இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 428 ரன்னும், இந்தியா முதல் இன்னிங்சில் 405 ரன்னும் குவித்தன.ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 192 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவுக்கு 216 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 55 ரன் எடுத்து இருந்தது. தெண்டுல்கர் 10 ரன்னிலும், ஜாகீர்கான் 5 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆட்டம் நடந்தது.
வெற்றிக்கு மேலும் 161 ரன் தேவை. கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து ஆடியது. தெண்டுல்கரும், ஜாகீர்கானும் தொடர்ந்து ஆடினார்கள்.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஜாகீர்கான் 10 ரன் எடுத்து இருந்தபோது ஹவுரிட்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 76 ரன் என்ற நிலையில் இருந்தது.
6-வது விக்கெட்டுக்கு தெண்டுல்கருடன் லட்சுமண் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையுடன் ஆடியது. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த தெண்டுல்கர் 38 ரன்னில் போலிஞ்சர் பந்தில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 119 ஆக இருந்தது.
அடுத்து வந்த டோனி 2 ரன்னிலும், ஹர்பஜன்சிங் 2 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன் என்ற மோசமான நிலையில் இருந்தது.
ஆனால் மறுமுனையில் இருந்த லட்சுமண் மிகவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடினார். உடல் தகுதி இல்லாத அவர் அணிக்காக கடுமையாக போராடினார். அவருக்கு இஷாந்த் சர்மா உறுதுணையாக இருந்தார்.
மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்து இருந்தது. லட்சுமண் 48 ரன்னிலும், இஷாந்த்சர்மா 14 ரன்னிலும் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு லட்சுமண் 50 ரன்னை தொட்டார். அவர் அணியை வெற்றி பாதையை நோக்கி அழைத்து சென்றார்.
ஆனால் மறுமுனையில் இருந்த இஷாந்த் சர்மா வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்டபோது ஆட்டமிழந்தார். அவர் 31 ரன் எடுத்தார். கடைசி விக்கெட்டுக்கு லட்சுமணுடன் ஓஜா ஜோடி சேர்ந்தார்.
பரப்பரப்பான இந்த டெஸ்டில் இந்தியா 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லட்சுமண் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவர் ஆட்டமிழக்காமல் 73 ரன் எடுத்தார். இந்தியாவின் இந்த வெற்றி மிகவும் அதிசயமானது.
0 comments:
Post a Comment