தொடுகையை உணரக்கூடிய இலத்திரனியல் தோலினை கலிபோர்னிய பேர்கலி பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானிகள் குழுவொன்று உருவாக்கியுள்ளது.
மேற்படி இலத்திரனியல் தோலானது எந்திரனியல் (ரோபோடிக்) மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைகளில் புதிய அத்தியாயமொன்றை உருவாக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது ஆய்வுகூட பரிசோதனை அளவிலேயே இருக்கும் மேற்படி தோலானது, மனித தோலைப் போன்று மிக வேகமாக தொடுகைகளை உணர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமுக்கத்தை உணரக் கூடிய உயர் உணர்திறனை கொண்டமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இலத்திரனியல் தோலானது சிலிக்கோன், நெனோ வயர்கள் மற்றும் ஜேர்மானியம் என்பவற்றால் ஆக்கப்பட்டுள்ளது.
மேலும் நெனோ ஸ்கேல் ட்ரான்ஸ்சிஸ்டர் மற்றும் இலகுவான இறப்பர் என்பனவும் இதில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை மிகவும் மலிவாக உருவாக்க முடியுமெனவும், இதன் இயக்கத்திற்கு மிகக் குறைந்த அளவிலான மின்சக்தியே ( வோல்டேஜ்) தேவையெனவும் கருதப்படுகின்றது.
எதிர்காலத்தில் இரசாயனப் பொருட்கள் மற்றும், வெப்பம், ரேடியோக் கதிர்கள் என்பனவற்றுக்குத் துலங்களைக் காட்டக்கூடிய சென்ஸர்களை மேற்படி தோலில் உள்ளடக்க தாம் எதிர்ப்பார்ப்பதாக அவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
எதிர்காலத்தில் மனிதர்கள் உள் நுழைய முடியாத இடங்களில் கூட இலத்திரனியல் தோல் கொண்ட ரோபோக்களைக் கொண்டு தாம் நுழைய எதிர்ப்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment