
உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்னொரு அதிர்ச்சி. பரபரப்பான "ரவுண்ட்-16' போட்டியில் ஸ்பெயின் அணி, போர்ச்சுகலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் உலகின் "நம்பர்-2' அணியான ஸ்பெயின், காலிறுதிக்கு ஜோராக முன்னேறியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல் வெளியேறியது.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று நடந்த "ரவுண்ட்-16' போட்டியில் "யூரோ' சாம்பியன் ஸ்பெயின், போர்ச்சுகலை(உலகின் "நம்பர்-3') எதிர்கொண்டது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால், எதிர்பார்ப்பு எகிறியது.
ஸ்பெயின் ஆதிக்கம்:
துவக்கத்தில் இருந்தே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது நிமிடத்தில் டோரஸ் அடித்த பந்தை, போர்ச்சுகல் கோல்கீப்பர் எட்வார்டோ துடிப்பாக தடுத்தார். இதற்கு பின் மற்றொரு ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி மிரட்டினார். 22வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு கிடைத்த வாய்ப்பை டியாகோ கோட்டை விட்டார். 28வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ "பிரீகிக்' வாய்ப்பை வீணாக்கினார். பின் 38வது நிமிடத்தில் ரொனால்டோ பந்தை அருமையாக "பாஸ்' செய்தார். ஆனால், அல்மீடா தலையால் முட்டி கோல் அடிக்க தவறினார். முதல் பாதி கோல் எதுவும் அடிக்கப்படாமல் முடிந்தது.

இரண்டாவது பாதியில் ஸ்பெயின் அணி தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. 63வது நிமிடத்தில் இந்த அணியின் டேவிட் வில்லா அடித்த பந்தை போர்ச்சுகல் கோல்கீப்பர் எட்வார்டோ தடுத்து, வெளியே தள்ளினார். அதனை அப்படியே மீண்டும் கோல் போஸ்டுக்குள் வில்லா சாமர்த்தியமாக அடிக்க, ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது.
எங்கே ரொனால்டோ?:
இதற்கு பதிலடி கொடுக்க போர்ச்சுகல் அணியின் டேனி, டியாகோ மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின. போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோவின் ஆட்டமும் சுத்தமாக எடுபடவில்லை. இவர் பந்தை தட்டிச் செல்வதே அரிதாக இருந்தது.
"ரெட் கார்டு' சோகம்:
ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு பெரும் அதிர்ச்சி. "பெனால்டி ஏரியாவில்' வைத்து ஸ்பெயின் வீரர் கேப்டெவில்லா முகத்தில் முழங்கை வைத்து முரட்டுத்தனமாக தடுத்ததாக கூறி, ரிக்கார்டோ கோஸ்டாவுக்கு "ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து 10 பேருடன் போர்ச்சுகல் விளையாட நேர்ந்தது. இறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. போர்ச்சுகல் பரிதாபமாக வெளியேறியது. காலிறுதியில் ஸ்பெயின் அணி, பராகுவேயை சந்திக்கிறது.
ஆட்ட நாயகன் விருதை ஸ்பெயின் வீரர் சேவி தட்டிச் சென்றார்.
0 comments:
Post a Comment