“ஒரு அடி உசரம், தேங்காய் சைசுக்கு மண்டை, விரல் அளவு மட்டுமே நீளம் கொண்ட கை.. புதையலை காவல் காக்க மந்திரவாதிகள் ஏவி விட்ட குட்டிச் சாத்தான் வானத்துக்கும் பூமிக்குமா எகிறி எகிறி குதிக்கிறது..” கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பலரும் இப்படித்தான் பீதியில் சொல்கின்றனர். குட்டிச்சாத்தான் பீதிக்கு அப்பகுதியினர் சொல்லும் விளக்கம் இதுதான்..
மன்னர்கள் ஆட்சியின்போது தலைநகராக விளங்கிய இடம் சூளகிரி. திப்பு சுல்தான் போன்ற மன்னர்கள் இங்கு கோட்டை கட்டி ஆட்சி செய்துள்ளனர். ராஜ குடும்பத்தினர், போரில் வீர மரணம் அடைபவர்களின் உடல்களை இங்குள்ள மலை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் புதைத்து வைத்துள்ளனர். செல்வ செழிப்பும், தங்கம், வைரம் என தாராளமாய் கொட்டிக்கிடந்த காலம் அது. இறந்தவர்களின் உடலுடன் அவற்றையும் சேர்த்து கல்லறைகளில் வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதுபோல சூளகிரி மலைப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கல்லறைகள் உள்ளன.
இது மட்டுமல்லாமல், ஒரு மலை மீது வெட்ட வெளியில் பலகை கற்களால் நாலாபுறமும் அடைக்கப்பட்ட கல்லறைகளும் உள்ளன. காலப்போக்கில் பலகை கற்கள் உடைந்ததில்.. தற்போது மண்ணுக்குள் புதைந்து கிடந்த கல்லறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. இதை மோப்பம் பிடித்த மந்திரவாதிகளும், மை போட்டு பார்க்கும் சூனியக்காரர்களும் சூளகிரிக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். கல்லறையில் வைக்கப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள், ஆடைகள் போன்றவற்றை வெளியாட்கள் யாரும் நெருங்க முடியாது. ஆவிகள் அதை சுற்றிச் சுற்றியே அலைந்துகொண்டிருக்கும். ஆனால், பிரத்யேக பூஜைகள் செய்து அவற்றை விரட்டிவிட்டு புதையலை எடுக்க வருகிறது மந்திரவாதிகள் கும்பல்.
கல்லறையை கண்டுபிடிப்பதும் அதற்குள் உறங்கி கிடக்கும் ஆவியை வெளியேற்றுவதும் சாதாரணமான விஷயமல்ல. இரவு 10 மணிக்கு மேல் ஊர் மக்கள் உறங்கிய பிறகு மந்திரவாதிகள் ஓசையின்றி படையெடுக்கின்றனர். கல்லறை இருக்கும் இடத்தை யூகித்து கண்டுபிடிக்கின்றனர். ஆனால், குறிப்பாக எந்த இடம் கல்லறை என்று கண்டுபிடிப்பதற்குள் இரவாகிவிடுகிறது. அதற்குப் பிறகு உடனே பூஜை செய்ய முடியாது என்பதால் அடுத்த நாள்தான் பூஜை நடத்துகின்றனர். அதுவரை கல்லறை நகைகளை காப்பாற்றுவதற்கும் உலவும் ஆவிகளை அடக்கி வைப்பதற்காகவும் குட்டிச்சாத்தானை காவலுக்கு ஏவிவிடுகின்றனர் மந்திரவாதிகள்.
வரும் மந்திரவாதிகள் எல்லாம் ஆளுக்கொரு குட்டிச்சாத்தானை ஏவுவதால் அப்பகுதியில் அவற்றின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. விவரம் தெரியாமல் அப்பகுதிக்கு செல்லும் அப்பாவி பொதுமக்கள் குட்டிச்சாத்தானின் சேட்டைக்கு இலக்காகி விடுகின்றனர். சூளகிரியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மனைவி முனிரத்தினம்மா காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதை பார்த்தார். கிட்டே சென்று பார்த்துள்ளார். மண் கலசங்கள், வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பொரி கடலை, எலுமிச்சம்பழம் ஆகியவை சிதறிக் கிடந்துள்ளன. முந்தைய நாள்தான் அங்கு மந்திரவாதிகள் ஆவிகளை அடக்கும் பூஜையை செய்துள்ளனர். இது தெரியாமல் கல்லறைக்கு அருகே சென்று பார்த்த முனிரத்தினம்மாவை ஏதோவொரு சக்தி திடீரென தூக்கி வீசியது.
மயங்கி விழுந்தவர் விழுந்தவர்தான். வெகு நேரம் கழித்து நினைவு திரும்பியது. உடல் முழுவதும் வியர்த்துப் போயிருந்தது. நடக்க முடியவில்லை. கை, கால்கள் வீங்கியிருந்தன. மிகவும் சிரமப்பட்டு தவழ்ந்தபடியே வீடு போய்ச் சேர்ந்தார். கல்லறைக்கு அருகில் என்ன நடந்தது என்பதுகூட அவருக்கு தெளிவாக நினைவில்லை. பிரமை பிடித்ததுபோலவே இருந்தார். குடும்பத்தினர் பீதியடைந்தனர். மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர். முனிரத்தினம்மாவை உற்றுப் பார்த்தார் மந்திரவாதி.
இது குட்டிச்சாத்தான் வேலை என தெரிந்துகொண்டார். சில மந்திரங்கள் சொல்லி விபூதியை முகத்தில் வீசினார். அவ்வளவுதான்.. நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல குலுங்கிய முனிரத்தினம்மா அதே இடத்தில் விழுந்தார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தது. பழைய முனிரத்தினம்மாவாக கண் விழித்தார். “ஒரு அடி உசரம், தேங்காய் சைசுக்கு தலை, விரல் அளவு மட்டுமே நீளம் கொண்ட கை.. இந்த உருவம்தான் குட்டிச்சாத்தான். வானத்துக்கும் பூமிக்குமா எகிறிக் குதிக்கும். அதை சாதாரணமா நெனைக்காதீங்க. பயங்கரமானது, கொடூரமானது.
அதை அடக்கவே முடியாது” என்றார் மந்திரவாதி. அதைக் கேட்டு பீதியில் உறைந்து போயினர். சூளகிரி காட்டுப் பகுதிக்கு மக்கள் போவதே இல்லை. தெரியாமல் சென்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மந்திரம் செய்துதான் குட்டிச்சாத்தானை விரட்டவேண்டி உள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள் பீதி அடங்காமல்.
0 comments:
Post a Comment