ஒரு பனிக்கால இரவு. மிகவும் குளிராக இருந்தது. அந்தக் குளிரிலும் ஒருவன் மாஸ்கோ நகரத் தெருக்களில் சுற்றிக்கொண்டிருந்தான். அவனுக்கு வயது பதினாறு. அவனது காதுகள் கேட்கும் திறனை இழந்தவை. இடையிடையே அவன் ஆகாயத்து நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கம்பளி ஆடைகள் எதையும் அணிந்திருக்கவில்லை. எனவே, அவன் உடல் குளிரால் நடுங்கியது. பசியாகவும் இருந்தது. ஆனால், அவன் எதையும் பொருட்படுத்தவில்லை. அவன் தீவிரமாக எதைப் பற்றியோ சிந்தித்துக்கொண்டிருந்தான்.
திடீரென்று, அவன் மனதில் ஒரு சிந்தனை உதித்தது. கயிற்றில் கட்டி சுழற்றியெறியப்பட்ட கல், கயிற்றிலிருந்து விடுபட்டு தூரத்திற்குச் சென்று விழுவதை அவன் பல முறை பார்த்திருக்கிறான். "அப்படியானால், பூமியுடன் சேர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிற என்னை, விண்வெளியில் எறிய பூமியால் முடியுமா? அப்படியென்றால், மனிதன் நட்சத்திரங்களை அடைந்துவிடலாமே!' இந்த சிந்தனையால் அவன் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டான்.
கான்ஸ்டான்டின் சையோல்கோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky) என்பதுதான் அவன் பெயர். பிற்காலத்தில் இவன்தான், மனிதர்களால் பூமியைவிட்டுப் பறந்துபோக முடியும் என்று நம்பி, அதை சாத்தியமாக்க முயன்ற விஞ்ஞானியாக மாறினான்.
சையோல் கோவ்ஸ்கியின் அறிவியல் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட தந்தை, படிப்பதற்காக அவரை மாஸ்கோவிற்கு அனுப்பினார். சையோல் கோவ்ஸ்கி, இயற்பியலிலும் கணிதத்திலும் நிறைந்த அறிவு பெற மாஸ்கோ நகர நூலகம் உதவியது.
மனிதனை விண்வெளியை அடையச் செய்வது என்ற கனவை அந்த இளைஞன் கைவிடவில்லை. நியூட்டனின் மூன்றாவது அசைவு விதியைப் பயன்படுத்தினால் விண்வெளியில் ராக்கெட்டைச் செலுத்தலாம் என்று நினைத்தார் சையோல்கோவ்ஸ்கி. அந்தக் கருத்தை முன்வைத்து ஆய்வு நடத்த முயற்சி செய்தார்.
1879-ஆம் ஆண்டு சையோல்கோவ்ஸ்கி பள்ளிக்கூட ஆசிரியரானார். குழந்தைகளுக்குப் பிரியமான ஆசிரியராக இருந்தார் அவர். விண்வெளிப் பயணம் தொடர்பான சிந்தனையும், வாசிப்பும் அப்போதும் தொடர்ந்தது. 1880-இல் மூன்று கட்டுரைகள் எழுதி அவர், செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் உள்ள "சொசைட்டி ஆஃப் பிஸிக்ஸ் அன்ட் கெமிஸ்ட்ரி' என்ற நிறுவனத்திற்கு அனுப்பினார். 20 வருடங்களுக்கு முன்பே உலகிற்குத் தெரிந்திருந்த ராக்கெட் தொழில்நுட்பத்தைக் குறித்துதான் அவர் தன் கட்டுரைகளில் எழுதியிருந்தார். 20 வருடங்களுக்கு முன்பே இந்த உலகத்திற்குத் தெரிந்த விஷயம் எதனாலோ அவருக்குத் தெரியாமல் போய்விட்டது.
1903- ஆம் ஆண்டு, புகழ் பெற்ற "சயின்டிஃபிக் ரிவ்யு' என்ற பத்திரிகையில் அவரது ஒரு கட்டுரை பிரசுரமானது. அது, ராக்கெட்டைப் பயன்படுத்தி விண்வெளியில் நடத்தக்கூடிய ஆராய்ச்சிகளைப் பற்றிய கட்டுரை. அதில், நவீன ராக்கெட்டைக் குறித்தான அற்புதமான விவரங்கள் இருந்தன. ராக்கெட்டின் முன்மாதிரி, பயன்படுத்த வேண்டிய பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் அதில் எழுதியிருந்தார். இதோடு சேர்த்து, விண்வெளி என்றால் என்ன என்றும் விளக்க முற்பட்டிருந்தார். விண்வெளியில் நேரிடக்கூடிய பிரச்னைகளைப் பற்றியும், பிறகு திரும்பி பூமியின் வாயு மண்டலத்தில் நுழையும்போது ஏற்படக்கூடிய சிரமங்களைப் பற்றியுமெல்லாம் அதில் விரிவாக விவாதித்திருந்தார். பிற்காலத்தில் இந்தக் கட்டுரையின் அடிப்படையில் உண்மையான ராக்கெட் தயாரிப்பது சோவியத் விஞ்ஞானிகளுக்குச் சுலபமாக இருந்தது.
ஆனால் அன்றைக்கு, அந்தக் கட்டுரை வெளிவந்த காலத்தில் யாரும் அதைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. அதுமட்டுமல்ல, அந்தக் கட்டுரை வெளிவந்த பத்திரிகையும் விரைவிலேயே நின்றுவிட்டது. 1918-இல், பதினைந்து வருடத்திற்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி பதவிக்கு வந்தபோதுதான், அவரது கட்டுரைக்கு அங்கீகாரம் கிடைத்தது. தொடக்கத்தில் தனக்கு ஏற்பட்ட தோல்விகளையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து தனது ஆய்வில் ஈடுபட்டிருந்ததும், பத்திரிகைகளில் தனது ஆய்வுகளைக் குறித்து இடைவிடாமல் எழுதிவந்ததுமே இந்த வெற்றிக்குக் காரணம்.
நன்றி தினமணி
0 comments:
Post a Comment