முதல் உலகப்போரின்போது ஜெர்மனியிடம் தோற்றுப் போன ரஷியா அதனுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. ஆனால் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு 1941 ஜுன் 22-ந்தேதி ரஷியா மீது படையெடுத்தார், ஹிட்லர். இரண்டாம் உலகப்போரில் ரஷியா மீது ஹிட்லர் படையெடுத்தது முக்கியமான கட்டமாகும்.
ரஷியாவுக்கு ஹிட்லரால் பெரும் உயிர்ச்சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்த முடிந்ததே தவிர, வெற்றி பெறமுடியவில்லை.
"இரும்பு மனிதர்" ஸ்டாலின் தலைமையில் ரஷிய மக்கள் விஸ்வரூபம் எடுத்து ஹிட்லருக்கு சரியான பதிலடி கொடுத்தனர். அது போரின் போக்கையே மாற்றியது. உலகின் பல்வேறு நாடுகளிலும் போர் பரவிக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஜெர்மனிக்கும், ரஷியாவுக்கும் இடையேயான போர் 1941 ஜுன் மாதம் தொடங்கி, 1943 ஜனவரி வரை நடந்தது. 1941 ஜுன் 22-ந்தேதி அதிகாலை நேரம். ஜெர்மனி விமானங்கள் சாரி சாரியாகப் பறந்து ரஷிய நகரங்கள் மீது குண்டு வீசின. அதே சமயம், 1,000 மைல் நீள எல்லையைத் தாண்டி, ரஷியாவுக்குள் ஜெர்மனி ராணுவம் புகுந்தது. என்றைக்காவது ஒருநாள் ரஷியா மீது ஜெர்மனி படையெடுக்கக்கூடும் என்று ஸ்டாலின் ஏற்கனவே எதிர் பார்த்தார்.
ரகசிய ஒற்றர்கள் மூலம் அவருக்கு இது பற்றிய தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இவ்வளவு பெரிய அளவில் ஹிட்லர் தாக்குதல் நடத்துவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய மூன்றிலும் ஜெர்மனியைவிட ரஷியாவின் கையே ஓங்கியிருந்தது. எனினும் ரஷிய விமானங்கள் மிகப்பழையவை. ஆயுதங்களும் பெரும்பாலும் உபயோக மற்றவை.
எனவே நவீன விமானங்களைக் கொண்டு ஜெர்மனி நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல், ரஷியா திணற வேண்டியிருந்தது. ரஷியாவின் போக்குவரத்து பாதைகளை ஜெர்மனி ராணுவம் துண்டித்துவிட்டு முன்னேறியது. ஆகஸ்டு மாத இறுதிக்குள் ரஷியா இழந்த விமானங்கள் எண்ணிக்கை சுமார் 5,000. நாள் ஒன்றுக்கு 50 மைல் வீதம் ஜெர்மனி படைகள் முன்னேறிக்கொண்டிருந்தன.
ரஷியா பதிலடி கொடுத்த போதிலும், போரில் ரஷிய வீரர்கள் ஏராளமாக பலியாகிக் கொண்டிருந்தனர். 1941 செப்டம்பர் 8-ந்தேதி ரஷியாவின் முக்கிய நகரமான லெனின்கிராடை ஜெர்மனி படைகள் முற்றுகையிட்டன. ஜெர்மனியின் மற்றொரு படை, மாஸ்கோவுக்கு 250 மைல் தூரத்தில் இருந்தது. ஏறத்தாழ, ரஷியாவின் பாதிப் பகுதியை ஹிட்லரின் படைகள் கைப்பற்றிக் கொண்டு விட்டன. எனினும் ரஷிய எல்லை 1,000 மைல் களுக்கு மேலாக விரிந்து பரந்து இருந்த காரணத்தால், கைப்பற்றிய பகுதிகளில் ஜெர்மனி படைகள் வேரூன்ற முடியவில்லை. ரஷியப் புரட்சி நாளான நவம்பர் 7-ந்தேதிக்குள் மாஸ்கோவை கைப்பற்றி விட வேண்டும் என்பது ஹிட்லரின் திட்டம். அக்டோபர் 14-ந்தேதி மாஸ்கோவை ஜெர்மனி படைகள் நெருங்கி விட்டன.
இன்னும் 50 மைல் தூரம்தான் பாக்கி. விரைவில் மாஸ்கோ வீழ்ந்து விடும் என்றே எல்லோரும் நினைத்தனர். மாஸ்கோவில் இருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள். நகரமே காலியாகிக் கொண்டிருந்தது. ஊரை விட்டு பத்திரமான இடங்களுக்கு செல்லுமாறு மந்திரிகளுக்கு ஸ்டாலின் கட்டளையிட்டார். ஆனால் அவர் மட்டும் ஊரை விட்டு வெளியேறாமல், தன் மாளிகையிலேயே தங்கியிருந்தார்!
இந்த சமயத்தில் ஸ்டாலினுக்கு இயற்கை கை கொடுத்தது. ரஷியாவில் அது மழை காலம். கடும் மழையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஜெர்மனி வீரர்கள் திணறினார்கள். கடும் குளிர் வேறு. உணவு இல்லை; மாற்று உடை இல்லை. ஆயிரக்கணக்கான ஜெர்மனி வீரர்கள், குளிர் தாங்க முடியாமல் பிணமானார்கள். பட்டினியால் செத்தவர்கள் ஏராளம். தொற்று நோயினால் கணக்கற்றவர்கள் மடிந்தனர்.
மழையில் நனைந்துபோன துப்பாக்கி குண்டுகள், வெடிக்காமல் சதி செய்தன. ரஷிய வீரர்கள், கடும் குளிரை தாங்கி பழக்கப்பட்டவர்கள். எனவே, "இதுதான் சமயம்" என்று ஜெர்மனி படையை விரட்டி விரட்டி தாக்கினார்கள். மாஸ்கோவுக்கு 20 மைல் தூரம் வரை முன்னேறிய ஜெர்மனி படையினர், "உயிர் தப்பினால் போதும்" என்று, பின்வாங்கி ஓடினார்கள். அவர்களை ரஷிய வீரர்கள் ஓடஓட விரட்டினார்கள்.
1 comments:
Interesting!
Post a Comment