உங்கள் அப்பாவோ, அம்மாவோ அவசரமாக ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கையில் பணம் குறைவாக இருக்கிறது. என்ன செய்யலாம்? வங்கிக்குச் செல்ல நேரமில்லை. ரயில் நிலையத்திலோ, பேருந்து நிலையத்திலோ பணத்தை எடுக்கும் வசதி இருந்தால் உதவியாக இருக்குமே! இதுபோன்ற பல்வேறு அவசர நிலைமைகளில் ஏற்படும் பணத் தேவையைச் சமாளிப்பதற்காகத்தான் இப்போது ஏ.டி.எம். எனப்படும் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் பரவலாக அமைக்கப்பட்டுள்ளன. சமீப காலத்தில்தான் இது சாத்தியமாகியிருக்கிறது.
முன்பெல்லாம் நாம் வங்கியில் பணம் எடுக்க வேண்டுமானால், பாஸ் புக் எனப்படும் கணக்குக் குறிப்புப் புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு, நாம் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளைக்குச் சென்றுதான் பணம் எடுக்க முடியும். அதுவும் வங்கியின் வேலை நேரத்தில் மட்டும்தான் எடுக்கமுடியும். வேலைநேரம் முடிந்த பிறகோ, விடுமுறை நாட்களிலோ பணம் எடுக்க முடியாது.
ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. பெரும்பாலானோர் இப்போது பணம் எடுக்க வங்கிக்குச் செல்வதில்லை. பணம் தேவைப்படும்போது, தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரம்(ஏ.டி.எம்.) வைக்கப் பட்டிருக்கும் இடத்திற்குச் செல்கிறார்கள். தங்கள் கணக்கிலிருந்து தேவையான அளவு பணம் எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த இயந்திரம், ஒருவரது அடையாளத்தைச் சரியாக உணர்ந்துகொண்டு, அவர் கேட்கும் தொகையை எப்படிக் கொடுக்கிறது?
இந்த இயந்திரம் ஒரு தொலைத் தொடர்புக் கம்பி மூலமாக அருகில் உள்ள வங்கிக் கிளையில் உள்ள கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். முதலாவதாக, இந்தக் கணினி, ஒருவரது பற்று அட்டையின் (டெபிட் கார்டு) பின்புறமுள்ள காந்தப்புலப் பகுதியில் பதியப்பட்டுள்ள தகவல்களைச் சரிபார்க்கும்.
இந்தக் காந்தப்புலப் பகுதியில் ஒருவரைப் பற்றிய தகவல்கள் மின்னணு ரீதியில் பதியப்பட்டுள்ளது. (சி.டி., ஆடியோ கேசட் போன்றவற்றில் உள்ளதைப் போல). சம்பந்தப்பட்ட நபர் இந்தப் பிளாஸ்டிக் பற்று அட்டையை இயந்திரத்தில் பொருத்திய பிறகு, ரகசிய அடையாள எண்ணை அழுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டும்தான் அந்த ரகசிய எண் தெரிந்திருக்கும். எனவே காந்தப் புலக் குறிப்புகளும், ரகசிய எண்ணும் சரியாக இருந்தால்தான், சம்பந்தப்பட்டவர் தனது கணக்கைக் கையாள கணினி அனுமதிக்கும்.
இந்த இயந்திரத்தின் செயல்பாடுகள் கணினியால் கட்டுப்படுத்தப்படும் நான்கு முக்கியப் பிரிவுகள் மூலம் நடக்கின்றன.
ஒருவர் தனது பற்று அட்டையை உள்ளே செலுத்தியவுடன், அது சரியாக இருக்கிறதா என்று கணினியின் ஒரு பிரிவு சரிபார்த்து ஏற்றுக்கொள்ளும். தவறாக இருந்தால் நிராகரித்துவிடும். பிறகு ரகசிய எண்ணை அவர் அழுத்திய பிறகு, அந்த எண் சரியானதுதானா என்று 30 வினாடிகளுக்குப் பரிசோதிக்கப்படும்.
கணினியின் இரண்டாவது பிரிவு, அவர் அழுத்தும் கணக்கு வழக்குப் பதிவுகளை துணை கட்டுப்பாட்டு சேகரிப்பானில் சேகரிக்கும். மூன்றாவது பிரிவு, சம்பந்தப்பட்டவரின் கணக்கில் எஞ்சியுள்ள தொகை எவ்வளவு என்று பார்க்கும். நான்காவது பிரிவு இந்த மூன்றின் வேலையையும் ஒருங்கிணைக்கும் பணியைச் செய்யும்.
இந்தத் தானியங்கி இயந்திரத்தின் ஒட்டுமொத்த செயல்பாடும் அதற்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட குறுங்கணினிகளால் நடத்தப்படுகின்றன. இவற்றைச் செயல்படுத்துவதற்காக வங்கிக் கணினியில் தனி நிரல்கள் (புரோகிராம்கள்) எழுதப்பட்டிருக்கும். தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்பாடும் அருகிலுள்ள வங்கிக் கிளையில் உள்ள கணினியில் பதிவு செய்யப்படும்.
ஒருவரது தகவல்களைச் சரிபார்க்கும் நடைமுறை முடிந்தவுடன், குறிப்பிட்ட எண்ணிக்கையில் பணம் வெளியே வரும். இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் வங்கிக் கணக்குகளில் ஏற்றப்படும். அப்போதுதானே எவ்வளவு பணம் வரவாக வந்திருக்கிறது, எவ்வளவு வெளியே சென்றிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
இந்தச் செயல்பாடுகள் அனைத்தையும் தானியங்கிப் பணப்பட்டுவாடா இயந்திரத்தைக் கட்டுப்படுத்தும் கணினி அதிவேகமாகச் சில நொடிகளில் செய்து முடித்துவிடுகிறது. இதனால், சரியான தகவல்கள் கிடைக்கும் நிலையில் வங்கிச் செயல்பாடுகளும் அதிவிரைவில் நடந்து முடிகின்றன.
2 comments:
அருமை,
நன்றி குமரேசன்
Post a Comment