அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

முரளியின் கடைசி ‌பேட்டி



மாரடைப்பு காரணமாக முரளியின் மூச்சு நின்று ஒரு நாள் கடந்து விட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலத்துக்கும் மேல் தமிழ் சினிமாவில் நிலைத்திருந்த நடிகர் முரளி இதுவரை 99 படங்களில் நடித்திருக்கிறார்.


கடைசியாக நடித்த பானா காத்தாடி படத்தில் கூட எம்.பி.பி.எஸ். மாணவராக நடித்து, காலேஜூக்கு போகணும் என்று சொல்லிவிட்டு தியேட்டரில் குபீர் சிரிப்பை வரவழைத்த முரளி தமிழ் சினிமா பிரபலங்களிலேயே முற்றிலும் வித்தியாசமான குணாதியங்களைக் கொண்டவர்.

முரளியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஒருபுறமென்றால்… அவரது மறைவுச் செய்தியை நம்ப முடியவில்லை என்று சொல்பவர்கள் இன்னொருபுறம். அவர்களில் பெரும்பாலானவர்கள் சமீபத்தில் விஜய் டிவி காபி வித் அனு நிகழ்ச்சியில் நடிகர் முரளியும், அவரது மகன் அதர்வாவும் கலந்து கொண்டு பேசியதை நினைவு கூர்ந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியில் முரளி அளித்த பேட்டி அவரது கடைசி பேட்டியாக அமைந்து விட்டது. அந்த பேட்டியில் முரளி மிகவும் இயல்பாக, கலகலப்பாக பேசிய விதம் அனைவரையும் கவர்ந்திருந்தது. கண் முன்னே சிரித்துப் பேசிய அந்த 46 வயது இளைஞர் இன்று நம்மிடையே இல்லை.
முரளியின் கடைசி பேட்டி விவரம் வருமாறு:-
எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். சூட்டிங்கிற்கு போகும்போது கூட கிரிக்கெட் பேட், ‌‌டென்னிஸ் பேட்டெல்லாம் எடுத்துட்டு போயிடுவேன். வீட்டில் இருக்கும்போது என் பசங்களோட கிரிக்கெட்தான் விளையாடிட்டு இருப்பேன். சின்ன வயசுல இருந்தே விளையாட்டுல ரொம்ப ஆர்வம் இருந்துச்சி. தெருவில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடுவேன். எல்லோரும் சபிச்சிட்டு போவாங்க. எப்ப, எந்த வீட்டு கண்ணாடி உடையும்னு தெரியாது. ஆனா உடைஞ்ச கண்ணாடிக்கு பதிலா புது கண்ணாடி வாங்கி மாட்டி கொடுத்துடுவோம். ஆனாலும் எங்களை பார்த்தாலே திட்டுவாங்க. கதாநாயகன் ஆனதுக்கு பிறகு அதே ரோட்டில் கிரிக்கெட் விளையாடியிருக்கோம். சின்ன வயசுல எங்களை திட்டுனவங்க கூட… தம்பி நீ நல்லா நடிச்சிருக்கன்னு பாராட்டியிருக்காங்க. நீயெல்லாம் இப்படி வருவேன்னு நான் எதிர்பார்க்கலன்னுகூட ஒரு சிலர் சொல்லியிருக்காங்க. என்னை திட்டுனவங்க, மரியாதையா பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்துது.

தமிழ்நாடு மக்கள் ரொம்ப நல்லவங்க. நடிகர்கள் மீது ரொம்ப மரியாதை ‌‌‌வெச்சிருக்காங்க. அவங்கக்கிட்ட நாம ஒரு நடிகரா நிற்கக்கூடாதுங்க. அவங்கக்கிட்ட நானும் மனிதன்ங்கிற மாதிரிதான் நிற்கணும். அப்படி நின்னா எந்த தொந்தரவும் இருக்காது. நான் நடிகனா ரோடுல நின்னாத்தான் தனித்துவம் ஆயிடும். நான் மக்களோடு மக்களா நிற்பேன். எங்க ஏரியா ரோடுல இருக்குற மரங்கள்ல்லாம் நான்தான் வெச்சிருக்கேன். ஞாயிற்றுக்கிழமைகள்ல மரத்தை வெட்டுவேன். களை எடுப்பேன். தோட்ட ‌வேலைகள்லயும் எனக்கு ஆர்வம் அதிகம். நான் ரொம்ப யதார்த்தமான வாழ்க்கையை விரும்புறேன். என் வீட்டில் சினிமா சம்பந்தப்பட்ட எந்த போட்டோவும் இருக்காது. சினிமா வேறு. குடும்பம் வேறு.

என்னோட அப்பா டைரக்டர். இங்கே கே.பாலசந்தர் சார் மாதிரி கன்னடத்துல என்னோட அப்பா பெரிய ‌டைரக்டர். அவரோட படங்கள்ல அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணினேன். நான் 8ம் வகுப்பு பெயில் ஆயிட்டேன். அப்ப இருந்தே அசிஸ்டண்ட் டைரக்டரா ஒர்க் பண்ண ஆரம்பிச்சிட்‌‌டேன். எனக்கு டைரக்டர் ஆகணும்னுதான் ஆசை. அப்பா படத்துல நடிக்குற சின்னச் சின்ன கேரக்டர்களுக்கெல்லாம் நான்தான் டயலாக் சொல்லிக் கொடுப்‌பேன். அந்த டயலாக்கை நைட் பேசிப் பார்ப்பேன். அதை பார்த்த என் அப்பா… நீ ஏன் ஹீரோவா நடிக்கக் கூடாதுன்னு கேட்டார். தெலுங்குல வெளியான பூவிலங்கு படம் செம ஹிட் ஆச்சு. அதை பார்த்த கே.பாலசந்தர் சார், பூவிலங்கு படத்தை தமிழ்ல எடுத்து உன் மகனை ஹீரோவா போடுவோம்னு அப்பாகிட்ட கேட்டாரு. அமீர் ஜான் சார் டைரக்ஷன்ல எடுத்தாங்க. என்னோட வரப்பிரசாதமே இசைஞானி இளையராஜாதான். முதல் படத்தில் இருந்தே என்னோட எல்லா படங்களையும் பாடல்கள் சூப்பர் ஹிட்டா இருக்கும். அதுக்கு காரணம் இளையராஜா சார்தான்.

பூவிலங்கு வெற்றி பெற்றதால எனக்கு அடுத்தடுத்த படங்கள்ல நடிக்கணும்னு ஆர்வம் வந்துச்சி. அதுவும் நல்ல படங்கள்ல நடிக்கணும் ஆசைப்பட்டேன். வெறும் கமர்ஷியல் படங்கள்ல நடிக்கிறதை நான் விரும்பல. குண்டுசட்டிக்கிட்ட நாலு பைட்… நாலு சாங்னு இல்லாம ஒரு கருத்துள்ள படங்கள்ல நடிக்கணும் நினைச்சேன். அதே மாதிரி பெண்மைக்கு முதலிடம் கொடுத்துத்தான் நான் நடிச்சிருப்பேன். எந்த இடத்துலயும் டபுள் மீனிங் டயலாக்கோ, விரசமான டயலாக்கோ, ஆபாசமோ, கவர்ச்சி ஓவராவோ நான் பண்ணுனதே இல்‌ல. என்னோ‌ட படம் பார்த்தீங்கன்னா சேனலே மாத்தத் தேவையில்ல. ஆரம்பத்துல இருந்து கடைசி வரை முரளி படம்னா குடும்பத்தோட இருந்து பார்க்கலாம்.

நான் எதுவா இருந்தாலும் என் அப்பாகிட்ட கேட்க மாட்‌டேன். என் அம்மாதான் எனக்கு எல்லாமே. அதே மாதிரிதான் இப்ப என் பசங்க இருக்காங்க. எல்லாத்தையும் அம்மாகிட்டதான் கேட்பாங்க. நான் நடிகன் ஆனாலும் என்னோ‌ட பிரண்ட்ஸ் மாறலை. ராஜா, கந்தா, நந்தா, வினய்னு ஆறேழு பிரண்ட்ஸ் இருக்காங்க. அவங்க எல்லாருமே இன்னிக்கும் என்னை பார்த்தால் ஒரு ஹீரோவா பார்க்க மாட்டாங்க. அவங்கதான் ரொம்ப கமெண்ட் பண்ணுவாங்க. ஓவரா அழுகாத‌டா… நீ நடிச்ச படத்தை பார்க்க நாங்க ஒரு பக்கெட்டை தூக்கிட்டு வர வேண்டியிருக்குன்னு ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க.

இப்ப என் மகனும் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சுட்டான். இதுல ஒரு ஆச்சர்யமான விசேஷம் என்னன்னா… 1985 சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சார் தயாரிப்பாளர், மணிரத்னத்தின் முதல் படம், இசைஞானி இளையராஜாவின் இசை. அது ரொம்ப ஹிட் கூட்டணியா இருந்தது. அடுத்தடுத்து நிறைய ஹிட் படங்கள்ல இந்த கூட்டணி தொடர்ந்தது. இப்ப என் மகன் நடிச்சிருக்குற பானா காத்தாடி படத்தை தயாரிச்சிருக்கிறதும் சத்யஜோதி பிலிம்ஸ்தான். தியாகராஜன் சாரோட வாரிசுகள்தான் செந்தில் தியாகராஜன் – அர்ஜூன்தான் தயாரிப்பாளர். இளையராஜா சாரின் வாரிசு யுவன்ஷங்கர் ராஜாதான் இச‌ை. இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியா இருக்கிறது.

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இதயம் படத்தில் இடம்பெற்ற பொட்டு வெச்ச வட்ட நிலா பாட்டுதான். அந்த பாட்டை எத்தனை த‌டவை கேட்டாலும் சலிக்காது. உன்‌மையான காதலை சொல்ல முடியாமல் தவிக்கிற தவிப்பை நல்லா சொல்லுற பாட்டு. டான்ஸ்னு எடுத்துக்கிட்டா அதர்வா நல்லா டான்ஸ் பண்றாரு. எனக்கு டான்ஸ் ஆடவே தெரியாது. நான் மிகப்பெரிய டான்சரும் கிடையாது. முகபாவனையை வைத்து சமாளிச்சிட்டு போயிடுவேன்.

அந்த காலத்துல எனக்கு நாலே புரொடியூசர்தான். தியாகு சார், சிவசக்தி பாண்டியன், காஜா பாய், ஆர்.பி.சவுத்ரி இவங்கதான் எனக்கு புரொடியூசர்ஸ். இன்னிக்கு இருக்குற ட்ரெண்ட் அந்த மாதிரி இல்ல. ஒரு படம் பண்ணிட்டா, அடுத்த படத்தில் அதிக சம்பளம் வாங்கணும்னு நினைக்கிறாங்க. அதனால முந்தைய பட தயாரிப்பாளரை விட்டுட்டு அடுத்த தயாரிப்பாளருக்கு ஜம்ப் பண்ணிடுறாங்க. அப்படி போகக் கூடாது. பணத்துக்காக குதிச்சி குதிச்சி போயிடுறாங்க. பணத்துக்காக காத்திருக்கணும். அது நம்மை ‌தேடி வரும்வரை காத்திருக்கணும்.

இவ்வாறு முரளி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.



Part 1

Part 2


Part 3


Part 4





Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.