ஆல்வின் வழக்கம் போல் தனது ஆயிரம் வாட் கண்களால் நிதானமாக இருட்டைக் கிழித்தபடி ஆழ்கடலின் தரையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது. ஆல்வின், ஆழ்கடல் மூழ்கிக் கப்பல். கலிபோர்னியா கடல் அருகில் 1240 மீட்டர் ஆழத்தில் மாமூல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. தண்ணீரின் அழுத்தம் அந்த ஆழத்தில் அசாத்தியமாக இருக்குமாதலால் உருக்கிய தாரில் நீந்துவது போல் மெள்ள நகர்ந்தது.
கடல் தரையில் 20 மீட்டர் நீளத்திற்கு, இரண்டுமாடி பஸ் போல ஒன்று கிடப்பதைக் கண்டது. சென்ற மாதம் இதே இடத்தில் நோட்டம் விட்டபோது அது அங்கே இல்லை. அண்மையில்தான் அது அங்கே விழுந்திருக்க வேண்டும். அது ஒரு திமிங்கலம். வளர்ந்து, முதிர்ந்து, வாழ்ந்து மடிந்துவிட்ட மிகப்பெரிய திமிங்கலத்தின் சடலம். கடலின் அதள பாதாளத்தைத் தஞ்சமடைந்த அந்தத் திமிங்கல சடலத்தைச் சுற்றிலும் எண்ணிச் சொல்ல முடியாத அளவுக்குப் புழு, பூச்சிகள், நத்தைகள், நண்டுகள் போன்றவை கும்பமேளா கூட்டம் போல் நிறைந்து இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் லட்சக்கணக்கில் திமிங்கல உடலை ஆகாரமாகச் சுவைத்தபடி இருந்தன. அவற்றில் 30 உயிரினங்கள், விலங்கியல் அறிஞர்கள் இதுவரை பார்த்திராதது, பெயரிடாதது.
தின்று முடிக்க 7 ஆண்டுகள்
ஆழ்கடலில் வெளிச்சமிருக்காது, ஆக்ஸிஜன் இருக்காது, சாப்பிட எதுவும் கிடைக்காது. கடல்பாசிகள் வெளிச்சம் மிகுந்த கடல்பரப்பில் வாழ்வதைத்தான் விரும்புகின்றன. அதளபாதாளத்தில் வழக்கமாக எதுவும் வாழவிரும்புவதில்லை. இருப்பினும் செத்து விழும் ராட்சத உயிரினங்களால் வினோதமான உயிர்கூட்டம் ஆழ்கடலில் கூடுகிறது. தினமும் 40-60 கிலோ திமிங்கல மாமிசத்தைக் கொத்திக் குதறி எடுத்தாலும் ஒரு திமிங்கலத்தைத் தின்று தீர்க்க குறைந்தது 7 ஆண்டுகளாவது ஆகுமாம். திமிங்கலங்கள் கடலில் ஒன்றுக்கொன்று 12 கிலோ மீட்டர் இடைவெளிவிட்டு வாழ்வதால், கடலடியில் அந்த இடைவெளியில் எப்போதும் ஏதாவதொரு திமிங்கல சமாதி காணப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70,000 திமிங்கலங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டு கடலடியைத் தஞ்சமடைகின்றன. ஆதலால் கடலடியில் மிகப்பெரிய உயிர்க்கூட்டம் செத்த திமிங்கலத்தைச் சாப்பிடுவதற்கென்றே சுற்றித்திரிகின்றன. ஒருவேளை திமிங்கலங்களே கிடைக்காவிட்டால் அந்த நாடோடிக் கூட்டம் என்ன செய்யும்? இருக்கவே இருக்கிறது ஆழ்கடல் வெப்பநீர் ஊற்றுகள்! கருப்பாக கந்தகம் நிறைந்த புகையை தண்ணீரில் கக்கியபடி ஆழ்கடல் வெப்பச்சுனைகள், தொழிற்சாலையின் பெரிய புகைப்போக்கிகள் போல் கடலடியில் காணக்கிடக்கின்றன. வெப்பம் மிகுந்த கரும்புகையை உணவாக ஏற்றுக்கொண்டு திமிங்கலம் கிடைக்காத நாடோடிக் கூட்டம் அங்கே காலம் கடத்துகின்றன.
ஒரு திமிங்கலத்தைத் தின்று தீர்ப்பதற்குள் இன்னொரு திமிங்கலம் அருகில் வந்து விழாமல் போகாது. ஆதலால் திமிங்கலந் திண்ணிக் கூட்டங்களுக்குப் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதேயில்லை. திமிங்கலங்கள் மனிதரையும், பசுக்களையும் போல, பாலூட்டி விலங்குகள். அவை 20 மில்லியன் ஆண்டுகளாகத்தான் கடலில் வாழ்ந்து வருகின்றன. ஆனால் திமிங்கலந் திண்ணிகள் பலநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்துவரும் உயிரினங்கள்! திமிங்கலம் கிடைப்பதற்கு முன்னர் அவை கடலில் வாழ்ந்து வந்த டைனாசார்களைத் தின்றிருக்கும் என்று தெரிகிறது. இதற்கு ஃபாசில் ஆதாரங்களும் கடலடியில் கிடக்கின்றன.
நன்றி முனைவர் க.மணி
2 comments:
மிகவும் ஆச்சர்யமான உயிர் சுழற்சி
ஆம் இத் தகவலை தந்த முனைவர் க.மணி அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
மிகவும் ஆச்சர்யமான சுழற்சி
Post a Comment