மிக நீண்ட காலத்திற்கு முன்னால் சக்கரங்கள் இல்லை. பனிப் பிரதேசங்களில் நாய்களால் கட்டி இழுத்துச் செல்லப்படும் "ஸ்லெட்ஜ்' எனும் சறுக்கு வண்டியும் இல்லை. அந்தக் காலத்தில் மக்கள் தங்கள் பொருட்களையெல்லாம் தலைச்சுமையாகவும், கால்நடைகளின் மீது வைத்துக் கட்டியும்தான் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சென்றனர். இன்றைக்கும், பல கிராமங்களில் மக்கள் சந்தைக்குக் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை இதுபோன்றே எடுத்துச் செல்கின்றனர்.
ஆனால், இந்த முறையில் கொஞ்சம் பொருட்களை, கொஞ்சம் தூரம்தான் எடுத்துச் செல்ல முடியும். அதனால்தான், பொதுவாக அந்தக் காலத்தில் எல்லாப் பரிமாற்றமும் அந்தந்த மக்கள் சமூகத்தின் எல்லைக்குட்பட்டுதான் நடைபெற்றன. வாகனங்கள் வந்த பிறகுதான் ஒரு சமூகத்திற்கும், இன்னொரு சமூகத்திற்குமான உறவு அதிகரித்தது. விரைவாகச் செல்லக்கூடிய வாகனங்களைப் பயன்படுத்தியவர்கள் சமூக அளவிலும், பொருளாதார அளவிலும் விரைவாக முன்னேறினார்கள். வாகனங்களின் வேகம்தான் முன்னேற்றத்தின் அளவு என்றும் சொல்லலாம்.
இந்தியாவில் இன்னும் சில கிராமங்களில் சாலைகள் இல்லை. எனவே, அங்கே காரோ, பேருந்தோ, லாரியோ வருவதில்லை. மணிக்கு நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர் தூரம் மட்டுமே செல்லக்கூடிய மாட்டு வண்டிகள்தான் அந்த இடங்களில் வாழும் கிராமவாசிகளின் ஒரே வாகனம். ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் மாட்டு வண்டியில் பயணம் செய்ய முடியும். அதனால், ஒரு ஊரைச் சேர்ந்தவர்களின் தொடர்புகளும் பரிமாற்றங்களும் குறிப்பிட்ட அளவிலேயே நடைபெற்றன. அந்த இடங்களில் சமூகங்கள் வளர்ச்சி பெறாமல் தேங்கிக் கிடக்கின்றன. அவர்கள் விடுதலையடையவேண்டுமானால், வளர்ச்சிபெற வேண்டுமானால் வெளி உலகத்துடன் எளிதில் தொடர்புகொள்ளக்கூடிய வாகனங்கள் வேண்டும். விரைவாக ஓடுகின்ற வாகனங்கள் வேண்டும். அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கும், ஐரோப்பாவின் முன்னேற்றத்திற்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று, வேகமாகப் பயணம் செல்வதில் அவர்கள் வெற்றியடைந்ததுதான். பயணங்கள் சக்கரங்கள் இல்லாமல் சாத்தியமாகுமா? ஆகாது!
யார் எப்போது சக்கரங்களைக் கண்டுபிடித்தார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஏறத்தாழ ஐம்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டன என்று சொல்லப்படுகிறது. அதுவரை மக்கள் தலைச்சுமையாகவும், மிருகங்களின் மீது சுமத்தியுமே பொருட்களைக் கொண்டு சென்றார்கள். ஆயினும், தூக்க முடியாத பெரிய சுமைகளைக் கட்டி தரையில் இழுத்துக்கொண்டு சென்றார்கள். பண்டைக் காலத்தில், எகிப்தில் பெரிய சிலைகளும், பிரமிடுகளும் செய்வதற்குத் தேவையான கற்களை இந்த வகையில் இழுத்துக்கொண்டு வந்துதான் ஏற்ற இடத்தில் பொருத்தினார்கள்.
உருளை வடிவான பாறைகளோ, மரத் துண்டுகளோ குன்றின் சரிவின் வழியே உருண்டு வருகிற காட்சிதான் மனிதனுக்கு சக்கரங்கள் பற்றிய கருத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். முதன்முதலில் மனிதன் உருளையான மரத் தடிகளின் மீது பாரமான பொருளை வைத்து இழுத்துச் சென்றிருக்க வேண்டும். இந்த முறையில், பாரம் முன்னே செல்வதற்கு ஏற்ற வகையில் உருளைகளைத் தூக்கி முன்னே மாற்றி மாற்றி இட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அந்த உருளைகள் பாரமாக இருந்தால் அவற்றைத் தூக்குவதற்கே சிரமப்பட வேண்டியிருக்கும். அதனால்தான், உருளைகளின் நடுப் பகுதியைச் செதுக்கி அதன் பருமனைக் குறைத்தார்கள். அதாவது உருளையின் இரு முனைகளிலும் கொஞ்சம் பகுதியை மட்டும் அப்படியே வைத்துவிட்டு, மிச்சமுள்ள நடுப்பகுதியைச் செதுக்கி அதன் பருமனைக் குறைத்தார்கள். இப்போது, இரு முனைகளும் சக்கரங்களாயின. நடுப்பகுதி அச்சுத் தண்டானது. இப்படித்தான் முதலாவது சக்கரங்கள் தோன்றின.
முதன்முதலாக மெஸபடோமியாவில்தான் சக்கரங்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். டைக்ரீஸ்-யூப்ரடீஸ் நதிக் கரைகளைத்தான் மெஸபடோமியா என்று சொல்லி வந்தார்கள் (இன்றைய இராக்). இந்தப் பிரதேசங்களில் ஏறத்தாழ 5,500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்திருந்த சுமேரியர்கள்தான் மர உருளையில் செய்த சக்கரங்களைப் புதுப்பித்தார்கள். ஒரே ஒரு மரத் துண்டுக்குப் பதிலாக இரு புறமும், மூன்று பலகைகளைச் சேர்த்து இணைத்த சக்கரங்களையும், அவற்றைப் பிணைக்கிற அச்சுத் தண்டையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். சக்கரப் பலகைகளை, குறுக்காக சட்டங்கள் அடித்துப் பிணைத்திருந்தார்கள்.
இதுபோன்று, புதுப்பித்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்க வேண்டும். ஒன்று, ஒரே மரத்துண்டாலான சக்கரம், பாரம் ஏற்றும்போது உடைந்து போவதற்கான வாய்ப்பு அதிகம். இரண்டாவதாக, மெஸபடோமியாவில் சக்கரங்களாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற அதிகப் பருமனுடைய மரங்கள் கிடைப்பது சிரமமாக இருந்தது. இந்த முறையில், பாரம் வைக்கிற தட்டிலிருந்து கீழே செங்குத்தாக இரண்டு மரத் தண்டுகளை அடித்து, அவற்றிற்கிடையில் சக்கரத்தின் அச்சுத்தண்டைப் பொருத்தினார்கள். அப்போது, மரத் தண்டுகளுக்கிடையில் அச்சுத்தண்டு சுழலும். அதே சமயம், சக்கரங்களும் தட்டை விட்டு விலகிப் போகாது. இந்த அச்சுத்தண்டும், சக்கரங்களும் ஒன்றாகத்தான் திரும்பும். அதுதான் இந்த முறையில் உள்ள சிக்கல். என்ன சிக்கல்? வளைவில் திரும்பும்போது வெளிச்சக்கரம் உள் சக்கரத்தைவிட கூடுதலான தூரம் செல்ல வேண்டி வருவதால், உள் சக்கரம் மட்டும் மிக மெதுவாக ஊர்ந்து நகர வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு சக்கரமும் வெவ்வேறு அச்சுத்தண்டிலிருந்து திரும்பினால் இந்தப் பிரச்னை இருக்காது. எனவே அடுத்த கட்டமாக, அச்சுத்தண்டில் சுதந்திரமாகச் சுழலுகின்ற சக்கரங்களாகச் சீரமைக்கப்பட்டன.
சக்கரத்தின் பாரத்தைக் குறைப்பதற்காக, தேவையற்ற நடுப்பகுதியை வெட்டி எடுத்தபோதுதான், சக்கரங்களின் இடையே ஆரக்கால்கள் வைக்க வேண்டும் என்ற கருத்து உதித்தது. அது மட்டுமல்ல, பெரிய சக்கரங்கள் தேவைப்பட்டபோது, அதற்கேற்ற பருமனான மரம் கிடைப்பது சிரமமாக இருந்தது. எனவே, சிறு சிறு மரத் துண்டுகளைப் பயன்படுத்தி வளைய வடிவான சக்கரத்தை உருவாக்க முயன்றார்கள். வளையச் சக்கரத்தை உருவாக்க, பல மரத்துண்டுகளைச் செதுக்கியோ, சூடு படுத்தியோதான் வில் வடிவமாக வளைப்பார்கள். "பெல்லிஸ்' என்று சொல்லப்படுகிற இதுபோன்ற வில் வடிவத் துண்டுகளைச் சேர்த்தால் வட்ட வடிவமான வளையமாகிவிடும். இந்த வளையப் பகுதியை மையப் பகுதியுடன் இணைப்பதற்கு ஆரக்கால்களும், நடுப்பகுதியும் தோன்றின. இதிலிருந்துதான், நாம் இன்று காண்கிற மாட்டு வண்டிச் சக்கரம் தோன்றியது.
இப்போதும், மாட்டு வண்டிச் சக்கரத்திற்கு இரும்புப் பட்டையிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது சக்கரத்தின் பலத்தை அதிகரிப்பதற்காகவும், தேய்மானத்தைக் குறைப்பதற்காகவும்தான். கிறிஸ்துவிற்கு முன்பு, பதினைந்திலிருந்து இருபதாம் நூற்றாண்டுகளுக்கிடையில்தான் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது. அக்காலத்தில்தான் காளைகளைத் தவிர, குதிரைகளையும் வண்டி இழுக்கப் பயன்படுத்தினார்கள். குதிரைகள், காளைகளைவிட வேகமாக ஓடுவதால், அதிக பலமுடையதும் தேய்மானம் குறைந்ததுமான சக்கரங்கள் தேவைப்பட்டன. எனவே, ஆரக்கால்களுடைய இரும்புப் பட்டையமைந்த சக்கரங்கள் தோன்றுவதற்குக் குதிரைகளும் காரணம் என்று சொல்லலாம். இப்போது, வண்டிச் சக்கரங்களிலிருந்து சைக்கிள் சக்கரங்களுக்கு வருவோம்.
சைக்கிளின் பின் சக்கரத்தின் நடுவில் ஒரு பற்சக்கரம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதன் பெயர் "ஸ்ப்ரோகட்.' பெடலை மிதித்தால் சைக்கிள் முன்னோக்கிச் செல்வதற்கு ஸ்ப்ரோகட் என்று சொல்லப்படுகிற இந்தப் பற்சக்கரம் வேண்டும். பெடலை மிதிக்கும்போது "கிராங்க்' சுழலும் அல்லவா. கிராங்கும், ஸ்ப்ரோகட்டும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதால், கிராங்க் சுழலும்போது ஸ்ப்ரோகட்டும் சுழலுகிறது. பின் சக்கரத்தின் நடுப் பகுதியில்தானே ஸ்ப்ரோகட் இருக்கிறது, அதனால், பின் சக்கரமும் சுழலுகிறது. எனவே, சைக்கிள் முன்னோக்கிச் செல்கிறது. பொதுவாக, கிராங்கில் உள்ளதில் மூன்றில் ஒரு பங்கு பற்கள்தான் ஸ்ப்ரோகட்டில் இருக்கும். அதனால், கிராங்க் ஒரு வட்டம் சுழலும்போது, ஸ்ப்ரோகட்டும் பின் சக்கரமும் மூன்று வட்டம் சுழலுகின்றன. எனவே, சைக்கிள் விரைவாகச் செல்கிறது. "லோசன்' என்ற பெயருடைய ஆங்கிலேயர்தான் 1870-ம் ஆண்டு இந்த முறையைக் கண்டுபிடித்தார். இந்த முறை நடைமுறைக்கு வந்தபோது, அதற்கு முன்பு நடைமுறையில் இருந்த "எலும்பு குலுக்கி'யும், "பெனிபார்த்திங்'கும் மறைந்துபோயின.
1813-ல் தான் முதன்முதலாக உந்து வண்டி ஓட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஜெர்மனியில் மான்ஹைம் நகரத்தில் விசித்திரமான உடைகள் அணிந்த ஒருவர், ஒன்றின் பின்னால் ஒன்றாக இரண்டு சக்கரங்கள் வைத்த உந்து வண்டியை ஓட்டிக் காண்பித்தார். இது 1813-ல் நடந்தது. "கால் ப்ரீட்ரிஷ் கிறிஸ்தியன் லுட்விக் ப்ரைஹர் ட்ரயிஸ்' எனும் நீண்ட பெயருடையவர் அவர். அவருடைய உந்து வண்டிதான், இப்போதுள்ள சைக்கிள்களுக்கெல்லாம் முன்னோடி.
இவருடைய உந்து வண்டிக்கு பெடலோ, கிராங்கோ இல்லை. இந்த வண்டியில் அமர்ந்து காலைத் தரையில் உந்தி உந்திதான் பயணிக்க வேண்டும். 1839-ல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த "கிர்க் பாட்ரிக் மாக்மில்லன்' என்ற கொல்லர்தான் பெடலை மிதித்து ஓட்டக்கூடிய வண்டியை முதன் முதலில் உருவாக்கினார். காலால் தரையில் உந்தாமல் ஓட்டக்கூடிய முதலாவது சைக்கிளைக் கண்டுபிடித்த மாக்மில்லனே, சைக்கிளை முதன் முதலாகக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகிறார்.
மாக்மில்லன் பின் சக்கரத்தில்தான் பெடலைப் பொருத்தினார். 1852-ல் பவேரியாக்காரரான "பிஷர்' என்பவர் பெடலை முன் சக்கரத்தில் பொருத்தினார். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த "லாலிமென்ட்' என்பவர்தான் சுழலுகிற கிராங்கை முதன்முதலாகப் பொருத்தினார் என்றும் சொல்லப்படுகிறது. இதுபோன்ற வாகனங்கள் நடைமுறைக்கு நிறைய வந்தபோது மக்கள் அவற்றை "எலும்பு குலுக்கிகள்' என்று அழைத்தார்கள். ஏனென்றால், அவற்றின் மீது பயணம் செய்வது என்பது, எலும்புகளை உடைப்பதுபோன்று இருக்குமாம்.
பெடலை முன் சக்கரத்தில் பொருத்தியபோது, முன் சக்கரத்தின் சுற்றளவை அதிகப்படுத்தினால் ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கும் என்று அறிந்தார்கள். கிராங்கின் ஒற்றைச் சுழற்சி முன் சக்கரத்தின் சுற்றளவுவரை தூரம் சைக்கிளைக் கொண்டுசெல்லும் அல்லவா? இதனால், முன் சக்கரத்தின் சுற்றளவை அதிகரித்தார்கள். பின் சக்கரத்தின் சுற்றளவைக் குறைத்தார்கள். முன் சக்கரத்தின் பின்னே உள்ள ஒரு சிறிய வால்போன்று ஆனது பின் சக்கரம். இதைத்தான் "பெனிபார்த்திங்' என்று கேலியாகச் சொன்னார்கள். ஏனெனில், இங்கிலாந்தில் அன்று நடைமுறையிலிருந்த பெனி நாணயம் பெரிதாக இருந்தது. பார்த்திங் நாணயம் சிறிதாக இருந்தது. இவை இரண்டும் சேர்ந்ததுபோன்றிருக்கிறது அந்த சைக்கிள் என்று மக்கள் கேலி செய்தார்கள்.
பெரிய முன் சக்கரத்தின் மீதுள்ள சீட்டில் ஏறி அமர்வது சிரமமாக இருந்தது. ஓட்டும்போது விழாமல் இருப்பதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது.
லோசன்தான் இந்த சைக்கிளைச் சீரமைத்து, கிராங்கையும் பெடலையும் இரண்டு சக்கரங்களின் இடையில் வைத்து, சங்கிலியின் மூலமாக பின் சக்கரத்தின் ஸ்ப்ரோகட்டுடன் பிணைத்து நவீன பாணியிலான சைக்கிளை உருவாக்கினார். எனவே, லோசன்தான் ஸ்ப்ரோகட்டும், கிராங்கும் உள்ள சைக்கிளை முதன் முதலாகக் கண்டுபிடித்தார். பிறகு, இதுபோன்ற சைக்கிள்கள் விற்பனைக்கு வந்தன.
÷நிறுத்தி வைத்த சைக்கிளின் பெடலை ஒரு சுற்று சுற்றினால் சக்கரம் கொஞ்சம்நேரம் நிற்காமல் சுற்றிக்கொண்டிருக்கும். ஏனெனில், சக்கரத்திற்கும், அச்சுத்தண்டிற்கும் இடையே உராய்வைக் குறைப்பதற்காக பால்பேரிங் இருப்பதால்தான். உருக்கால் ஆன சிறிய உருளைகளையே பால்பேரிங்ஸ் என்கிறோம்.
1877-ம் ஆண்டு "ஸýவிரெ' எனும் பிரெஞ்சுக்காரர்தான் அச்சுத்தண்டுகளின் மீது பால்பேரிங் பயன்படுத்தத் தொடங்கினார். அதற்கு முன்பே அச்சுத் தண்டிற்கும், நடுப்பகுதிக்கும் இடையில் சிலின்டர் வடிவிலுள்ள பருமன் குறைந்த துண்டுகளை இட்டு உராய்வைக் குறைப்பதற்கு முயற்சி செய்திருந்தார்கள்.
÷பால்பேரிங்குகள் சிறந்த வகையில் உராய்வைக் குறைத்தன என்றாலும் "டன்லப்' என்பவர், காற்று நிறைத்த குழாயைக் இணைத்த பிறகுதான் சைக்கிள்களைச் சுலபமாக ஓட்ட முடிந்தது.
டன்லப் என்பவர் ஒரு கால்நடை மருத்துவர். தன் மகனின் மூன்று சக்கர சைக்கிளின் அதிர்வைக் குறைப்பதற்காக, தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றப் பயன்படும் ரப்பர் குழாயில் காற்று நிறைத்து சக்கரங்களைச் சுற்றிலும் கட்டினார்.
காற்று நிறைத்த குழாய் கட்டப்பட்ட சக்கரங்கள் உடைய அந்தச் சைக்கிள், சைக்கிள் பந்தயத்தில் சுலபமாக வெற்றி பெற்றது. அதன் பிறகுதான், சைக்கிளுக்கு டயரும், டியூபும் உருவானது.
சுமேரியர்கள்தான் சக்கரங்களைக் கண்டுபிடித்தார்கள். ஆனால், சுமேரியர்கள் ஸ்லெட்ஜ் வண்டிகளைச் செலுத்த சக்கரங்களைப் பயன்படுத்தத்தொடங்கிய காலத்திலேயே இந்தியாவிலும், எகிப்திலும், சீனாவிலும் குயவர்கள், மண் பாத்திரங்களைச் செய்வதற்கு சக்கரங்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்று நம்பப்படுகிறது. ஏறத்தாழ, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிந்து நதிக் கரைகளில் வாழ்ந்திருந்தவர்கள் சக்கரத்தில் வைத்து வடிவமைத்து சூளையில் சுட்டெடுத்த மண்பாத்திரங்களைப் பயன்படுத்தியிருந்தார்கள். குயவரின் சக்கரம்தான் வாகனத்தின் சக்கரத்தைவிட முன்னால் நடைமுறைக்கு வந்தது என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள்.
குயவரின் சக்கரம் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டதற்கு முன்போ, பாரத்தை உருட்டிச் செல்வதற்கு உருளைகளைப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலோ, முன்பின் அசைவை சுழற்சியாக மாற்றுகிற "போட்ரில்' எனும் இயந்திரத்தை பயன்படுத்தத் தொடங்கியிருக்க வேண்டும். தச்சர்கள் மரத்தைத் துளைப்பதற்கு பயன்படுத்தும் துளையிடும் கருவியே இது. அந்த துளைப்புக் கருவி சுழல்வதற்காக, அதன் மேல் பொருத்தப்பட்டிருக்கும் சட்டம் முன்னும், பின்னுமாக அசைகிறது. பழைய கற்காலத்தின் கடைசி கட்டத்தில் வில்லும் அம்பும் கண்டுபிடிக்கப்பட்டதே, துளைப்புக் கருவி கண்டுபிடிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கவேண்டும்.
சக்கரங்கள் மனிதர்களுக்கு எண்ணற்ற வகையில் உதவுகின்றன. மனிதர்களுக்குத் தேவையான பல பொருட்களையும் தயாரிப்பதற்கு சக்கரங்களின் உதவி வேண்டும். தயாரித்த பொருட்களை, தேவைப்படுபவர்களிடம் கொண்டு செல்லவும் சக்கரங்கள் அவசியம். சக்கரங்கள் இல்லாவிட்டால் மனிதர்கள் பயணம் செய்ய முடியாது. மர உருளைகளிலிருந்து வண்டிச் சக்கரங்கள் வந்தன. குயவர்களின் சக்கரமும், ஆப்ரிக்காவிலும், இந்தியாவிலும், சீனத்திலும் ஆதிவாசிகள் பயன்படுத்திய துளையிடும் இயந்திரமும் பற்பல நவீனக் கருவிகள் தோன்றுதற்கு அடிப்படையாக இருந்தன.
நன்றி:தினமணி
0 comments:
Post a Comment