மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை (Three Gorges Dam) யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்ட்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒர் அணையாகும். இந்த அணை சீனாவின் ஹுபய் (Hubei) மாகாணத்திலுள்ள யில்லிங் (Yiling) மாவட்டத்திலிருக்கும் சான்டோப்பிங் (Sandouping) நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இதுவே உலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமாகும்.
அணைக் கட்டமைப்பு 2006ல் கட்டிமுடிக்கப்பட்டது. அக்டோபர் 30, 2008 அன்று கரையில் இருந்த 26வது மின்னியக்கி வணிக நோக்கில் செயல்படதொடங்கிய போது கப்பல் உயர்த்தும் பகுதியை தவிர மூல திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் கட்டிமுடிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மின்னியக்கியும் 700 மெகாவாட் திறனுடையது.
நிலத்துக்கடியில் உள்ள ஆறு மின்னியக்கள் 2011ம் ஆண்டுக்கு முன் முழு செயல் பாட்டுக்கு வராது. அணையின் 32 முதன்மை மின்னியக்களையும் 50 மெகாவாட் திறனுடைய இரண்டு சிறிய மின்னியக்கிகளையும் சேர்த்தால் அணையின் மின் உற்பத்தி நிலையத்தின் மொத்த திறன் 22.5 ஜிகாவாட் ஆகும்.
இந்த அணை திட்டத்தால் மின்சார உற்பத்தி மற்றும் வெள்ளக்கட்டுப்பாடு தவிர ஆற்றில் பெரிய கலன்கள் செல்லும் வசதியும் கிடைக்கிறது.
சீன அரசாங்கம் இத்திட்டத்தை வரலாற்று சிறப்புமிக்க பொறியியல், சமூக, பொருளாதார வெற்றியாகக் கருதுகிறது . எனினும் அணையினால் பல தொல்பொருள், பண்பாட்டு இடங்கள் நீரில் மூழ்கிவிட்டன. 1.3 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். மேலும் இதனால் குறிப்பிடத்தக்க வகையில் சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டது; நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகின.. இந்த அணையானது சர்ச்சைக்குரியதாகவே சீனாவிலும், வெளிநாடுகளிலும் பலரால் பார்க்கப்படுகிறது .
பெயர்க் காரணம்
யாங்சே ஆற்றில் அமைந்துள்ள குடாங் (Qutang) ஆழ்பள்ளத்தாக்கு, வூ (wu)ஆழ்பள்ளத்தாக்கு, ஜில்லிங் (Xiling) ஆழ்பள்ளத்தாக்கு ஆகியவை மூன்று ஆழ்பள்ளத்தாக்கு பகுதி என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் அமைந்த காரணத்தால் இது மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை என அழைக்கப்படுகிறது. இவ்வணை ஆழ்பள்ளத்தாக்குகளிலேயே மூன்றாவதாக உள்ளதும் நீளம் மிக்கதுமான ஜில்லிங் (Xiling) ஆழ்பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது.
வரலாறு
இந்த அணை திட்டமானது 1919ம் ஆண்டு சன் யாட்-சென் (Sun Yat-sen ) மனதில் தோன்றியது . மூன்று ஆழ்பள்ளத்தாக்கு பகுதியின் கீழ்புறத்தில் அமையும் இவ்வணையினால் 30 மில்லியன் (22,371 மெகாவாட்) குதிரைசக்தி திறன் கொண்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று கூறினார். 1932ல் சியங் கை-சேக் (Chiang Kai-shek)னால் வழி நடத்தப்பட்ட தேசிய அரசாங்கம் அணை தொடர்பாக மூன்று ஆழ்பள்ளத்தாக்கில் தொடக்க கட்ட வேலைகளை மேற்கொண்டது. 1939ல் யிசாங் (Yichang) பகுதியை கைப்பற்றிய யப்பானிய இராணுவம் அணை கட்டப்படும் பகுதியை மதிப்பீடு செய்தது. சீனாவை யப்பான் வெற்றி கொள்ளும் என்ற எதிர்பார்ப்பில் யப்பானியர்கள் அணைக்கான ஒட்டானி திட்டம் என்ற வடிவமைப்பை தயாரித்திருந்தார்கள் . 1944ல் ஐக்கிய அமெரிக்காவின் நிலச்சீராக்க செயலகத்தின் தலைமை வடிவமைப்பு பொறியாளர் ஜான் எல் சாவஜ் (John L. Savage) இப்பகுதியை மதிப்பீடு செய்து யாங்சே ஆற்று திட்டம் என்ற பெயரில் அணைக்கான கருத்துருவை முன்மொழிந்தார் . இதைத்தொடர்ந்து 54 சீன பொறியாளர்கள் ஐக்கிய அமெரிக்காவிற்கு பயிற்சிக்காக சென்றனர். அவர்கள் பல்வேறு துறைகளில் பயிற்சியை முடித்த பொழுது சீன உள்நாட்டு போர் காரணமாக 1947ல் இவ்வேலை தடைபட்டது.
1949ல் பொதுவுடைமைவாதிகள் பெற்ற வெற்றியையடுத்து மா சே துங் இத்திட்டத்தை ஆதரித்தார். எனினும் ஜிஜோப (Gezhouba) அணை திட்டமானது முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பண்பாட்டு புரட்சி, முன்னோக்கி செல்லுதல் போன்ற நடவடிக்கையினால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களினால் இவ்வணை திட்டம் தள்ளிப்போடப்பட்டது. 1958ல் நூறு மலர்கள் இயக்கத்தை அடுத்து இத்திட்டத்திற்கு எதிராக கருத்து கூறிய சில பொறியாளர்கள் சிறை வைக்கப்பட்டனர் .
1980ம் ஆண்டுவாக்கில் இத்திட்டம் தொடர்பான கருத்து மீண்டும் ஆட்சியாளர்களின் கவனத்தை பெற்றது. 1992ல் தேசிய மக்கள் காங்கிரசு இந்த அணை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. பணிகள் டிசம்பர் 14, 1994அன்று தொடங்கின. அணையானது 2009ல் முழு இயக்கத்தை தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் கப்பல் உயர்த்தி மற்றும் நிலத்துக்கடியில் வைக்கப்படும் ஆறு மின்னியக்கிகள் போன்றவற்றால் 2011க்கு முன் முழு இயக்கத்தை அடையாது என்று எதிர்பார்கப்படுகிறது. 2008ல் கட்டப்படும் அணையினால் நீர்மட்டம் 172.5 மீட்டர் (566 அடி) உயர்த்தப்பட்டது.
யாங்சே ஆற்றில் அணையின் இருப்பிடம் & பல பெரிய நகரங்கள்
அணையின் சுவரானது பைஞ்சுதையினால் ஆக்கப்பட்டது. இச்சுவரின் நீளம் 2,309 மீட்டர் (7,575 அடி) உயரம் 185 மீட்டர் (607 அடி)ஆகும். அணையின் அடியில் இச்சுவர் 115 மீட்டர் (377 அடி) தடிமனாகும் மேல் பகுதியில் 40 மீட்டர் (131.2 அடி)தடிமனாகும். இத்திட்டத்திற்காக 27,200,000 கன மீட்டர் (35,600,000 கன அடி) பைஞ்சுதையும், 463,000 டன் இரும்பும் பயன்படுத்தப்பட்டது, இந்த இரும்பைக்கொண்டு 63 ஈபிள் கோபுரங்களை உருவாக்க முடியும், இதனால் தோன்டப்பட்ட மண்ணின் அளவு 102,600,000 கன மீட்டர் (134,200,000 கன அடி) . கப்பல் உயர்த்தி அணையின் வலப்பக்கத்தில் தனக்கென தனி நீர்ப்பாதையை கொண்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் கடல் மட்டத்தை விட 175 மீட்டருக்கு (574 அடி) அதிகமாக(110 மீட்டர் அல்லது 361 அடி கீழ்நிலை ஆற்றின் மட்டத்தைவிட) உள்ளபோது அணை உருவாக்கிய நீர்தேக்கமானது சராசரியாக 660 கிமீ (410 மைல்)நீளம் மற்றும் 1.12 கிமீ (0.70 மைல்) அகலம் இருக்கும்.
மின் உற்பத்தியும் பகிர்வும்
மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணையானது உலகின் பெரிய நீர்மின்சார உற்பத்தி நிலையத்தை உடையதாகும். இதன் மொத்த திறன் 22,500 மெகாவாட் ஆகும். இதில் 34 மின்னியக்கிகள் உள்ளன. 700 மெகாவாட் திறனுடையவை 32 ஆகும், இரண்டு 50 மெகாவாட் திறனுடையவை. இந்த 32ல் 14 அணையின் வடபுறமும் 12 தென்புறமும் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆறு தென் பகுதியில் உள்ள மலைக்கடியில் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு ஆண்டுக்கு 100 TWh க்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னியக்கிகள்
முதன்மை மின்னியக்கிகள் ஒவ்வொன்றும் 6,000 டன் எடை கொண்டிருப்பதுடன் 700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மின்னியக்கிகளின் நிலை மட்டம் 80.6 மீட்டர்(264 அடி) இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்னியக்கிகளில் செல்லும் நீரின் அளவு அதன் நிலை மட்டத்தை பொறுத்து 600–950 கன மீட்டர்(780–1,240 கன யார்டு) ஆக இருக்கும். நிலை மட்டம் பெரியதாக இருந்தால் அது அதிக அளவு ஆற்றலைப் பெறக் குறைந்த நீரே போதும். இங்கு ஃபிராண்சிஸ் விசைச்சுழலி பயன்படுத்தப்படுகிறது. விசைச்சுழலியின் விட்டம் 9.7/10.4 மீட்டர்; சுழற்சி வேகம் நிமிடத்திற்கு 75 ஆகும். மின்னியக்க நிறுத்தியின் வெளிப்புற விட்டம் 21.4/20.9 மீட்டரும் உட்புற விட்டம் 18.5/18.8 மீட்டரும் ஆகும். இதன் உயரம் 3.1/3 மீட்டர் ஆகும். இதுவே இவ்வகையான மின்னியக்க நிறுத்திகளில் பெரியதாகும்.
ஃபிராண்சிஸ் விசைச்சுழலி
உயிர்ப் பல்வகைமை
அழிவுறும் நிலையிலுள்ள சைபீரிய நாரைகள் உலகில் இன்னும் 3,000 - 4,000 இருப்பதாக கருதப்படுகிறது. இவற்றில் பல குளிர்காலத்தில் இப்பகுதியிலுள்ள சதுப்புநிலத்தில் தங்கும், அணை உருவாக்கம் அந்த நிலங்களை அழித்துவிட்டது. யாங்சே ஆற்று டால்பினான பாய்ஜி அழிவதற்கு அணையும் ஓரளவுக்குக் காரணமாகும்
நிலநடுக்கம் & நிலச்சரிவு
நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியில் இந்த அணை அமைந்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்படும் நிலஅதிர்வும் அணையில் தேக்கப்பட்டுள்ள நீரின் எடையும் சேரும் போது அணையின் மேல்பகுதியில் உடைப்பு ஏற்படலாம். உயரும் நீர்மட்டத்தால் ஏற்படும் மண்அரிப்பு காரணமாக அடிக்கடி பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. மே 2009ம் ஆண்டு ஏற்பட்ட இரண்டு நிலச்சரிவுகளில் முறையே 50,000 மற்றும் 20,000 கன மீட்டர் (65,000 and 26,000 கன யார்டு) மண் ஆற்றில் விழுந்தது.
மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணையின் நீள் தோற்றம்
வெள்ளக்கட்டுப்பாடு
அணை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 22 கன கிமீ (18 மில்லியன் ஏக்கர் அடி) ஆகும். இந்த கொள்ளளவின் காரணமாக பத்து அல்லது நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆற்றின் கீழ்பகுதியில் ஏற்படும் வெள்ளத்தின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் அவற்றின் பாதிப்பை இந்த அணை வெகுவாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாங்சா ஆற்றில் 1954ல் ஏற்பட்ட வெள்ளத்தால் 33,169 மக்கள் உயிரிழந்தார்கள், 18,884,000 மக்கள் இடம் பெயர்ந்தார்கள். எட்டு மில்லியன் மக்கள் தொகையுடைய வுஹன் (Wuhan) நகரமானது மூன்று மாதங்களுக்கு நீரால் சூழப்பட்டிருந்தது. ஜின்ஜிகுவாங் (Jingguang) தொடருந்து சேவை 100 நாட்களுக்கு செயல்படவில்லை. 1954ல் ஏற்பட்ட வெள்ளத்தில் 50 பில்லியன் கன மீட்டர் நீர் வந்ததாக அறியப்படுகிறது.
1998ல் இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல பில்லியன் டாலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டது, 2,039 சதுர கிமீ (787 சதுர மைல்) அளவில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இதில் 2.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டார்கள், 1,526 மக்கள் உயிரிழந்தார்கள். இது 40 ஆண்டுகளில் வட சீனத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளமாக கருதப்படுகிறது.
ஆகஸ்ட் 2009ல் ஏற்பட்ட வெள்ளம் அணை வழியே சென்றதால் வெள்ளத்தின் கடுமை குறைக்கப்பட்டு வினாடிக்கு 40,000 கன மீட்டர் நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 1, 2009ல் 145.13 மீட்டராக இருந்தது ஆகஸ்ட் 8, 2009ல் 152.88 மீட்டராக உயர்ந்தது. 4.27 பில்லியன் கன மீட்டர் வெள்ள நீரானது அணையினால் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 15,000 கன மீட்டராக குறைக்கப்பட்டதால் ஆற்றின் கீழ்பகுதி வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றப்பட்டது.
2003லிருந்து இந்த அணையிலிருந்து வறட்சி காலத்தில் 11 பில்லியன் கன மீட்டர் நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் வறட்சி சமாளிக்கப்பட்டதுடன் ஆற்றின் கீழ்பகுதியில் உள்ள விளை நிலங்கள் மற்றும் நகரங்கள் பயன் அடைந்தன.
ஜூலை 2010ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அணைக்கு வினாடிக்கு 70,000 கன மீட்டர் நீர் வரத்து இருந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஓரிரவில் 4 மீட்டர் உயர்ந்தது, அணையிலிருந்து 40,000 கன மீட்டர் நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணையின் காரணமாக ஆற்றின் கீழ்பகுதிகள் கடும் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன. 1998க்கு அப்புறம் கடும் வெள்ளத்தை சீனா இப்போதே சந்திக்கிறது.
0 comments:
Post a Comment