அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube


Gary Kirsten gives MS Dhoni some batting tips

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று, விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இதற்கு முன், இங்கு நடந்த இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ள இந்திய அணி, "ஹாட்ரிக்' வெற்றி பெற காத்திருக்கிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில், இந்திய அணி 2-0 என வென்றது. அடுத்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. கொச்சியில் நடக்க இருந்த முதல் போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக, விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.
யுவராஜ் நம்பிக்கை:
இந்திய அணியில் சச்சின், ஜாகிர் கான், ஹர்பஜன், சேவக், காம்பிர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஓய்வில் உள்ளனர். இதனால் தமிழக வீரர் முரளி விஜயுடன் இணைந்து ஷிகர் தவான் துவக்கம் தரலாம். விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, சவுரப் திவாரி, ரவிந்திர ஜடேஜா போன்றவர்கள், தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும். ஆசிய கோப்பை தொடரில் நீக்கப்பட்ட யுவராஜ், மீண்டும் களமிறங்குகிறார். இங்கு 2007ல், இலங்கைக்கு எதிராக 95 ரன்கள் விளாசிய இவர், தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தால் நல்லது. ரெய்னாவும் நம்பிக்கை தரலாம். 

மீண்டும் அசத்துவாரா:விசாகப்பட்டினத்தில் கடந்த 2005ல் பாகிஸ்தானுக்கு எதிராக 123 பந்தில் 148 ரன்கள் விளாசிய கேப்டன் தோனி, அசத்தல் ஆட்டத்தை தொடர வேண்டும். பவுலிங்கில் நெஹ்ரா, வினய் குமார், பிரவீண் குமார், முனாப் படேல் சாதித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். "டுவென்டி-20' தொடர்களில் அசத்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தின் அஷ்வின், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் விக்கெட் வேட்டை நடத்தலாம். இவருக்கு ரவிந்திர ஜடேஜா கைகொடுக்க வேண்டும். 
பலத்த விமர்சனம்:
டெஸ்ட் தொடரை இழந்ததால், பலத்த விமர்சனத்துக்கு ஆளான ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பாண்டிங், வாட்சன், ஜான்சன் இல்லாத நிலையில் மைக்கேல் கிளார்க் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இம்முறை கேமரான் ஒயிட், ஜேம்ஸ் ஹோப்ஸ், ஷான் மார்ஷ், மைக்கேல் ஹசி ஆகியோர் கைகொடுக்கலாம். ஜான் ஹேஸ்டிங்ஸ், மைக்கேல் ஸ்டார்க் போன்ற அறிமுக வீரர்கள் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பவுலிங்கில் போலிஞ்சர், கிளின்ட் மெக்கே, ஸ்டீவன் ஸ்மித் சாதிக்கலாம்.

புதிய அனுபவம்:
இப்போட்டி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் கூறுகையில்,"" இளம் வீரர்களுடன் களமிறங்குவது புதிய அனுபவம் தான். இதில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.
 
கடந்த 1998 முதல் இந்தியாவில் நடந்த 6 ஒருநாள் போட்டித் தொடர்களில் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இம்முறையும் சாதிக்க முயற்சிக்கும். இளம் இந்திய வீரர்களும் திறமை நிரூபிக்க காத்திருப்பதால், விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.
மழை வாய்ப்புவிசாகப்பட்டினத்தில் இன்று வானிலை மேகமூட்டமாக இருக்கும். வெப்பநிலை அதிகபட்சம் 31, குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் இருக்கும். மழை வருவதற்கு 20 சதவீத வாய்ப்பு உள்ளது.
ராசியான மைதானம்
* ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 2 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. 2005ல் பாகிஸ்தான் மற்றும் 2007ல் இலங்கையை வீழ்த்தியுள்ளது.
* கடந்த 2005ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், தோனி அதிகபட்சமாக 148 ரன்கள் எடுத்துள்ளார். இதே போட்டியில் ஆஷிஸ் நெஹ்ரா, 72 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
* இந்திய அணி அதிகபட்சமாக பாகிஸ்தானுக்கு எதிராக 356/9 ரன்கள் (2005) எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக இலங்கைக்கு எதிராக 263/3 ரன்களை (2007) பதிவு செய்துள்ளது.
முதன் முறை
* இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இங்கு மோதுவது இதுவே முதன் முறை.
* பகல்-இரவு போட்டி இங்கு நடப்பது இது தான் முதன் முறை.
* கடந்த 2008ல் ஆடுகளம் மாற்றி அமைக்கப்பட்ட பின், சர்வதேச போட்டி நடப்பது இதுவே முதன்முறை.
ரன்குவிப்பு இருக்குமா
இதற்கு முன் இம்மைதானத்தில் நடந்த இரண்டு போட்டிகளிலும் 500, 600க்கும் மேல் ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதேபோல இன்றும் எதிர்பார்க்கலாம். இதுகுறித்து ஆந்திர கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறுகையில்,"" ஆடுகளம் பேட்ஸ்மேன்களில் சொர்க்கபுரியாக உள்ளது. இதனால் மீண்டும் ரன்குவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார். ஆனால் முதன் முறையாக பகலிரவு போட்டியாக நடப்பதால், இரவு நேரத்தில் பனிப்பொழிவு பேட்டிங்கிற்கு தொல்லை தரலாம்.
ஆஸி., அதிகம்
* இரு அணிகளும் இதுவரை ஒட்டுமொத்தமாக 103 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 34, ஆஸ்திரேலியா 61 போட்டியில் வென்றுள்ளன. 8 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை.
* கடைசியாக இரு அணிகள் மோதிய 5 ஒருநாள் போட்டிகளில் 3ல் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் மழை காரணமாக ரத்துசெய்யப்பட்டு உள்ளது.

 யுவராஜ் சிங்கிற்கு பாராட்டு
இன்றைய போட்டியில் யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகிப்பார் என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:
 யுவராஜ் சிங் 250க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அனுபவம் உள்ளவர். போட்டியின் எந்த நிலையிலும் சிறப்பாக பேட்டிங் செய்து முடிவையே மாற்றிவிடும் திறன் படைத்தவர். நான்கு பவுலருடன் களமிறங்கும் பட்சத்தில் இவர் "பார்ட் டைம்' பவுலராக செயல்பட்டு, இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்துவார். பவுலிங்கில் சாதிக்கும் போது, பேட்டிங்கிலும் கலக்குவார். பேட்டிங்கில் கலக்கும் போது, பவுலிங்கிலும் அசத்துவார்.
முன்னணி துவக்க வீரர்கள் இல்லாததால் முரளி விஜயுடன் சேர்ந்து, ஷிகர் தவான் களமிறங்குவார். நாங்கள் இருவரும் சாலஞ்சர் டிராபியில் ரன்கள் குவித்துள்ளோம். எனக்கு அணியில் விரைவில் இடம் கிடைத்துவிட்டது. துவக்க வீரர் என்பதால், ஷிகர் திவான் நிரந்தர வாய்ப்பு கிடைக்காமல் தவித்தார். இன்று, இவர் சாதிக்கும் பட்சத்தில், பேட்டிங் கூடுதல் வலிமை பெறும்.
கடந்த சில தொடர்களாக இந்திய அணி முழு பலத்தில் விளையாடவில்லை. காயம் பற்றிய எச்சரிக்கை காரணமாக அதிக வீரர்கள் ஓய்வில் இருந்தனர். ஏனெனில் இந்திய துணைக்கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கும் நிலையில், முக்கிய வீரர்கள் காயமடைவதை விரும்பவில்லை. இதனால் எனக்கும் அடுத்த தொடரில் ஓய்வு கிடைக்கும் என நம்புகிறேன்.
இந்த மைதானத்தில் நடந்துள்ள இரண்டு போட்டிகளிலும் கங்குலி, டிராவிட் கேப்டன்களாக இருந்தனர். இப்போது நான். அடுத்தமுறை இங்கு விளையாடும் போது நானும் ஓய்வு பெற்றிருப்பேன்.
இவ்வாறு தோனி தெரிவித்தார்.


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.