செஞ்சுரியன், செப்.15: வயாம்பா அணிக்கு எதிராக புதன்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரெய்னாவின் அதிரடி ஆட்டம்; அஸ்வின், மோர்கல் ஆகியோரின் அசத்தலான பந்து வீச்சால் தனது 2வது லீக் ஆட்டத்திலும் சென்னை அணி வெற்றி வாகை சூடியது.
டாஸ் வென்ற இலங்கையின் வயாம்பா அணி, சென்னை அணியை முதலில் பேட் செய்ய பணித்தது. ஆனால், சென்னை அணி 200 ரன்கள் குவித்து அந்த அணியின் டாஸ் முடிவுக்கு ஏமாற்றம் அளித்தது.பின்னர், பேட்டிங் செய்த வயாம்பா அணி 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது. சென்ற ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காத ஹேடன் இதில் 10 ரன்கள் எடுத்து மெண்டிஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
ரெய்னா-விஜய்:
அடுத்து ஜோடி சேர்ந்த ரெய்னா, விஜய் ஆகியோர் வயாம்பா அணியினரின் பந்துகளை பந்தாடினர்.விஜய் 46 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார். ரெய்னா 44 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்தார்.
20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது சூப்பர் கிங்ஸ். வயாம்பா அணியினர் 16 ரன்களை உபரியாக விட்டுக்கொடுத்தனர்.
கடின இலக்கு:
201 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வயாம்பா அணிக்கு தொடக்கமே சோதனையாக அமைந்தது.
குலதுங்க, தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டானார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயவர்த்தனே 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வெளியேறினார்.
5.1 ஓவரில் 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது வயாம்பா. அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வயாம்பாவின் முன் வரிசை வீரர்களை ஆட்டங்காண வைத்தார் மோர்கல்.
இதனிடையே தான் வீசிய முதல் ஓவரிலேயே இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின்.வயாம்பா அணி வீரர் காருன்யநாயகே மட்டும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தார்.
இதனிடையே, பெரேரா மற்றும் மெண்டிஸ் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்த வயாம்பா அணியின் தோல்வி ஏற்குறைய உறுதியானது.
கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடிய காருன்யநாயகே, முரளீதரன் பந்து வீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
17.1 ஓவரில் வயாம்பா அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணியால் 103 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 97 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 2வது வெற்றியை ருசித்துள்ளது சென்னை அணி. சென்ட்ரல் ஸ்டேக்ஸ் அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 87 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ரெய்னா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
0 comments:
Post a Comment