அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

பிரபஞ்சத்தின் தோற்றம் ...



பிரபஞ்சம் என்பது ஒரு அதி அடர்த்தியான பந்து போலத்தான் முதலில் உருவானதாகக் கருதப்படுகிறது. இந்த அடர்த்தியான 'பிரபஞ்ச முட்டை’ (Cosmic egg) தான் படுபயங்கரமான ஒரு வெடிப்பினால் அப்படியே விரிவடைந்து, இப்போது நாம் காணும் பிரபஞ்சமாக உருவாகியுள்ளது. 


இந்தக் கருத்தை முதலில் கூறியவர் பெல்ஜிய நாட்டு வானியல் வல்லுனர் ஜார்ஜ் லமாய்டர் (Georges Lemaitre) என்பவர் தான். இப்படி ஒரு சிறிய அதி அடர்த்தியான உடல் வெடித்து அதனால் பிரபஞ்சம் உருவான நிகழ்வை 'மகா வேட்டு’ அல்லது 'மகா வெடிப்பு’ (Big Bang) என்று அழைக்கின்றனர். இப்படி வெடித்ததனால் அந்த முட்டையின் பாகங்கள் எல்லாம் விண்வெளியில் வெகு தூரத்துக்கு சிதறடிக்கப்பட்டன. 


அப்படி சிதறின பாகங்கள் எல்லாமே விநாடிக்கு பல்லாயிரம் கிலோமீட்டர்கள் என்கிற வேகத்தில் இன்னும் பயணிக்கின்றன. இந்த சிதறின, விரைவாக நகரும் பருப்பொருட்கள் தான் பின்னர் காலக்சிகளாகவும், விண்மீன்களாகவும், கிரகங்களாகவும் உருவாகின. இப்போது கூட பிரபஞ்சத்தின் எல்லா உடல்களும் வேகமாக விரிவடைந்து கொண்டே தான் செல்கின்றன. இதனை 'விரிவடையும் பிரபஞ்சம்’ (Expanding Universe) என்று அழைக்கின்றனர். காலக்சிகள் என்பவை நம்மை விட்டு விலகிச் சென்று கொண்டே உள்ளன. 


வெகு தொலைவில் இருக்கும் டிம்மான காலக்சிகள் இன்னும் வேகமாக நம்மை விட்டு விலகிச் செல்கின்றன. அமெரிக்க வானியல் வல்லுனர் மில்டன் ஹ்யூமாசன் (Milton Humason) என்பவர் 1929ஆம் ஆண்டு நம்மை விட்டு விநாடிக்கு 3800 கிலோமீட்டர்கள் என்கிற வேகத்தில் விலகிச் செல்லும் ஒரு காலக்சியைக் கண்டு பிடித்தார்.


அவரே 1936ஆம் ஆண்டு விநாடிக்கு 40,000 கிலோ மீட்டர்கள் என்கிற வேகத்தில் விலகிச் செல்லும் இன்னொரு காலக்சியையும் கண்டார். எல்லா காலக்சிகளும் இப்படி ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்வது எதனால் என்கிற காரணம் வானியலாளர்களுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது. மேலும் காலக்சிகளின் தொலைவு அதிகமாகும் போது, அவை நம்மை விட்டு விலகிச் செல்லும் வேகமும் அதிகமாகிறது.


1929ஆம் ஆண்டு எட்வின் ஹப்புள் (Edwin Hubble) என்கிற அமெரிக்க வானியல் வல்லுனர் (நம் பால்வெளிகாலக்சி அல்லாமல் இன்னும் நிறைய இலட்சக்கணக்கான காலக்சிகள் பிரபஞ்சத்தில் உள்ளன என்று முதலில் சொன்னவர்) தான் இந்த விரிவடையும் பிரபஞ்சம் என்கிற கருத்தை முதலில் விளக்கினார். அவரது கருத்துப்படி முழு பிரபஞ்சமுமே சீராக விரிவடைகிறது. இதனால் காலக்சிகள் கூட ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன.


'மகா வெடிப்பு’ என்கிற நிகழ்வு தான் பிரபஞ்சத்தின் ஆரம்பம் என்று முன்பே கண்டோம். அப்படியானால் அந்த நிகழ்வு எப்போது நிகழ்ந்தது என்று கேள்வி எழலாம். காலக்சிகளுக்கிடையேயான சராசரி தொலைவு, அவை ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்லும் வேகம் இவை தெரிந்தால், அவை எல்லாமே எப்போது ஒரே முட்டைக்குள் அடர்த்தியான பொருளாக அடங்கி இருந்தன என்று பின்னோக்கி கணக்கிட முடியும். ஆனால் காலக்சிகளுக்கிடையேயான சராசரி தூத்தைக் கணக்கிடுவது, கடினமான காரியம். மேலும் அவை எவ்வளவு வேகத்தில் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன என்பதை அறிவதும் கடினம் தான். 


மேலும் இந்த விலகும் வேகம் கூட எல்லாச் சமயங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இதனால் மேற்கூறிய எல்லாவற்றுக்கும் சில அனுமானக் கணக்குகளை வைத்து ஹப்புள் என்பவர் கணக்கிட்டு பிரபஞ்சம் என்பது 2 பில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியிருக்கக் கூடும் என்று சொன்னார். ஆனால் புவியியல் வல்லுனர்கள் மற்றும உயிரியல் ஆராய்ச்சியாளர்களின் கணக்குப் படி நம் தாய் கிரகமான பூமியே 2 பில்லியன் வருடங்களுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டிருந்தது. எனவே பிரபஞ்சம் என்பது நிச்சயம் பூமியை விடவும் வயதானதாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.


தற்போது நிலவும் கருத்துப்படி பிரபஞ்சம் உருவாகக் காரணமான 'மகா வேட்டு’ என்ற நிகழ்வு சுமார் 15 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்திருக்க வேண்டும் எனப்படுகிறது. நம் சூரியக் குடும்பம் என்பது வெறும் 5 பில்லியன் வருடங்களாகத்தான் பிரபஞ்சத்தில் உள்ளது. சூரியக் குடும்பம் பிறப்பதற்கு முன்பு 10 பில்லியன் வருடங்கள் பிரபஞ்சம் என்பது இருந்து வந்துள்ளது. 'மகா வேட்டு’ அல்லது 'மகா வெடிப்பு’ என்ற வார்த்தையை முதலில் உருவாக்கியவர் அமெரிக்க வானியல் வல்லுனர் ஜார்ஜ் கேமோ (George Gamov) என்பவர்தான். 


அவர் தான் பிரபஞ்சம் உருவாகக் காரணமான நிகழ்வை இப்பெயரிட்டு அழைத்தார். உண்மையில் இந்த பெரு வெடிப்பை நம்மால் காண முடியுமா என்ற கேள்வி எழலாம். ஒரு விண்மீன் நம்முடைய பூமியில் இருந்து 10 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த விண்மீன் இரவு நேரத்தில் கண்  சிமிட்டும் சிறு ஒளிக் கற்றையாக நம் கண்ணுக்குத் தெரிகிறது. உண்மையில் நாம் பார்க்கும் அந்த ஒளி 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விண்மீனில் இருந்து கிளம்பியிருக்க வேண்டும். அப்போது தான் அதன் ஒளியை நாம் இப்போது காண முடிகிறது. 


நாம் வெகு தொலைவு பின்னோக்கிச் செல்லும் போது கூட, இந்த மகா வெடிப்பை காண முடிவதில்லை. தற்போது 'குவாசர்கள்’ என்கிற ஒரு பிரகாசமான பொருட்களை விண்ணில் வானவியல் வல்லுனர்கள் கண்டுள்ளனர். இவற்றிலிருந்து வரும் ஒளி 15 பில்லியன் வருடங்களுக்கு முன்பு கிளம்பி தற்போது தான் பூமியை வந்தடைந்திருக்கிறது. அதாவது அவை பிரபஞ்சம் தொடங்கின காலத்திற்கு சற்று பின்னால் இருந்திருக்கினறன. இப்படி குவாசர்களின் ஒளி நம்மை அடையும் போது, மகாவேட்டின் போது உண்டாகியிருக்கும் ஒளியை ஏன் நம்மால் உணர முடியவில்லை என்ற கேள்வி எழுந்தது.


1949&ஆம் ஆண்டு ஜார்ஜ் கேமோ இதற்கான விடையை அளித்தார். மகா வெடிப்பின் எதிரொளியாக அதிலிருந்து கிளம்பின ஆற்றல் 'மைக்ரோ அலைகளாக’ (Micro waves) இப்போது எல்லாத் திசைகளிலும் பரவியுள்ளது என்று அவர் சொன்னார். மேலும் இந்த மைக்ரோ அலைகளின் ஆற்றல் அளவையும் அவர் ஓரளவு அனுமானித்துச் சொல்ல முடிந்தது. இப்படி மகாவேட்டின் போது உண்டான ஆற்றல் மைக்ரோ அலைகள் ரூபத்தில் விண்வெளியின் எல்லாத் திசைகளிலும் சமமான அளவிலும் சமமான ஆற்றலுடன் விரவியுள்ளன. கேமோ அனுமானித்ததை அமெரிக்க வானியல் வல்லுனர்கள் ஆலன் பென்சையஸ் (Allan Penzias)  மற்றும ராபர்ட் வில்சன் (Robert Wilson) ஆகியோர் 1964&ஆம் ஆண்டு நிரூபித்தனர்.


பிரபஞ்சம் என்பது முதன் முதலாக ஒரு அதி அடர்த்தியான முட்டையாக இருந்தது என்றும், இப்போது பிரபஞ்சத்தில் நாம் காணும் எல்லா காலக்சிகளும் விண்மீன்களும் குவாசர்களும் ஆற்றல்களும் அந்த சிறிய முட்டைக்குள் தான் அடங்கியிருந்தன என்றும் நாம் கண்டோம்.


இந்த முட்டை அதி வெப்பமாகவும் அதி அடர்த்தியாகவும் இருந்து வெடித்ததனால் தான் பிரபஞ்சம் என்று இன்றைக்கு நாம் காண்கின்ற எல்லாமே (மனிதன், புல், பூண்டு, சூரியன், நிலா, காலக்சி) உருவானது என்றும் நாம் பார்த்தோம். அப்படியானால், இந்த பிரபஞ்ச கரு முட்டை எப்படி உருவாகியிருக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம்.


பிரபஞ்சத்தை உருவாக்கியது இந்த கரு முட்டை. இந்தக் கரு முட்டையை உருவாக்கியவன் தான் கடவுள் என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் தற்கால விஞ்ஞானம் என்பது கடவுள் என்ற வார்த்தையை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டது. மனித விஞ்ஞானம் எந்தக் கருத்தையும் இப்படி கடவுளிடம் விட்டு விட்டு சும்மா இருப்பதில்லை. அறிவின் மூலமாகவும் 'Reasoning’ எனப்படும் அறிவாராய்ச்சியின் மூலமாகவும் மனிதன் இயற்கையின் ஆச்சர்யங்களுக்கு விடை தேடுகிறான். பிரபஞ்ச கரு முட்டையை கடவுள் உருவாக்கினார் என்று சொல்லி சும்மா இருக்க விஞ்ஞானம் விரும்பவில்லை.


1980ஆம் ஆண்டு அமெரிக்க இயற்பியல் வல்லுனர் ஆலன் கூத் (Alan Guth) என்பவர் இந்தக் கேள்விக்கான விடையை 'குவாண்டம் இயற்பியல்’ (Quantum Mechanics) என்கிற ஒரு துறையின் மூலமாக காண முற்பட்டார். அவரது கருத்துப்படி மகா வெடிப்புக்கு முன்னிருந்த பிரபஞ்சம் வெறுமனே ஒரு வெற்று வெளிதான். அதாவது அதிக ஆற்றலைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு வெற்றிடமாகத் தான் இந்தப் பிரபஞ்சம் இருந்திருக்கிறது. இதை இவர் 'போலி வெற்றிடம்’ (False Vacuum) என்று அழைத்தார். அதாவது வெற்றிடம் போல இருந்தாலும் அதில் அபரிமிதமான ஆற்றல் உள்ளார்ந்து நிறைந்திருந்தது. அதனால் ஆரம்ப பிரபஞ்சத்தை வெறுமனே வெற்றிடம் என்று சொல்ல முடியவில்லை.


ஒரு சில குருட்டாம் போக்கான நிகழ்வு மாற்றங்களால் இந்த ஆரம்ப ஆற்றல் வலிமையாக இருந்த இடங்களில் எல்லாம் சில தோற்றக் கூறுகள் உருவாகியிருக்க வேண்டும். அதாவது கடலில் எப்படி அலைகள் நுரையை உருவாக்குகின்றனவோ, அதே போல எல்லையற்ற, ஆற்றல் வாய்ந்த போலி வெற்றிடத்தில் ஆங்காங்கே எல்லையற்ற, ஆற்றல் வாய்ந்த போலி வெற்றிடத்தில் ஆங்காங்கே சில தோற்றங்கள் உருவாகின. இவற்றில் சில தோற்றங்கள் உண்டாகின அதே வேகத்திலேயே மறைந்து, மீண்டும் போலி வெற்றிட ஆற்றலாக மாறி விட்டன. இவ்வாறு ஆதி ஆற்றலில் இருந்து உருவான ஒரே ஒரு தோற்ற நுரை மட்டும் எப்படியோ சில காரணங்களால் நாம் வாழும் பிரபஞ்சமாக விரிவடைந்து இருக்க வேண்டும்.


மேலே ஆலன் கூத் சொன்னவை எல்லாமே ஏதோ விஞ்ஞானக் கதைகளில் வரும் நிகழ்வுகள் போலத்தான் இருக்கிறது. விஞ்ஞானம் என்பது இன்னும் Ultimate  எனப்படுகின்ற இறுதியான விதிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. விஞ்ஞானம் என்பது நிறைய அனுமானங்களை முன்னே வைக்கிறது. பின் அவற்றை நிரூபிக்க முயற்சிக்கிறது. எதுவும் இதில் உறுதி இல்லை. ஆலன் கூத்தின் கருத்துக்கள் கூட இன்னும் விஞ்ஞானிகளிடையே ஒரு புதிராகவே உள்ளது. கூத்தின் தியரி சரி என்று வைத்துக் கொண்டாலும் கூட, பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு இருந்து இந்த 'போலி வெற்றிடம்’ எங்கே இருந்து உருவாகியிருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. 


இப்படி பின்னோக்கி சென்று பிரபஞ்சத்தின் தொடக்கம் பற்றிய அறிய முற்படுவதில் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளது. அந்த 'போலி வெற்றிடம்’ என்பது கடவுளின் படைப்பு என்று வைத்துக் கொண்டால், 'கடவுள் என்பவரை யார் படைத்தது என்று சிலர் கேள்வி எழுப்பினர். கடவுள் நிரந்தரமாக எப்போதும் இருப்பவர் என்ற பதில் விஞ்ஞானிகளிடையே அவ்வளவாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.



Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.