10-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையின் தம்புல்லா நகரில் நடந்து வருகிறது. 4 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் (ஒரு வெற்றி, 2 தோல்வி), வங்காளதேசம் (3 தோல்வி) ஆகிய அணிகள் வெளியேறி விட்டன.
இந்தியா-இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இறுதிப்போட்டி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னோட்டமாக இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டம் நேற்று நடந்தது. `சம்பிரதாய' மோதல் என்பதால் இலங்கை அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதே போல் இந்திய அணியில் நெஹரா, ஹர்பஜன்சிங், ஷேவாக் (காயம்) ஆகியோருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், அசோக் திண்டா, பிரக்யான் ஓஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். எதிர்பார்க்கப்பட்ட புதுமுக வீரர் சவுரப் திவாரிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
`டாஸ்' ஜெயித்த இலங்கை அணி முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இதன்படி களம் இறங்கிய இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் கவுதம் கம்பீரும், தினேஷ் கார்த்திக்கும் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்து ஓரளவு நல்ல தொடக்கம் தந்தனர். கம்பீர் 23 ரன்களில், ரன்டிவால் சூப்பராக `கேட்ச்' செய்யப்பட்டார். இதன் பின்னர் வந்த விராட் கோக்லி (10 ரன்), தினேஷ்கார்த்திக் (40 ரன்), சுரேஷ் ரெய்னா (18 ரன்) ஆகியோர் வரிசையாக வெளியேறினாலும், ரோகித் ஷர்மாவும், கேப்டன் டோனியும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 37 ஓவர்களில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது, அணி 260 ரன்களை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 38-வது ஓவரில் டோனி (41 ரன், 53 பந்து, 6 பவுண்டரி) ரன்-அவுட் ஆனது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இதன் பிறகு 39-வது ஓவரில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பர்வீஸ் மகரூப், `ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்து இந்திய அணியை ஒரேயடியாக சீர்குலைத்தார். 39-வது ஓவரின் முதல் பந்தில் ரவீந்திர ஜடேஜா (0) எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்த பந்தில் பிரவீன்குமார் போல்டு ஆனார். 3-வது பந்தில் ஜாகீர்கான் விக்கெட் கீப்பர் சங்கக்கராவிடம் கேட்ச் ஆக, தொடர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் மகரூப் ஹாட்ரிக் சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப்படுவது இது 26-வது முறையாகும். அதே சமயம் வாஸ் (2 முறை), மலிங்காவுக்கு அடுத்து ஹாட்ரிக் விக்கெட் சாய்த்த 3-வது இலங்கை பவுலர் என்ற சிறப்பையும் 25 வயதான மகரூப் பெற்றார். அவரது தாக்குதலில் இந்தியாவின் ஸ்கோர் சிதைந்தது. கடைசிவரை போராடிய ரோகித் ஷர்மா 69 ரன்களில் (73 பந்து, 7 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார். முடிவில் இந்திய அணி 42.3 ஓவர்களில் 209 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மகரூப் 10 ஓவர்களில் 42 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் 5 விக்கெட் கைப்பற்றுவது இது 2-வது முறையாகும்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 37.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 211 ரன்கள் விளாசி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தில்ஷன் (24 ரன்), தரங்கா (38 ரன்), கேப்டன் சங்கக்கரா (73 ரன்) ஆகியோர் அவுட் ஆனார்கள். மஹேலா ஜெயவர்த்தனே 53 ரன்னுடனும், கண்டம்பி 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் ஜாகீர்கான் 2 விக்கெட்டுகளும், பிரவீன்குமார் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
லீக்கில் மூன்று ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி, 2 வெற்றி கண்ட இந்தியாவை இறுதிப்போட்டியில் நாளை மீண்டும் சந்திக்க உள்ளது.
0 comments:
Post a Comment