
காலையில் பள்ளிக்குச் செல்லும்போதோ, அலுவலகத்திற்குச் செல்லும்போதோ அவசரஅவசரமாக பூட்ஸýக்குப் பாலிஷ் போடுபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதுவரை அழுமூஞ்சி மாதிரி சோம்பிக் கிடக்கும் பூட்ஸ், திடீரென்று பளபளவென்று மின்னுவது எப்படி? பாலிஷ் போட்டுத் தேய்க்கும்போது அப்படி என்ன மாயாஜாலம் நடக்கிறது?
ஒரு பரப்பின் பளபளப்பு, அதன் மிருதுத் தன்மையைப் பொருத்தே உருவாகிறது. அது எவ்வளவு மிருதுவாக உள்ளதோ, அவ்வளவு ஒளியைப் பிரதிபலிக்கிறது. இதன் காரணமாக பளபளப்பு உருவாகிறது. பாலிஷ் செய்யப்படாத தோல் பகுதி பளபளப்பதில்லை. அதற்குக் காரணம், அதன் மேலுள்ள நுணுக்கமான துளைகளால் ஆன சொரசொரப்புத் தன்மைதான்.
இந்த சொரசொரப்பு மீது நாம் பாலிஷை வைத்துத் தேய்க்கும்போது, தோலின் மேற்பரப்பில் உள்ள நுணுக்கமான குழிகள் முழுவதும் அடைக்கப்படுகின்றன. மென்மையான துணியை வைத்து வேகமாகத் தேய்கும் போதோ, அல்லது பிரஷ்ஷால் தேய்க்கும் போதோ பாலிஷ் மெழுகு சற்று உருகி முழுமையாகப் பரவுகிறது. இதன் காரணமாக, மேற்பரப்பு பளபளக்கிறது.
பூட்ஸின் மீது சற்று நீரைத் தெளித்து துணியால் தேய்த்தால், மெழுகின் மீது ஒட்டிக் கொள்ளாத தண்ணீர் துணியில் ஒட்டிக்கொள்வதுடன், துணி வழுக்கிச் செல்லவும் உதவும்.
இதற்குப் பதிலாக, திரவ வடிவிலான பூட்ஸ் பாலிஷைப் போட்டால், அதைத் தேய்க்க வேண்டியதில்லை. ஏனென்றால், அது தோலின் மீது அதிவேகமாகக் காய்ந்து ஒரு படலம் போலப் படிந்து விடுகிறது. இதன் காரணமாக, ஒளியைப் பிரதிபலித்து பளபளப்பாக இருக்கிறது.
பெல்ட்டுக்கெல்லாம் யாரும் பாலிஷ் போடுவது இல்லையே, ஏன்?
அது இன்னும் மென்மையான, சொரசொரப்புக் குறைந்த தோலால் உருவாக்கப்படுவதுதான் காரணம்















0 comments:
Post a Comment