ரயில் நிலையங்களிலும், முக்கியமான சில அரசு அலுவலகங்களிலும் நுழைவாயிலுக்குப் பக்கத்தில் மரத்தால் ஆன ஒரு சட்டகத்தை (இது கதவு நிலையைப் போன்று பெரிதாக இருக்கும்) வைத்திருப்பார்கள். இதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த சட்டகத்திலிருந்து நிறைய ஒயர்கள் வெளியே செல்லும்.
சட்டகத்தின் மேற்பகுதியில் மெட்டல் டிடெக்டர் என்று எழுதப்பட்டிருக்கும். இந்த சட்டகத்தின் வழியே செல்பவர்கள் யாராவது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வெடி குண்டுகளையோ,ஆயுதங்களையோ வைத்திருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. குண்டுகளையோ, ஆயுதங்களையோ செய்ய குறிப்பிட்ட அளவு உலோகம் தேவைதானே? அப்படி, உலோகங்களால் செய்யப்பட்ட ஆயுதங்கள் ஒருவரிடம் இருக்கின்றனவா என்று இந்தக் கருவியின் மூலம் சுலபமாகக் கண்டுபிடித்துவிடுகின்றனர். இதனால்தான் இது "மெட்டல் டிடெக்டர்' என்று அழைக்கப்படுகிறது.
இதே போன்று, காவல் துறையினர் தங்கள் கையில் நீள் வட்டவடிவிலான ஒரு கருவியை வைத்திருப்பார்கள். இது மெட்டல் டிடெக்டரின் இன்னொரு வகை. இந்தக் கருவி சிறிதாக எளிதில் எங்குவேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இருக்கும். இதை ஒருவரின் உடலுக்கு அருகிலும், அவர் வைத்திருக்கும் பைகளின் மீதும் காட்டுவதன் மூலம் அவரிடம் அபாயகரமான பொருட்கள் ஏதும் இருக்கின்றனவா என்று கண்டுபிடிக்கின்றனர். பெரிய ஆபத்து எதுவும் ஏற்படாமல் தடுப்பதற்காகத்தான் இப்படி முன்னெச்சரிக்கையாக இருக்கிறார்கள்.
சரி, ஒருவர் மறைத்து வைத்திருக்கும் உலோகத்தை ஒரு சிறிய கருவி எப்படிக் கண்டுபிடிக்கிறது? ஒரு காந்தத் துண்டின் அருகே குண்டூசியையோ, ஊக்கையோ கொண்டு சென்றீர்கள் என்றால் அதைக் காந்தம் ஈர்க்கும். பக்கத்தில் வைத்தால், இழுத்து தன் மீது ஒட்டிக்கொள்ளும். காந்தத்தின் சுற்றுப்புறத்தில் உருவாகும் காந்தப் புலத்தால் இந்த ஈர்ப்புத் தன்மை உருவாகிறது. இப்படியாக பெரும்பாலான இரும்புக் கலப்பு உலோகங்கள் காந்தப் புலத்தின் அருகே செல்லும்போது, அந்தக் காந்தப் புலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன (காந்தப் புலம் என்பது, காந்தத்தின் ஈர்ப்பு விசை பரவியிருக்கும் பரப்பாகும்).
குளத்தில் கல்லை விட்டெறிந்தால், அதன் தொடர் விளைவாக அலை அலையாக நீர் பரவுகிறது அல்லவா? இதைப் போலத்தான், காந்தமும் சுற்றுப்புறத்தில் தன் ஈர்ப்புத்தன்மையை அலை அலையாகப் பரவவிட்டிருக்கும்.
மெட்டல் டிடெக்டர் எனப்படும் உலோகத்தைக் கண்டறியும் கருவிகளில், மின்சாரம் செல்லும் சர்க்யூட் பாதைகள் மிகவும் நுட்பமான வகையில் அமைக்கப்பட்டிருக்கும். காந்தப் புலங்களில் மிகவும் நுணுக்கமாக ஏற்படும் பாதிப்புகளைக்கூட உணர்ந்து எச்சரிக்கை ஒலியெழுப்பும் வகையில் அந்தக் கருவி தயார் செய்யப்பட்டிருக்கிறது.
கையடக்கமாக உள்ள மெட்டல் டிடெக்டரில் "காயில்' எனப்படும் இரண்டு கம்பிச் சுருள்கள் இருக்கும். இவை இரண்டும் ஒரே சக்திகொண்ட காந்தப் புலங்களை உருவாக்கும் திறன்கொண்டவை. இந்தக் கருவியின் அருகே ஒரு உலோகப் பொருள் வந்தால், ஒரே வகையிலான ஈர்ப்புத்தன்மையைக் கொண்ட அந்தக் காந்தப் புலங்களின் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. அது மின்கம்பிச் சுருளுக்குக் கடத்தப்பட்டு எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது.
வேறு சில மெட்டல் டிடெக்டர்களில், மின்கம்பிச் சுருள்கள் காந்தப் புலங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, சுற்றுப்புறத்தில் உள்ள இயற்கையான காந்தப் புலத்தில் ஏற்படும் பாதிப்புகளை கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கதவு நிலை வடிவத்தில் உள்ள மெட்டல் டிடெக்டர் அப்படித்தான் செயல்படுகிறது.
அந்தக் கதவு நிலையில் தொடர்ச்சியான மின்கம்பிச் சுருள்கள் இருக்கும். அவை சுற்றுப்புற காந்த ஈர்ப்பில் ஏற்படும் மாறுபாடுகளைக் கவனித்து, அதற்கேற்ப எச்சரிக்கை ஒலியை எழுப்புகின்றன.
இதைப்போல பூமிக்கு அடியில் மிகப் பெரிய காந்தப்புலம் இருக்கிறது. இது வடக்கு -தெற்காக இருக்கிறது. இதை உணர்ந்துகொண்டுதான் பல பறவைகள் வடகில் உள்ள நாடுகளிலிருந்து தென்னிந்தியாவிற்கு (பழவேற்காடு ஏரி, வேடந்தாங்கல், கோடியக்கரை, கூத்தங்குளம் ஆகிய பகுதிகளுக்கு) குளிர்காலத்தில் வலசை வருகின்றன.
நன்றி தினமணி
5 comments:
அற்புதமான அறிவுசார் தேடல்....
//ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
அற்புதமான அறிவுசார் தேடல்...//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜனகன்
nallayirukku... usefull article....
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி முகமட்
முகமட் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை காண்கிறேன்.
Post a Comment