ஸ்பெஸிபையில் தேடும் போது முடிவுகள் மிக அழகாக இணையதளங்களின் கோலேஜாக தோன்றுகின்றன.எதில் வேண்டுமானாலும் கிளிக் செய்து கொள்ளலாம். முதல் பார்வைக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம் , ஆனால் கொஞ்சம் பழகிவிட்டால் பொருத்தமான இணையதளத்தை தேடுவது மிகவும் சுலபம்.அலுவலக பலகையில் குறிப்புகளுக்கான சீட்டுகள் சின்னதும் பெரிதுமாக ஒட்டப்பட்டிருப்பது போல தோன்றும் இணையதளங்களை அப்படியே நகர்த்தினால் பக்கவாட்டில் இணையதளங்களின் தொகுப்பு நீண்டு கொண்டே இருக்கும்.
வழக்கமான கூகுல் பாணியிலான வரிசையில் தோன்றும் முடிவுகளை பார்த்து பழக்கப்பட்டவர்கள் இந்த பாணிக்கு பழக கொஞ்சம் பயிற்சி தேவை.அதற்கான குறிப்புகள் தளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன. தேடல் முடிவுகளில் எவற்றை கிளிக் செய்கிறோமோ அவை நடச்த்திர குறியோடு பிடித்தமான தளமாக சேமித்து வைக்கப்படும்.
அதன் பிறகு நட்சத்திர குறியை கிளிக் செய்தால் அபிமான தளங்களை பார்க்கலாம். சங்கிலி இணைப்பு போன்ற ஐகானை கிளிக் செய்தால் குறிப்பிட்ட இணையதளத்தை அப்படியே நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.இணைய முடிவுகள் தோன்றும் அமைப்பை கூட மாற்றியமைப்பதற்கான வசதி இருக்கிறது. மற்ற தேடியந்திரம் போல இது முடிவுகளை இணையதளம்,செய்தி,புகைப்படம்,என வகைப்படுத்தி காண்பிப்பதில்லை.
எல்லா வகையான் முடிவுகளூமே ஒன்றாகவே தொகுத்து அளிக்கப்படுகின்றன. ஆனால் குறிப்பிட்ட வகை முடிவு தான் தேவை என்றால் அதற்கேற்ப முடிவுளை சுருக்கி கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.அதே போல முடிவுகளை பெரிதாக்கியும் பார்த்துக்கொள்ளலாம். தளத்தின் மேல் பகுதியில் பிரபலமான தேடல் பதங்களும் இடம்பெறுகின்றன.அவற்றை கிளிக் செய்தும் தேடலாம். ஸ்வீடனை சேர்ந்த பெலிக்ஸ் மற்றும் பெர்ஸ்ன் ஆகியோர் இந்த தேடியந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.
வால் போல நீளும் நீல நிற முடிவுகளின் பட்டியலில் இருந்து இணைய தேடலை விடுவித்து மேலும் சிறப்பான அனுபவமாக தேடலை மாற்றுவதே இந்த தேடியந்திரத்தின் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தளங்கள்,வீடியோ,செய்தி,வலைப்பதிவுகள் என தனிதனியே வைகைப்படுத்தப்படாமல் ஒன்றாக முடிவுகள் முன் வைக்கப்படுவதால் ஒட்டுமொத்த நோக்கில் சரியான புரிதல் கிடைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment