இரசியாவின் 6ம் இவான் என்ற சார் மன்னனின் சில எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியலாளர்கள் அறிவித்துள்ளனர்.ஆறாம் இவானின் உடல் இரசியாவின் வடக்கு ஆர்ஹாங்கெல்ஸ்க் பகுதியின் கல்மகோரி என்ற கிராமத்தில் புதைக்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரொமானொவ் குடும்பத்தில் ஆறாம் இவானின் உடல் மட்டுமே எங்கு புதைக்கப்பட்டது என்பது தெரியாத புதிராக இருந்து வந்தது. ஆறாம் இவான் இரண்டு மாதக் குழந்தையாக இருந்தபோது மன்னனாக முடிசூடினார். 1741 ஆம் ஆண்டில் 404 நாட்களின் பின்னர் இவன் பதவியில் இருந்து அகற்றப்பட்டான். தனது வாழ்நாளின் பெரும் பகுதியை இவன் சிறையிலேயே கழித்து வந்தான்.
1740 ஆம் ஆண்டில் அன்னா என்ற அரசி இறந்ததை அடுத்து இரண்டு மாத இவான் அண்டனோவிச் ஆறாம் இவான் என்ற பெயரில் முடி சூடினான். முதலாம் பீட்டரின் மகள் எலிசபெத் டிசம்பர் 1741 ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றினாள். இவானும் அவனது தாயார் அன்னா மற்றும் அவளது ஏனைய பிள்ளைகள் அனைவரும் கல்மகோரி என்ற இடத்துக்கு அனுப்பப்பட்டனர். அங்கு இவான் ஏனைய குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு அடுத்த 12 ஆண்டுகள் அங்கு சிறைப்படுத்தப்பட்டான். சிறைக் காவலாளிகள் மட்டுமே அவனைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இவானின் இருப்பிடத்தைப் பற்றிய வதந்திகள் நாடெங்கும் பரவவே 1756 ஆம் ஆண்டு இரகசியமாக சென் பீட்டர்ஸ்பேர்க் நகருக்கு அருகே சிசல்பேர்க் என்ற சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டான். ”பெயர்” எதுவும் இல்லாமல் அவன் அங்கு சிறை வைக்கப்பட்டான். சிறை அதிகாரிகளுக்குக் கூட அவன் யாரென்பது தெரிந்திருக்கவில்லை. இயற்கை ஒளி அற்ற அறை ஒன்றில் அடைக்கப்பட்டான். 1762 ஆம் ஆண்டில் இரண்டாம் கத்தரீன் அரசியான பின்னர் அவன் சங்கிலிகளால் கட்டப்பட்டே முழு நேரமும் சிறை வைக்கப்பட்டான்.
1764 இல் இவானின் ஆதரவாளர்கள் அவனை மீட்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இவான் அவனது காவலாளர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டான். அவனது உடல் அங்கேயே புதைக்கப்பட்டதாக அப்போது நம்பப்பட்டது.
இவானின் தந்தையின் உடல் பாகங்களைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலேயே தொல்லியலாளர்கள் இவானின் எலும்புகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
மாஸ்கோவில் உள்ள மருத்துவத் தடையவியல் கழகத்தில் மேற்கொள்ளபட்ட ஆரம்பச் சோதனைகள் இவ்வெலும்புகள் ஆறாம் இவானுடையதெனத் தெரிவித்தன. இவானின் சகோதர்களின் உடல்கள் டென்மார்க்கில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதால் இதனை மேலும் உறுதிப்படுத்துவதற்காக இரசிய அரசின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர்.
1918 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட கடைசி சார் மன்னன் இரண்டாம் நிக்கலாசின் எச்சங்கள் 1991 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இது பின்னர் அரச மரியாதைகளுடன் 1998 ஆம் ஆண்டில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அடக்கம் செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment