ற தொல்கதைகளில் மிகவும் ஆச்சரியமான உயிரினங்கள் நிறைந்திருக்கின்றன.

பயங்கரமான பறக்கும் நாகங்கள், பெரிய கடற்பாம்புகள், ஒரு பூனையைத் தூக்குவதுபோல ஒரு யானையைத் தூக்கிக்கொண்டு பறக்கக்கூடிய ராட்சசப் பறவைகள் முதலியவற்றை இந்தத் தொல்கதைகளில் நாம் சந்திக்கிறோம். இன்று நம் காடுகளில் அல்லது ஆழமான கடல்களில் அல்லது வெளிநாடுகளில்கூட இத்தகைய பயங்கரமான பிராணிகளை நாம் பார்க்க முடியாது.


அப்படியானால், இந்தக் கதைகளை நாம் நம்ப வேண்டுமா? ஆமாம், நாம் இவற்றை நம்ப வேண்டும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இந்தக் கதைகளில் விவரிக்கப்படுவதைப்போன்ற பிராணிகள் நெடுங்காலத்திற்கு முன்பு இந்தப் பூமியில் வசித்தன. அப்போது மனிதன் தோன்றியிருக்கவில்லை.

இவை இன்று உயிரோடிருந்தால்...

இந்த இராட்சசப் பிராணிகள் இன்றைய நவீன நகரத்தின் தெருக்களுக்குள் வந்தால் என்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். இவை ஒவ்வொன்றும் பயங்கரமான டாங்குகள், பிரம்மாண்டமான இயந்திரங்கள் மற்றும் பெரிய விமானங்களைப்போன்ற உருவங்களைக் கொண்டவை.
இவை வந்தால் நகரங்களில் போக்குவரத்து நின்றுவிடும். பேருந்து மற்றும் பெரிய வாகனங்கள் தலைகீழாகப் புரண்டுவிடும். மின்சாரக் கம்பங்கள் பிடுங்கி எறியப்படும். மின்கம்பிகள் அறுந்துவிடும், அழகான பூங்காக்கள் அழிந்துவிடும். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நீங்கள் நிறையத் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். 

நல்ல வேளையாகஇதுபோன்ற ஆபத்துகள் நமக்கு ஏற்படப்போவதில்லை. ஏனென்றால், இதுபோன்ற பெரிய விலங்குகள் பல கோடி வருடங்களுக்கு முன்பே அழிந்துவிட்டன. ""பாறையில் எழுதப்பட்டிருக்கும் தொடர்கதை''யிலிருந்துதான் நாம் அவற்றைப் பற்றி அறிந்துகொள்கிறோம்.

""பாறையில் எழுதப்பட்டிருக்கும் தொடர்கதை'' என்றால் என்ன?

இந்தப் பூமியைத்தான் ""பாறையில் எழுதப்பட்டிருக்கும் தொடர்கதை'' என்று கூறுகிறோம். ஒரு ஆற்றின் செங்குத்தான கரையில் அல்லது தெருக்களில் தோண்டப்பட்டிருக்கும் ஆழமான குழிகளில் காணப்படுகின்ற மணல் மற்றும் களிமண் அடுக்குகள் இந்தத் தொடர்கதையின் பக்கங்களாகும். அடுக்குகள் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றனவோ அந்தஅளவு அவை அதிகமான வயதானவை. 

மிகவும் மேற்பகுதியைச் சேர்ந்த அடுக்குகள் மனிதனின் வரலாற்றை எடுத்துக்காட்டுகின்றன. அதாவது, பூமிக்கடியில் பல்வேறான அடுக்குகள் இருக்கின்றன அல்லவா? அந்த அடுக்குகளில் எல்லாம் பூமியின் பல கால கட்டங்களின் அடையாளங்கள் பாறைகளில் பல்வேறு புதை படிவங்களாக பதிந்திருக்கின்றன. அந்தப் புதை படிவங்களை ஆராய்ந்துதான் விஞ்ஞானிகள் பல அரிய உண்மைகளைக் கண்டுபிடிக்கிறார்கள். பூமிக்கடியில் பல்வேறு காலகட்டங்களில் பாறைகளில் உருவான புதை படிவங்களைத்தான் பூமியின் தொடர்கதை என்கிறோம்.

நகரங்களின் நடுப்பகுதியில் உள்ள சிமெண்டுத் தெருக்களின் கீழே உள்ள படிவாக, கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட கற்பாதையின் படிவங்கள் கிடைக்கலாம். அவற்றிற்கும் கீழே, அதற்கும் முற்காலத்தில் பலகைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மரப் பாதையின் படிவங்கள் கிடைக்கலாம். இங்கே, அந்த மரப்பாதை அமைக்கப்பட்ட பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு நாணயத்தையோ, அல்லது துருப்பிடித்த வாளையோ நாம் கண்டுபிடிக்கக்கூடும். 

இவற்றிற்கும் கீழேதான், பாறையில் எழுதப்பட்டிருக்கும் தொடர்கதை ஆரம்பமாகிறது. இங்கே மணல் கரடுமுரடான சரளைக் கல்லாக, மண்ணும் களிமண்ணும் கற்பாளங்களாக மாறியிருக்கின்றன. இங்கே மனிதனைப் பற்றிய எந்த அடையாளமும் கிடையாது. ஆயினும் இந்தப் பக்கங்கள் கற்பனைக் கதையைப் போலச் சுவாரஸ்யமானவை.

கற்களால் ஆன பக்கங்கள்

""பாறையில் எழுதப்பட்டிருக்கும் தொடர்கதை'' நம்பமுடியாத அளவிற்குக் கனமானது. மேலே உள்ள பக்கங்களுக்கும் (பாறைப் புதைபடிவங்களுக்கும்), கீழே உள்ள பக்கங்களுக்கும் (பாறைப் புதைபடிவங்களுக்கும்) இடையே பல கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. இந்தப் பக்கங்கள் மிகவும் கனமானவை. இவற்றைக் கையால் புரட்டுகிற அளவுக்கு மனிதனுக்குப் பலம் கிடையாது. ஆனால் இயற்கை மனிதனுக்கு உதவி செய்கிறது. 

மலைகளிலும் மலை அடிவாரங்களிலும் பாறை அடுக்குகள்  இயற்கையின் பல்வேறு காரணங்களால் கசங்கிச் சுருண்டு தலை கீழாக இருக்கின்றன. காற்றும் மழையும் பாறைகளில் ஆழமான பிளவுகளை ஏற்படுத்தியிருப்பதால் மிகப் பழமையான இப் பாறைப் பக்கங்கள் வெளியே தெரிகின்றன. ஒரு காலத்தில் இங்கேதான் மனிதர்கள் மிகப் பெரிய எலும்புகளைப் பார்த்தார்கள். அதன் பிறகுதான் ராட்சச மிருகங்களைப் பற்றிய தொல் கதைகள் ஏற்பட்டன.

"பாறையில் எழுதப்பட்டிருக்கும் தொடர்கதை'' எதைப் பற்றிச் சொல்கிறது?

ஒரு வழவழப்பான கல்லின் மேல் ஒரு இலையின் படம் தெரிகிறது. அதன் ஒவ்வொரு கோடும் அப்படியே இருக்கிறது. அந்தப் படத்தை அழிப்பதற்கு முயற்சி செய்து பார்த்தாலும் அது அழியாது, ஏனென்றால் அது மிகவும் பழங்காலத்தைச் சேர்ந்த காட்டிலிருந்த இலையின் புதைபடிவம். மஞ்சள் நிறத்திலிருக்கும் அம்பரை நாம் ஊடுருவிப் பார்க்க முடியும். மிகப் பழமையான காலத்தில் மரத்திலிருந்து வடிந்த பிசினின் இறுகிய வடிவமே அது.

அந்த அம்பருக்குள் இருக்கும் கொசுவைப் பாருங்கள். பல கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பு அந்தக் கொசு அந்தப் பிசினில் சிக்கிக்கொண்டிருந்திருக்க வேண்டும்.


காக்கை அல்லது கோழிக்குஞ்சின் கால் தடங்களைப்போல சில கோடுகள் தெரியும் பாறைப் புதைபடிவம் உண்டு. ஒரு யானையின் கால் தடத்தைவிடப் பெரிதான அடையாளம் பதிந்த பாறைப் பரப்பும் உண்டு. ஆனால், ஒரு கால் தடத்திற்கும் அடுத்த கால் தடத்திற்கும் பல மீட்டர் தூரம் இருக்கிறதே!
பழங்காலத்தில் இங்கே யார் நடந்திருப்பார்கள்?

சுண்ணாம்புப் பாறை மீது தெரியும் நட்சத்திர மீன், கடல் முள்ளெலிகள், கடற்செடிகளுக்கு நடுவே கும்பல் கும்பலாக நீந்திக்கொண்டிருக்கும் சிறுமீன்கள்போன்றவையெல்லாம் கடலின் அடிப்பகுதியிலிருந்து கிடைத்த புதை படிவங்களாகும்.  ஊர்ந்து செல்லும் ஒரு பெரிய மிருகத்தின் தலை பாறையில் தெரிவதுபோன்ற படிவம்போன்று, இந்தத் தொடர்கதையில் பயங்கரமான படங்களும் உண்டு.

"பாறையில் எழுதப்பட்டிருக்கும் தொடர்கதை''யைப் படிப்பவர்கள் யார்?

இந்தத் தொடர் கதையை விஞ்ஞானிகளும், தொல்லுயிரியலாளர்களும்தான் படிக்கிறார்கள் (கண்டுபிடித்து ஆராய்கிறார்கள்). அவர்கள் வெகு தூரத்திற்கும் அப்பால், இந்தப் பழமையான பக்கங்கள் பூமியின் மேற்பரப்பில் தெரிகிற மலைகளுக்கும் பாலைவனங்களுக்கும் போகிறார்கள்.

சில சமயங்களில்  ""பாறையில் எழுதப்பட்டிருக்கும் தொடர்கதையை''ப் படிப்பது (பாறையில் பதிந்திருக்கும் தடங்களை கண்டுபிடித்து ஆராய்வது) மிகவும் கடினமான காரியம். இந்த ஆராய்ச்சியாளர்கள் பார்ப்பதற்கு முன்பே, சூரியனும் காற்றும்  வெளியே தெரியும் அந்த அடையாளங்களைச் சேதப்படுத்தியிருக்கும்.

அந்தக் கற்பக்கம் உடைந்துபோயிருக்கும். விலங்குகளின் எலும்புகள் ஒன்றோடொன்று கலந்துவிட்டிருக்கும். பழமையான சங்குகள், பூச்சிகள், தாவரங்களின் தடயங்கள் எங்கோ வீசி எறியப்பட்டிருக்கும். இத்தகைய பக்கத்தை ஆராய்வதற்கு விஞ்ஞானிகள் மிகவும் பாடுபடவேண்டியிருக்கிறது.
சில சமயங்களில் தொல்லுயிரியலாளர் ஒரே ஒரு எலும்பை மட்டும் வைத்துக்கொண்டு அந்த விலங்கை நிர்ணயித்துவிடுவார். 

ஏனென்றால் ஒவ்வொரு விலங்கின் உடலமைப்பைப் பற்றியும் அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் எல்லா எலும்புகளையும் அதனதன் இடங்களில் சேர்த்து வைத்து, அந்த விலங்கின் உருவம் எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்லிவிடுவார். ஆனால் அந்த விலங்கை யாருமே கண்ணால் பார்த்ததில்லை. ஆனால் அந்த விலங்கு எங்கே, எப்படி வாழ்ந்தது என்பதை அவர் சொல்ல முடியும்.

தொல்லுயிரியலின் அவசியம் என்ன?

பொக்கிஷம் அல்லது மர்மப்பேழை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குச் செல்ல, கதாநாயகர்களுக்கு கற்பனை விலங்குகள் வழிகாட்டுவதைக் கட்டுக்கதைகளில் பார்க்கிறோம். இந்தப் பாறைகளில் தெரிகின்ற விலங்குகளும், பூமியின் அடியில் புதைந்திருக்கும் செல்வத்தை அடைவதற்கு நமக்கு வழி காட்டுகின்றன. இந்தத் தொடர்கதையைப் படிக்கத் தெரியாதவர்களுக்கு, இந்தப் பக்கங்கள் எல்லாமே ஒன்றுபோலத்தான் இருக்கின்றன.

கல்லாக மாறிப்போன இலைகளையும் சங்குகளையும் தொல்லுயிரியல் விஞ்ஞானி கவனமாக ஆராய்கிறார். பிறகு ""இந்த இடத்தில் தோண்டுங்கள்''என்று கூறுகிறார். அங்கு நிலக்கரியோ எண்ணெயோ கிடைக்கலாம்.  அவை கிடைக்கும் இடங்களைக் கண்டுபிடிப்பதற்கு  புதைபடிவங்கள் உதவி செய்கின்றன. எண்ணெயும், நிலக்கரியும் நமக்கு மிகவும் அவசியம் அல்லவா? சில புதைபடிவங்கள் நிலக்கரி இருக்கும் அடுக்குகளிலும், வேறுசில புதைபடிவங்கள் எண்ணெய் இருக்கும் பிரதேசங்களிலும் கிடைக்கும்.


நமக்கு முன்பு இருந்தவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் மிகவும் விரும்புகிறோம். இந்தப் பூமி ஒரு காலத்தில் எப்படி இருந்தது? அப்போது எப்படிப்பட்ட விலங்குகள் வாழ்ந்தன? அவற்றின் தோற்றம் எத்தகையது? தொல்லுயிரியல் இந்தக் கேள்விகளுக்கு பதில் தருகிறது.

"பாறையில் எழுதப்பட்டிருக்கும் தொடர்கதை''யைப் பற்றி...

இந்தத் தொடர்கதையில் நான்கு அத்தியாயங்களை தொல்லுயிரியல் விஞ்ஞானிகள் படித்திருக்கிறார்கள். மேலே இருக்கிற முதல் அத்தியாயம் புது யுகத்தைப் பற்றியது. தங்களுடைய குட்டிகளுக்குப் பாலூட்டி வளர்க்கின்ற விலங்குகள் அப்போது பூமியில் வசித்தன. இவை உருவ அமைப்பில் இன்றைய விலங்குகளை ஒத்திருந்தன.

முதல் அத்தியாயத்திற்குக் கீழே இருக்கிற இரண்டாவது அத்தியாயம் நடு யுகத்தைப் பற்றியது. அப்போது ராட்சச உருவங்களைக்கொண்ட ஊர்கின்ற பிராணிகள் பூமியில் ஆட்சி செய்தன.இன்னும் கீழே இருக்கிற மூன்றாவது அத்தியாயம் தொல் யுகத்தைப் பற்றியது. அப்போது பூமியில் விலங்குகளும் பறவைகளும் வசிக்கவில்லை; பெரும் உருவங்களைக் கொண்ட  தவளைகளும் மீன்களும் கடல் தேள்களுமே வசித்தன.


எல்லாவற்றிற்கும் கீழே இருக்கிற நான்காவது அத்தியாயம் ஆதி யுகத்தைப் பற்றியது. அப்போது பூமியில் யாருமில்லை. கடலில் மட்டும் கண்ணுக்குத் தெரியாத, சிறிய, ஊடுருவிப் பார்க்கக்கூடிய உயிர்கள் வசித்தன.

"பாறையில் எழுதப்பட்டிருக்கும் தொடர்கதை''யிலுள்ள அதே வரிசைக்கிரமப்படி விலங்குகள், ஊர்வன, பறவைகள், தாவரங்களைப் பற்றி இந்தத் தொடரில் நீங்கள் படிப்பீர்கள். இன்று நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் விலங்குகளைப்போன்று அன்றைக் கிருந்த விலங்குகளைப் பற்றி முதலில் எழுதப்பட்டிருக்கிறது. ஆதி யுகத்தைச் சேர்ந்த விலங்குகளையும் தாவரங்களையும் பற்றிக் கடைசியில் எழுதப்பட்டிருக்கிறது.

நன்றி தினமணி

Post Comment


2 comments:

Harini Nathan said...

ம் இங்க எல்லாம் தொடர்கதையா ?
நல்லாதான் இருக்கு.
தகவலுக்கு நன்றி சகா :)

டிலீப் said...

//Harini Nathan said...
ம் இங்க எல்லாம் தொடர்கதையா ?
நல்லாதான் இருக்கு.
தகவலுக்கு நன்றி சகா :)//

வாழ்க்கையே ஓர் தொடர்கதை lol
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.