அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

பேட்ஃசின் போலியொப்புரு


படிமம்:H.W. Bates.JPG

சில உயிரினங்கள் வேறு வலிய உயிரினத்திற்கான அடையாளங்களைப் போலியாகப் பெற்றுத் தம்மைக் காத்துக்கொள்ளும் தன்மைக்குப் பேட்ஃசின் போலியொப்புரு(அல்லது பேட்ஃசின் நெட்டாங்கு (Batesian mimicry) அல்லது பேட்ஃசின் பொய்யுரு) என்று பெயர். இத்துறையில் ஆய்வு செய்த ஆங்கில இயற்கையியலாளர் என்றி பேட்ஃசு (Henry Bates) என்பவர் பெயரால் இவ்விளைவு அறியப்படுகின்றது. இவர் பிரேசில் நாட்டின் மழைக்காடுகளில் கள ஆய்வுகள் செய்தபொழுது இதனைக் கண்டுபிடித்தார். பிறிதொரு வலிய உயிரினத்தின் அடையாளங்களைப் போலியொப்பாகப் பெற்று கோண்மாக்களிடம் (வேட்டையாடும் எதிரிகளிடம்) இருந்து தப்பும் தன்மை ஒரு படிவளர்ச்சி வெளிப்பாடு என்று கருதப்படுகின்றது.

உயிரினங்களில் அறியப்படும் படிவளர்ச்சி நெட்டாங்குகளில் பேட்ஃசின் பொய்யுருக்களையே மிகுதியாக ஆய்ந்துள்ளனர். தீவிளைவு கொண்ட இரு உயிரினங்கள் ஒன்றாகப் பயன்பெறும் அடையாள ஒற்றுமையான முல்லரின் பொய்யுரு இவ்விளைவிலிருந்து சற்று மாறுபட்டது. இவ்விரண்டு வகை போலியொப்புருத் தன்மைகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட விளைவு, ஒரு கோண்மாவோ ஒட்டுண்ணியோ இடர்தரா உயிரினம் ஒன்றை ஒத்துத் தோன்றும் கடும் நெட்டாங்கு ஆகும்.

என்றி வால்டர் பேட்ஃசு (Henry Walter Bates) (1825–1892) என்ற ஆங்கில இயற்கையியலாளர் ஆல்ஃவிரடு அரசல் வாலேசு என்ற அறிஞருடன் இணைந்து தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் 1848-ம் ஆண்டுவாக்கில் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். 1852-ல் வாலேசு நாடு திரும்பினார். ஆனால், பேட்ஃசு அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கி இருந்து கள ஆய்வுகளை மேற்கொண்டார். தன் ஆய்வுக்காக இத்தோமினே (குமட்டல் சுரப்பி கொண்டவை), நீளிறகிகள்(Heliconiinae) ஆகிய குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சி இனங்களைச் சேகரித்து வந்தார். அவற்றைத் தத்தமது தோற்ற ஒற்றுமை அடிப்படையில் ஒழுங்குபடுத்த முயன்றபோது பல முரண்பாடுகளைக் கண்டார். 

வெளித்தோற்ற அளவில் வேறுபடுத்திக் காண இயலாத அளவுக்கு ஒற்றுமை கொண்டிருந்த இனங்களைப் பார்த்தால் அவை ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத பண்புகளைக் கொண்ட இனங்களாக இருந்தன. இங்கிலாந்து திரும்பியதும் அவர் தான் கண்டறிந்ததின் அடிப்படையில் அமைந்த ஒப்புப்போலிப் (போலியொப்புருப்) பண்புக் கருத்தை முன்வைத்து இலண்டன் இலின்னேயியசுச் சங்கக் கூட்டத்தில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை 1861-ம் ஆண்டு நவம்பர் 21-ம் நாளன்று படித்தார். அக்கட்டுரை 1862-ம் ஆண்டு 'Contributions to an Insect Fauna of the Amazon Valley' என்ற பெயரில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து தனது அமேசான் கள ஆய்வில் கண்டவற்றைப் பற்றி, விரிவாக "அமேசான் ஆற்றைப் பற்றி ஒரு இயற்கையியலாளன்" (The Naturalist on the River Amazons) என்ற தலைப்பில் நூலாக எழுதினார். அவரது இந்த கண்டுபிடிப்புகளும் கணிப்புகளும் நெடிய விவாதங்களுக்கு வித்திட்டன.
பேட்ஃசு நெருங்கிய மரபுத் தொடர்பு இல்லாத இனங்களிடையே அமைந்துள்ள தோற்ற ஒற்றுமை ஒரு கோண்மா எதிர்ப்புத் தகவமைவு என்ற கருத்தை முன்வைத்தார். மேலும், சில இனங்கள் வியத்தக்க அளவுக்கு பளிச்சிடும் நிறங்களையும் கொண்டு, ஏதோ தன்னைப் பிடிக்க வரும் கோண்மாக்களைச் சீண்டிப் பார்ப்பது போல மெதுவாகப் பறப்பதையும் சுட்டிக் காட்டினார். இத்தகைய பட்டாம்பூச்சிகள் பறவைகளுக்கும் பிற பூச்சித்தின்னிகளுக்கும் உண்ணுதற்கு உகந்தவையாக இல்லாமல் இருக்கக் கூடும் என்று அவர் கருதினார். இதே அடிப்படையிலேயே இவ்வினங்களைப் போன்ற போலித்தோற்றம் கொண்ட பிற இனங்களும் தமது நிற அமைப்பைப் பெற்றிருக்கலாம் என்ற வாதத்தை அவர் முன்வைத்தார். அந்தப் போலிகள் குமட்டல் தன்மையையோ நச்சுத்தன்மையையோ பெற்றிருக்க வேண்டியதில்லை.

படிமம்:Batesplate ArM.jpg
என்றி வால்டர் இவ்விளைவை விளக்கும் விதமாகச் சேகரித்த பட்டாம்பூச்சிகள்
இந்த விளக்கம் ஆல்ஃவிரடு அரசல் வாலேசும் சார்லசு டார்வினும் அந்நேரம் முன்வைத்திருந்த படிவளர்ச்சிக் கோட்பாட்டுடன் பொருந்தி இருந்தது. இவ்விளக்கம் இயல்பில் காணப்படாத எந்த ஒரு சக்தியையும் சார்ந்திராததால் படிவளர்ச்சியை எதிர்த்தவர்களின் எதிர்ப்பைச் சந்தித்தது. அதுவரை கேலிக்காக மாந்தர் ஒருவரைப்போல மற்றொருவர் செய்து காட்டும் பகடிக்கூத்தை மட்டும் குறித்து வந்த mimicry (மிம்மிக்ரி) என்ற சொல் செடிகளின் பண்புகளையும் விலங்குகளின் பண்புகளையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படத் தொடங்கியது. 

படிமம்:Tamil Lacewing2 before.jpg
இந்த அடிக்கருத்தைக் கொண்டு வந்தவர் என்ற முறையில் இவ் ஒப்புப்போலிப்பண்புக்கு பேட்ஃசின் பெயர் சூட்டப்பட்டது. வேறு பல நெட்டாங்குகள் இப்போது கண்டறியப்பட்டிருந்தாலும் மிகுதியாக அறியப்படுவது பேட்ஃசின் நெட்டாங்கு அல்லது அழகச்சே (போலியொப்புரு) ஆகும். பலர் நெட்டாங்கு என்றாலே பேட்ஃசின் நெட்டாங்கு மட்டும் எனப் பிழையாகக் கருத இடமிருந்தாலும், பேட்ஃசே மேலும் பல நெட்டாங்குகளை ஆய்ந்து சொல்லியுள்ளார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

தம்மை உண்ண வரும் கோண்மாக்களிடம் இருந்து தப்புவதற்கு இரையினங்களூடே பல உய்வு முறைகள் தென்படுகின்றன. அவற்றுள் குமட்டல் ஏற்படுத்தும் வேதிச்சுரப்பு, நச்சுத்தன்மை, காயப்படுத்தும் உடலமைப்பு போன்றவை சில. இவ்வாறான பாதுகாப்பைப் பெற்றிருக்கும் உயிரினங்களில் கண்ணில் தென்படாத வண்ணம் உருமறைப்பு, விரைவில் தப்பித்துப் பிழைக்கும் ஆற்றல் போன்ற வேறு சில தற்காப்புப் பண்புகள் பொதுவாகக் குறைவாகவே காணப்படும். இத்தகைய பாதுகாப்பைப் பெற்ற உயிரினங்களிடம் எதிர்வினையைச் சந்திக்கும் கோண்மாக்கள் நாளடைவில் இவற்றைத் தவிர்க்கத் தொடங்குகின்றன. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, தவிர்த்தல் பண்புகள் இல்லாத வேறு இனங்கள் படிவளர்ச்சியின் போது இவற்றைப் போலவே தோற்றம் பெறுகின்றன. இவ் அடையாள ஒற்றுமை தோற்றத்தில் மட்டுமல்லாது, ஒலி எழுப்புதல் போன்று கோண்மாக்களால் உணரக்கூடிய வேறு வழிகளிலும் ஏற்படலாம்.

அழகச்சாக இருக்கும் இறையினங்களின் எண்ணிக்கை கோண்மா எதிர்ப்புப் பண்பு கொண்ட இனங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும். அவ்வாறு இல்லாமல், ஒப்புப்போலிப் பண்பினையுடைய தீங்கு விளைவிக்க இயலாத இனங்களின் தொகை மிகுந்தால் கோண்மாக்கள் அவற்றைத் தின்று பார்த்து விட்டு நச்சு இனங்களையும் தாக்கத் தொடங்கி விடக்கூடும். இதனால் அவ்விரு இனங்களின் உய்வு உத்திகளும் தோற்றுப் போகும். அதன்வழி படிவளர்ச்சியில் அவை அற்றுப்போகவும் கூடும்.

படிமம்:Bungarus caeruleus ewart.jpg
நஞ்சினையுடைய கட்டுவிரியனும் நஞ்சில்லாத ஓலைப்பாம்பும்
படிமம்:Lycodon aulicus2 sal.jpg

நஞ்சினையுடைய கட்டு விரியனைப் போலத் தோன்றும் நஞ்சற்ற Travancore wolfsnake Lycodon travancoricus ஓலைப்பாம்பு(?)வாலைப்பனையன் (Lycodon aulicus),குமட்ட வைக்கும் வெறும்புலிப் பட்டாம்பூச்சியைப் போன்று தோன்றும் தமிழ் இலேசிறகி, வௌவால்களால் உண்ண முடியாத சுவை கொண்ட சில அந்துப்பூச்சிகளின் மீயொலி செய்திகளை வெளியிடும் உண்ணக்கூடிய அந்துப்பூச்சிகள் போன்றவை இவ்விளைவைக் காட்டுபவை.


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.