தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதன் முதலாவது அரையிறுதியில் வென்ற சென்னை அணி, ஏற்கனவே பைனலுக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் தெற்கு ஆஸ்திரேலியா, வாரியர்ஸ்(தென் ஆப்ரிக்கா) அணிகள் மோதின. டாஸ் வென்ற வாரியஸ் அணி கேப்டன் டேவி ஜேக்கப்ஸ், பேட்டிங் தேர்வு செய்தார்.
வாரியர்ஸ் அணி துவக்கத்தில் தடுமாறியது. டெய்ட் வீசிய முதல் ஓவரில் பிரின்ஸ்(0) வெளியேறினார். இதற்கு பின் டேவி ஜேக்கப்ஸ், இங்ராம் இணைந்து அதிரடியாக ஆடினர். தெற்கு ஆஸ்திரேலியா பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இவர்கள், சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசினர். இதையடுத்து, வாரியர்ஸ் அணி 5 ஓவரில் 50 ரன்களை எட்டியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில், ஜேக்கப்ஸ்(61) அவுட்டானார். சிறிது நேரத்தில் இங்ராம்(46) பெவிலியன் திரும்ப, ரன் வேகம் குறைந்தது.
போயே மிரட்டல்:
பின் அனுபவ பவுச்சர்(25) அதிவிரைவாக ரன் எடுத்து நிலைமையை சீராக்கினார். கிறிஸ்டியன் வீசிய கடைசி ஓவரில் நிக்கி போயே அடுத்தடுத்து 2 சிக்சர், 1 பவுண்டரி அடித்தார். 6வது பந்தில் கிருஷ் ஒரு இமாலய சிக்சர் அடிக்க, ஒட்டுமொத்தமாக 23 ரன்கள் கிடைத்தது. வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. போயே(22), கிருஷ்(7) அவுட்டாகாமல் இருந்தனர்.
துவக்கம் மோசம்:
கடின இலக்கை விரட்டிய தெற்கு ஆஸ்திரேலிய அணி திணறல் துவக்கம் கண்டது. டிசோட்சோபே வீசிய போட்டியின் 4வது ஓவரில் இரட்டை "அடி' விழுந்தது. 2வது பந்தில் டேனியல் ஹாரிஸ்(8) அவுட்டானார். 5வது பந்தில் கிளிங்கர்(13) நடையை கட்டினார். தெற்கு ஆஸ்திரேலிய அணியின் எழுச்சிக்கு வித்திட்ட இவர்கள் விரைவில் வெளியேறியதால், பெரும் சிக்கல் ஏற்பட்டது. மானவ்(8),போர்காஸ்(10) ஏமாற்றினர். போராடிய பெர்குசன் 71 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். இறுதியில் தெற்கு ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இதையடுத்து வாரியர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.
மீண்டும் சென்னையுடன் பலப்பரீட்சைபைனலுக்கு இம்முறை "ஏ' பிரிவில் இடம் பெற்ற சென்னை கிங்ஸ், வாரியர்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன. "பி' பிரிவு அணிகள் ஏமாற்றம் அளித்துள்ளன. லீக் சுற்றில் ஏற்கனவே சென்னை அணி, வாரியர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இந்த அனுபவம் இன்றைய பைனலில் கைகொடுக்கும்பட்சத்தில் சென்னை அணி எளதில் கோப்பை கைப்பற்றலாம். வாரியர்ஸ் அணியை பொறுத்தவரை உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு பக்கபலமாக அமையலாம்.
0 comments:
Post a Comment