சைன்சயின்ஸ் பிக்சனின் தந்தை என்று அழைக்கப்படும் ஹெர்பெர்ட் ஜியார்ஜ் வெல்ஸ் - சுருக்கமாகச் சொன்னால் H.G.வெல்ஸ். மனிதர் சென்ற நூற்றாண்டிலேயே தன் கற்பனைத் திறனால் உலகத்தைக் கலக்கினார்.
H.G.வெல்ஸ்
ஏன், அவர் எழுதிய கதைகளை மையமாகக் கொண்டும் இன்னும் நாம் திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அவர் தன் மனதில் உருவாக்கிய உலகத்தை நாம் இன்னும் "பிக்சன்", அதாவது, "கற்பனை" என்றே அழைத்துக் கொண்டிருக்கிறோம். "இதெல்லாம் இங்கே நிஜமாகப் போகிறது" என்ற ஒரு மிதப்புதான், வேறென்ன!ஒரு வேளை வெல்ஸ் எழுதியதெல்லாம் உண்மையில் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்! லண்டனில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் வணிகத் துறையில் ஆராய்ச்சி செய்யும் ஆலிவர் கர்ரி என்பவர் "நிழல் நிஜமாகப் போகிறது" என்று சொல்கிறார்.
அதாவது, வெல்ஸ் எதிர்ப்பார்த்ததுபோல, மனித இனம் இரண்டாகப் பிரியப் போகிறதாம். இதென்ன தலையில் குண்டைத் தூக்கி போடுகிறான், என்று வியக்கின்றீர்களா? சரி, மனிதனின் செவிகளுக்கு இனிக்கும் சில விஷயங்களை முதலில் பேசுவோம்.
இன்னும் ஆயிரம் வருடங்களில், மனிதன் தன் வளர்ச்சியின் உச்சக்கட்டத்தை அடைந்துவிடுவானாம். உலக சரித்திரத்தில் வாழ்ந்த ஒவ்வொரு இனத்திற்கும் ஏற்படும் நிலைதான் இது. முதலில் அந்த இனம் தோன்றும், பிறகு சுற்றுச் சூழலுக்கு ஏற்ப, தன் உடம்பிற்குச் சில மாற்றங்களைச் செய்துகொண்டு, வேறொரு இனமாக உருமாறும். இப்படி பல மாற்றங்கள் நேர்ந்த பின்னர், அவ்வினம் தன் வளர்ச்சியின் உச்சக்கட்டத்தை எட்டிவிடும். அந்நிலையைத்தான் மனிதன் இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் அடையப் போகிறானாம்.
கொஞ்சம் டார்வினிஸமும், எவல்யூஷனும் பேசப் போவதால், இனவிருத்தியைப் பற்றி பேச வேண்டும். உங்களுக்கு சங்கடமாக இருந்தால், உங்கள் ப்ரௌஸரில் பின்னே சென்று, நிலாச்சாரலில் உள்ள ஜோக்ஸைப் படித்து மகிழுங்கள்! அறிவியல் மீது மோகம் கொண்டவர்களுக்கு மட்டும் இது!
ஒவ்வொரு இனத்திற்கும் இருக்கும் முக்கிய குறிக்கோள் என்ன? தன் இனத்தை விருத்தி செய்வதுதானே!! மனிதர்கள் இன்னும் கொஞ்சம் திடகாத்திரமாக வளர ஆரம்பிப்பார்களாம் - அதாவது, ஆறேழு அடி உயரத்திற்கு! நூற்றி அறுபது வருடங்கள்வரையில் உயிர் வாழ்வார்களாம். அதிக நாள் உயிர் வாழ்ந்தால், இன்னும் நிறைய பிள்ளைகள் பெறலாமே!! ஆண்கள் இன்னும் நிறைய ஜொள்ளு விடும் அளவிற்கு பெண்கள் கொழுகொழுவென்று இருப்பார்களாம் - கூர்ந்த கண்கள், ஃபேர் அண்ட் லவ்லியே தேவையில்லாத மென்மையான சருமம், மயிர்களே இல்லாத வழ வழ தோல் அழகிய கூந்தல், அப்புறம் - நீங்களே புரிந்து கொள்ளுங்களேன்! ஆண்களும் பெண்களை கவரும் அளவிற்கு, மன்மதனைப் போல மாறுவார்களாம்.
இத்தனை நடந்த பிறகு, ஒருவனுக்கு ஒருத்தியாவது, மண்ணாவது!!
இதன் விளைவு - எல்லா மனிதர்களும் ஒன்று கூடி கலந்து விடுவார்களாம். நிறங்களின் அடிப்படையில் பிரிவு என்பதே அழிந்து விடுமாம். உலகம் முழுவதும் வாழும் எல்லோரும் ஒன்றுடன் கலந்து, காஃபி நிறத்தில் எல்லா மனிதர்களும் இருப்பார்களாம்!! அடேங்கப்பா - எத்தனை யுத்தங்கள் முடியும், எத்தனை பிரச்சினைகள் தீரும்!! நினைத்துப் பார்க்கவே, இனிக்கிறது!
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு? வேறென்ன, உச்சக் கட்டத்திலிருந்து கீழே சரிய வேண்டியதுதான்.
பொறுமை - மனிதன் வீழப் போவதில்லை. அத்தனை சீக்கிரத்தில் இயற்கை அன்னையால் நம்மை அழித்துவிட முடியாது. ஆனால், நம்முள் பெரும் மாறுதல்கள் நேரவிருக்கின்றனவாம்! தொழில் நுட்பத்தையே நம்பி நம்பி, நம் உயிர் அணுக்களில் உள்ள சில முக்கிய சக்திகளை முதலில் இழப்போம், என்று சொல்கிறார் ஆலிவர்.
எடுத்துக்காட்டிற்கு, நண்பரைச் சந்திக்க வேண்டும் என்றால், முன்பொரு காலத்தில், அவர் வீட்டுக்குச் சென்று, பேசுவோம். இன்று, கம்ப்யூட்டரில் அமர்ந்தபடி பேசுகிறோம். அவர் என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்ள, அவருடைய "ட்விட்டர்" பதிவைப் படிக்கிறோம். இப்பொழுதே, எல்லாம் கம்ப்யூட்டர் என்று மாறிவிட்ட நிலை. இன்னும், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு என்னென்ன கண்றாவி எல்லாம் நடக்குமோ!!
ஆலிவர் என்ன சொல்கிறார் என்றால், மனிதர்கள் பேசும் சக்தியை இழந்து விடுவார்களாம், உணர்ச்சிகளை மறந்து விடுவார்களாம். அதாவது, காதல், அன்பு, பாசம், பரிவு, மரியாதை, நட்பு, இதற்கெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்பார்களாம்! ஃபாக்டரியில் செய்த சாப்பாட்டைச் சாப்பிட்டு, சாப்பிட்டு, உணவைக் கடிக்கும் திறன் குறையுமாம். உடல் வலு இழக்குமாம்! சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், மனிதன் எல்லா சக்திகளையும் இழந்து நோஞ்சானாவானாம்!
இதென்ன குழப்பமாக இருக்கிறது!? முதலில், மனிதன் ரொம்பவும் சக்தி வாய்ந்தவனாக மாறுவான் என்று சொன்னான்! இப்பொழுது என்னவென்றால் நேர்மாறாகச் சொல்கிறான், எது உண்மை? இரண்டுமே உண்மைதான்!!
கவனிக்க வேண்டியது என்னவென்றால் - எந்த ஒரு மாற்றத்திற்கும் சில தவிர்வுகள் உண்டு!! அதன் விளைவு, ஒரு சில மனிதர்கள் சக்தி வாய்ந்தவர்களாக மாறமாட்டார்கள். ஒரு சிலர் நோஞ்சானாக மாட்டார்கள். கொஞ்சம் கணக்குப் போட்டுப் பார்த்தால், கடைசியில், இரண்டு விதமான மனிதர்கள் மிஞ்சுவார்கள் - பயில்வான் ரகம், நோஞ்சான் ரகம்! அட, எலாய் மற்றும் மார்லாக்ஸ் - இது நம் வெல்ஸ் தன் "டைம் மஷின்" கதையில் சொன்னது போலவே இருக்கிறது!!
அதாவது, மனிதர்கள் இரண்டாகப் பிரியப் போகின்றார்களாம். எண்ணத்திலும், மனதிலும் உள்ள வேறுபாடுகளைப் பற்றிப் பேசவில்லை. உருவத்திலேயே மாற்றங்கள் நேரக் கூடுமாம்!! ஒரு இனம் ஆறடிக்கு இருக்க, இன்னுமொரு இனம் மூன்றடிக்கு மேல் இருக்காது.
இன்று நாம், குரங்கையும், ஒராங்குடானையும் எப்படி வெவ்வேறு இனங்களாகப் படிக்கிறோமோ, அதே போல, பிற்காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் நம்மை "மனிதன் அ", "மனிதன் ஆ" என்று பிரித்துப் படிக்கும் அளவிற்கு நாம் மாறப் போகிறோம்! பாருங்கள், கலவி படுத்தும் பாட்டை!
சரி, இந்த மாற்றங்கள் எல்லாம் நடந்து, மனிதனுள் பிளவு ஏற்பட எத்தனை நாளாகும்?! கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகுமாம். அத்தனை நாளா என்று வியக்க வேண்டாம். நாம் வாழும் பூமியின் கால அளவை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, ஒரு லட்சம் ஆண்டுகள் என்பது நம் பூமிக்கு கண் சிமிட்டும் நேரம்!!
என்ன, இந்த கொடுமையை எல்லாம் பார்ப்பதற்கு நாம் உயிருடன் இருக்கப் போவதில்லையே என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
நன்றி சாரல்
5 comments:
Interesting!
yess very interesting
hmmmmmmmmmmm
we'll see. ya very intersting
enna see pan porika thushi?
Hm neenga sonnadhu nadagudhanu than Dileep .
Post a Comment