1876-78 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாகிய சென்னை மாகாணத்தை கடும் பஞ்சம் பீடித்தது. இப்பஞ்சம் 1876-78 இன் பெரும் பஞ்சம்,தென்னிந்தியப் பெரும் பஞ்சம், 1876-78, சென்னை மாகாணப் பஞ்சம், 1877, தாது வருடப் பஞ்சம் என்று பலவாறு அழைக்கப்படுகிறது.
இரு ஆண்டுகள் நீடித்த இப்பஞ்சம், முதலாண்டில் தென்னிந்தியப் பகுதிகளைத் (சென்னை, மைசூர், பம்பாய், ஐதராபாத்) தாக்கியது. இரண்டாம் ஆண்டில் வட இந்தியாவில் ஐக்கிய, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கும் பரவியது. இரு ஆண்டுகளில் ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி மக்கள் பட்டினியாலும் நோயாலும் மாண்டனர். இப்பஞ்சத்தின் விளைவாக பிரிட்டிஷ் அரசு பஞ்சக் குழுமத்தைத் தோற்றுவித்து பஞ்ச விதிகளை (Famine Code) வகுத்தது.
1858 இல் சிப்பாய் கலகத்தின் பிறகு சென்னை மாகாணம், கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடிக் கட்டுப்பாடின் கீழ் வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், புகைவண்டிகள், தானிய ஊக வாணிகம், புதிய பணப் பயிர்கள், ஏற்றுமதி என பல நவீன முறைகளை இந்தியாவில் அறிமுகப் படுத்தினர். இதனால் உள்ளூர்ச் சந்தைகள் நலிவடைந்து, தானியங்களின் விற்பனை பெருமளவில் சந்தைப்படுத்தப்பட்டது.
ஏற்றுமதிக்காக சென்னைக் கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தானிய மூட்டைகள் (பெப்ரவரி 1877)
1876 ஆம் ஆண்டு எல் நீனோ பருவநிலை மாற்றத்தால், தக்காணப் பீடபூமி முழுவதும் பருவமழை பொய்த்தது. உணவு தானியங்களின் விளைச்சல் பெருமளவு குறைந்தது. உணவு தானிய உற்பத்தி குறைந்தாலும், ஏற்றுமதி குறையவில்லை. சந்தைப் பொருளாதாரத்தில் அசையா நம்பிக்கை கொண்டிருந்த காலனிய ஆட்சியாளர்கள், ஏற்றுமதியை தடை செய்து, பற்றாக்குறையைப் போக்க விரும்பவில்லை. பதுக்கல் பரவலாகி, உணவு தானியங்களின் விலை கட்டுக்கடங்காமல் போனதால், விவசாயிகள் அடுத்த வருடத்திற்கான விதை நெல்லை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் அடுத்த வருடம் பயிரிடப்பட்ட நில அளவு வெகுவாகக் குறைந்து, உணவுப் பற்றாக்குறை தீவிரமடைந்தது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமெனக் கருதப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட பட்டினிச் சாவுகள் மிகுந்தன என்று பஞ்ச நிவாரண குழு உறுப்பினர் வில்லியம் டிக்பி தனது ஃபேமைன் கேம்பைன்ஸ் இன் சவுத் இந்தியா என்ற நூலில் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிக்காகக் காத்திருக்கும் காட்சி (அக்டோபர் 1877)
1876 இன் பிற்பகுதியில் பஞசத்தின் கடுமை காலனிய அரசாங்கத்திற்கு தெளிவானது. அப்போது சர் ரிச்சர்ட் டெம்பிள் இந்திய அரசாங்கத்தின் பஞ்சக்குழு ஆணையராக (Famine Commissioner) இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் பீகாரில் பஞ்சம் வந்தபோது நிவாரணப் பணிகளுக்கு அதிக பணம் செலவிட்டார் என இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இம்முறை சென்னை மாகாணத்தில் பெரிய அளவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள டெம்பிள் தயங்கினார். தானிய ஏற்றுமதியைத் தடை செய்ய மறுத்து விட்டார். பஞ்சம் தீவிரமடைந்தபின், நிவாரணப் பணிகள் மெல்லத் தொடங்கின .
ஆனால் நிவாரணம் பெறுவோர் கடுமையான விதிகளுக்குட்படுத்தப் பட்டனர். முதியோர், உடல் ஊனமுற்றோர், குழந்தைகளுக்கு மட்டும் இலவச உணவு வழங்கப் பட்டது. ஏனையோருக்கு கடுமையான உடலுழைப்புக்கு பதிலாகவே நிவாரணமளிக்கப் பட்டது. நிவாரணக் கூலி பெற்றவர்களைக் கொண்டு பல கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னைநகரின் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாய் இவ்வாறு கட்டப்பட்டதே.
டெம்பிள் ஊதியம் (Temple Wage) என்றழைக்கப் பட்ட நிவாரணத் திட்டத்தில், வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினமும் ஒரு அணா (1/16 ரூபாய்) வும் 450 கிராம் தானியமும் வழங்கப்பட்டன. அதற்காக நாள் முழுவதும் அவர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும்.நிவாரணம் பெறுபவர்களிடம் கடுமையான வேலை வாங்காவிட்டால் மக்கள் சோம்பேறிகளாகி மேலும் பலர் நிவாரணம் கோருவர் என்று டெம்பிளும், மற்ற சந்தை பொருளாதார நிபுணர்களும் கருதியதே இதற்கு காரணம்.
இந்திய வைஸ்ராய் லிட்டன் பிரபு அவர்களுக்கு முழு ஆதரவளித்தார். இங்கிலாந்தில் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் போன்ற மனிதாபிமானிகள் நிவாரணத்திற்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டுமென அரசாங்கத்தை வற்புறுத்தினர். ஆனால் ஆப்கானிஸ்தானில் போர் நடந்து கொண்டிருந்ததால், நிவாரண நிதி ஒதுக்கீட்டை உயர்த்த லிட்டன் மறுத்து விட்டார். மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுவதை எதிர்த்து நிவாரணத் தொழிலாளர்கள் பம்பாயில் போராட்டம் நடத்தினர்.
பஞ்ச நிவாரணப் பணிகள் (1877)
சென்னையில் சுகாதாரத் துறை ஆணையராக இருந்த கார்நிஷ் (W. R. Cornish) என்ற மருத்துவரின் பெருமுயற்சியால் மார்ச் 1877 இல் அரசாங்கம், தின நிவாரணத்தை உயர்த்த ஒப்புக் கொண்டது. 570 கிராம் தானியமும் 53 கிராம் பயறுவகைகளும் (புரதச் சத்துக்காக) வழங்கப் பட்டன.ஆனால் அதற்குள் பல லட்சம் பேர் பட்டினியால் மாண்டிருந்தனர்.
சென்னை மாகாணத்தில் மட்டுமன்றி மைசூர், ஹைதராபாத் ஆகிய சமஸ்தானங்களையும், பம்பாய், ஐக்கிய மாகாணங்களையும் பஞ்சம் தாக்கியது. 1878 இல் பருவமழை திரும்பினாலும், பஞ்சத்தால் உடல் நலிந்திருந்த மக்களை மலேரியா தாக்கியது; மேலும் பல லட்சம் பேர் மாண்டனர். இரு ஆண்டுகளில் மொத்தம் சுமார் ஒன்பது கோடி ரூபாய் நிவாரணத்திற்காக செலவிடப்பட்டது. பஞ்சம் தாக்கிய பகுதிகளுக்கு 60 லட்சம் ரூபாய்க்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டன. மேலும் ஆங்கில மனிதாபிமானிகள் தனிப்பட்ட முறையில் 84 லட்சம் ரூபாய் வரை நன்கொடை வசூலித்து பஞ்ச நிவாரணத்திற்கு வழங்கினர்.ஆனால் நபர்வரி வகையில் இத்தொகை சொற்பமானதே.
விளைவுகள்
இப்பெரும் பஞ்சத்தால் பல லட்சம் பேர் மாண்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை சரியாக கணிக்கப் படவில்லை. அரசாங்கக் கணக்கின்படி பிரிட்டிஷ் மாகாணங்களில் மட்டும் 52 முதல் 55 லட்சம் பேர் மாண்டனர். ஆனால் மற்ற அறிஞர்களின் கணிப்புகள் இறந்தவர் எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் எனக் கூறுகின்றன. ரொனால்ட் சீவாய் 61 லட்சம் எனவும், அரூப் மகாரத்னா 82 லட்சம் எனவும், டிக்பி அதிகபட்சமாக ஒரு கோடியே மூன்று லட்சம் எனவும் மாண்டவர் எண்ணிக்கையைக் கணிக்கின்றனர்.
மாண்டவர் எண்ணிக்கை | கணித்தவர் | வெளியான பதிப்பு |
---|---|---|
1.03 கோடி | வில்லியம் டிக்பி | ப்ராஸ்பரஸ் பிரிடிஷ் இந்தியா, ஃபிஷர் உன்வின் பதிப்பகம் (1901) |
82 லட்சம் | அரூப் மகாரத்னா | தி டெமொகிராஃபி ஆஃப் ஃபேமைன்ஸ், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பதிப்பகம் (1996) |
61 லட்சம் | ரொனால்ட் சீவாய் | ஃபேமைன் இன் பெசன்ட் சொசைடீஸ், கிரீன்வுட் பிரஸ் (1986) |
55 லட்சம் | பிரிட்டிஷ் அரசு | இம்பீரியல் கசட்டியர் ஆஃப் இந்தியா, இதழ். 3 (1907) |
இவ்வாறு பெரும் உயிர்சேதம் ஏற்பட்டதால் விழித்துக் கொண்ட காலனிய அரசு எதிர்காலத்தில் பஞ்சங்களை எதிர்கொள்ள பஞ்ச விதிகளை வகுத்தது. பஞ்சத்தின் கடுமையிலிருந்து தப்பிக்க தென்னிந்தியர் பலர், மொரீஷியஸ், பிஜி, இலங்கை, பர்மா போன்ற பிரிட்டனின் பிற காலனிகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்தனர்.
அவர்களது வம்சாவளியினர் இன்றும் அந்நாடுகளில் வசித்து வருகின்றனர். பஞ்சத்தின் கடுமையும், ஆங்கில அரசின் மெத்தனமும் தேசிய உணர்வு கொண்ட இந்தியர்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கின. இந்தியர்களின் நலத்திற்காக டெல்லிஆட்சியாளர்களை முழுதும் நம்பியிருக்க முடியாதென்பதை உணர்ந்த தாதாபாய் நௌரோஜி போன்ற தேசியவாதிகள், நேரடியாக பிரிட்டன் அரசிடம் மக்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கினர்.
0 comments:
Post a Comment