செவ்விந்தியர்கள் மிகவும் வீரமானவர்கள். அதுமட்டுமல்ல, அவர்களுக்கென்று தனி கலாசாரமும், பண்பாடும் இருந்தன. அதாவது, அவர்கள் பெயரளவில்தான் ஆதிவாசிகள். மற்றபடி நாகரிகமானவர்கள்தான். அவர்கள் அலைந்து திரிகிற நாடோடி வாழ்க்கையை மிகவும் விரும்பினார்கள். விவசாயம்தான் முக்கியத் தொழில்.
உண்மையில், இந்தியாவைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் கொலம்பஸ் கடற்பயணம் புறப்பட்டார். ஆனால், அவர் அமெரிக்காவைச் சென்றடைந்தார். இது நடந்தது 1492-இல். தான், இந்தியாவிற்குத்தான் வந்திருக்கிறோம் என்று உறுதியாக நம்பினார் கொலம்பஸ்.
அங்கிருந்த மக்களையெல்லாம் இந்தியர்களாகவே கருதினார். இந்தியர்கள் என்று கொலம்பஸôல் அழைக்கப்பட்ட அந்த மக்கள் பிற்பாடு, செவ்விந்தியர்கள் (RED INDIANS) என்று அறியப்பட்டார்கள். செவ்விந்தியர்களுக்கு இந்தியாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களது உடல் நிறத்தைப் பற்றிய விஷயத்திலும் அப்படித்தான்.
செவ்விந்தியர்களின் நிறம் சிவப்பல்ல. அவர்களை அழைக்கும் பெயர் அப்படி ஆகிவிட்டது அவ்வளவுதான். செவ்விந்தியர்களின் தலை இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும். அதனால், சில சாகசப் பயணிகள் அவர்களை "ரெட் ஸ்கின்ஸ்' (சிவப்புத் தோலுடையவர்கள்) என்று அழைத்தார்கள். இந்தியன் என்ற பெயரும், சிவப்பும் சேர்ந்து கடைசியில் "செவ்விந்தியர்கள்' என்ற பெயர் ஏற்பட்டது. இப்போது, மேற்குப் பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் பொதுவாக செவ்விந்தியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
அமெரிக்காவின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று முக்கியமான இயற்கை வளங்களையெல்லாம் கண்டுபிடித்தது செவ்விந்தியர்கள்தான். இதற்காக, உலகமே அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. செவ்விந்தியர்கள்தான் தங்கம், செம்பு, வெள்ளி முதலான வளங்களைக் கண்டுபிடித்தார்கள். அவற்றை நோக்கி வெள்ளைக்காரர்களின் கவனத்தைத் திருப்பியதும் செவ்விந்தியர்களே.
அவர்கள்தான் முதன்முதலாக ரப்பர் சேகரித்தார்கள். புகையிலை விவசாயம் செய்தார்கள். உணவு விஷயத்தில் வெள்ளைக்காரர்களுக்கு அவர்கள் கொடுத்த மிகப் பெரிய கொடை சோளமும், உருளைக்கிழங்கும். இவற்றையெல்லாம் எப்படி விவசாயம் செய்வது என்றும் அவர்கள், குடியேறிய வெள்ளைக்காரர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்.
மிளகு, அன்னாசிப் பழம், நிலக்கடலை ஆகியவற்றை ஐரோப்பியர்களுக்கு செவ்விந்தியர்களே அறிமுகப்படுத்தினார்கள். இந்த உணவுப் பொருட்களைப் பற்றி 1492-க்கு முன்புவரை ஐரோப்பியர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.
கலைகளின் மீது மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள் செவ்விந்தியர்கள். அருமையான கைவினைப் பொருட்கள் செய்யவும் கற்றிருந்தார்கள். உயர்ந்த நாகரிகம் உடைய மக்களாக இருந்தார்கள். செவ்விந்தியர்களுக்கிடையே நிறைய உட்பிரிவுகளும், நிறைய மொழிகளும் இருக்கின்றன. உணவு, உடை, தொழில் ஆகியவற்றில் உட்பிரிவுகளிடையே பெரிய வித்தியாசங்கள் உண்டு.
மீன் பிடித்தும், வேட்டையாடியும் அழகான எளிமை வாழ்க்கை நடத்தியவர்கள் செவ்விந்தியர்கள். பெரிய நாடுகளை உருவாக்கியவர்களும் உண்டு. பிற்பாடு இவையெல்லாம் அழிந்துபோயின என்றாலும், செவ்விந்தியர்களின் பரம்பரை இன்றும் நிலைத்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான நதிகளுக்கும், நகரங்களுக்கும் இப்போதுள்ள பெயர்களில் பலவும் செவ்விந்தியர்கள் வைத்தவைதான்.
ஏறத்தாழ 400 வருடங்களுக்கு முன்பு, வடக்கு அமெரிக்காவில் நடந்தது இது. அன்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை புல்மேடுகள் இருந்தன. அதில், கருமேகங்கள் இறங்கி வந்ததைப்போல காட்டெருமைகளின் பெரிய மந்தை நடந்து செல்லும். இந்தப் புல் மேடுகள் அவற்றின் சொந்தப் பிரதேசம். அவற்றின் பின்னால் நிறைய மனிதர்கள் செல்வார்கள். அவர்கள்தான் செவ்விந்தியர்கள்.
அமெரிக்காவின் ஆதி குடிகள். திடீரென்று அந்தப் பெரிய மந்தையினிடையே ஒரு சிறிய மிருகம் வந்துவிட்டால், ஒட்டுமொத்தக் காட்டெருமைகளும் அந்தச் சிறிய மிருகத்திற்கு வழி விட்டு ஒதுங்கி நிற்கும். அவ்வளவு சாதுவான பிராணிகள் இவை. ஒரு மனிதன் இந்தக் காட்டெருமைகளுக்கு இடையே மாட்டிக் கொண்டுவிட்டால், சிறு கீறல்கூடப் படாமல் வெளியே வந்துவிட முடியும்.
செவ்விந்தியர்களின் வாழ்க்கையின் ஆதாரம் இந்தக் காட்டெருமைகள்தான். உணவு, உடை, ஆயுதங்கள், சமையலறைக் கருவிகள், சிறிய தோணிகள் இப்படி எல்லாவற்றிற்கும் அவர்கள் காட்டெருமைகளைத்தான் சார்ந்திருந்தார்கள். வாழ்க்கைக்காக மட்டுமே அவர்கள் காட்டெருமைகளை வேட்டையாடினார்கள். புல் மேடுகளில் காணப்படும் ஓநாய்களிடமிருந்து காட்டெருமைக் கன்றுகளைக் காப்பாற்றினார்கள்.
அமெரிக்காவில் புதிதாகக் குடியேறிய வெள்ளைக்காரர்கள், தங்களுடைய உதவியும் இரக்கமும் தேவையில்லாமல் வாழ்கின்ற செவ்விந்தியர்கள் மீது கோபம்கொண்டார்கள். அவர்களைத் துரத்துவதற்கு ஒரு கொடூரமான வழியைக் கையாண்டார்கள். அது என்ன தெரியுமா? காட்டெருமைகளை ஒன்றுவிடாமல் அழிப்பதுதான். இந்த வழியில் செவ்விந்தியர்களைத் தோற்கடித்துவிட முடியும் என்று நினைத்தார்கள் அவர்கள். எனவே, வெள்ளைக்காரர்கள் பரந்த அளவில் காட்டெருமைகளை சுட்டுக் கொல்லத் தொடங்கினார்கள்.
வெள்ளைக்காரர்களின் முயற்சி வெற்றியடைந்தபோது, சுய மரியாதை மிக்க செவ்விந்தியர்கள் குளிராலும், பசியாலும் செத்துவிழத் தொடங்கினார்கள்.
அதே நேரம், அமெரிக்காவின் தெற்கு பாகங்களில் அப்போதும் காட்டெருமைகள் அமைதியாக வாழ்ந்தன. ஆனால் அப்போது, சிகாகோவிலிருந்து சான்பிரான்சிஸ்கோ வரை இருப்புப்பாதை அமைக்கத் தொடங்கினார்கள்.
அது காட்டெருமைகள் முற்றிலும் அழிவதற்குக் காரணமானது. இருப்புப்பாதைத் தொழிலாளிகளுக்கு மலிவான விலையில் மாமிசம் கொடுப்பதற்காகத்தான் முதலில் காட்டெருமைகளை வேட்டையாடத் தொடங்கினார்கள். பிறகு, காட்டெருமைகளை கூட்டம் கூட்டமாகக் கொல்வது என்பது ஒரு பொழுதுபோக்காக மாறியது. அமைதியாக, யாருக்கும் எந்தத் தொந்தரவும் செய்யாமல் நடந்து செல்கிற இந்தப் பரிதாபமான பிராணிகளை மனிதர்கள், சும்மா ஒரு சுவாரஸ்யத்திற்காக மட்டுமே கொல்லத் தொடங்கினார்கள்.
இருப்புப்பாதை அமைக்கும் பணி முடிந்து, அதில் ரயில் ஓடத் தொடங்கியது. அப்போது, ரயிலின் உள்ளேயே அமர்ந்து காட்டெருமைகளைச் சுட்டு மகிழலாம் என்ற நிலை ஏற்பட்டது. ரயிலை, காட்டெருமை மந்தை உள்ள இடத்தில் நிறுத்துவார்கள். வெள்ளைக்காரர்கள் சன்னல் வழியே காட்டெருமைகளைச் சுடுவார்கள். எதிர்க்க முடியாமல், தற்காத்துக்கொள்ளத் தெரியாமல், ஓடிச் செல்லவும் அவகாசம் இல்லாமல் அவை நின்ற நிலையிலேயே செத்து விழும்.
ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, அமெரிக்காவில் ஒரே ஒரு காட்டெருமைகூட மிச்சமில்லை. அமெரிக்காவில் குடியேறிய வெள்ளைக்காரர்கள், இந்தக் கால அளவிற்குள் சற்றும் கருணையற்று லட்சக்கணக்கான காட்டெருமைகளைக் கொன்றொழித்தார்கள். பார்த்தீர்களா நண்பர்களே, மனித மனதின் கொடூரம் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது!
0 comments:
Post a Comment