
லட்சுமண் சதம் அடித்து அசத்த, கொழும்புவில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான 3 வது டெஸ்டில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனானது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் "டிராவில்' முடிந்தது. இதனையடுத்து மூன்றாவது டெஸ்ட், கொழும்புவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 425, இந்தியா 436 ரன்கள் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 267 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு 257 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை விரட்டிய இந்திய அணி, 4 ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் (11), இஷாந்த் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
சச்சின் அரை சதம்: நேற்று 5 வது நாள் ஆட்டம் நடந்தது. ரந்திவ் சுழலில் வெறும் 4 ரன்களுக்கு வெளியேறினார் "நைட் வாட்ச்மேன்' இஷாந்த் சர்மா. பின்னர் சச்சினுடன், அனுபவ லட்சுமண் இணைந்தார். இந்த ஜோடி இலங்கை பந்து வீச்சை சமாளித்து ஆடி ரன் சேர்த்தது. டெஸ்ட் அரங்கில், 56 வது அரை சதம் கடந்த சச்சின், 54 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். சச்சின், லட்சுமண் ஜோடி 5 வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் குவித்தது.
லட்சுமண் சதம்:

அடுத்து வந்த ரெய்னா நல்ல ஒத்துழைப்புக் கொடுக்க, டெஸ்ட் அரங்கில் 16 வது சதம் கடந்தார் லட்சுமண். மறுமுனையில் வெலகேதரா பந்து வீச்சில் ரெய்னா, ஒரு இமாலய சிக்சர் அடிக்க, 68.3 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 258 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. லட்சுமண் (103), ரெய்னா (41) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை லட்சுமணும், தொடர் நாயகன் விருதை சேவக்கும் தட்டிச் சென்றனர். இதனையடுத்து டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனானது.

0 comments:
Post a Comment