அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

பாம்பை சிறை பிடித்த சுவர்



மிக நீண்ட காலத்திற்கு முன்னால் சீனத்தில் நடந்த சம்பவம்.​ அதிகாலையில் விழித்தெழுந்த கிராமவாசிகள்,​​ அந்தக் காட்சியைப் பார்த்து பயந்தோடினார்கள்.​ என்ன விஷயம் என்று கேட்கிறீர்களா?​ ஒரு மிகப் பெரிய பாம்பு.​ அது கிராமத்தின் நடுவே ஊர்ந்துகொண்டிருக்கிறது.



அன்றுவரை சீனத்தில் யாரும் அவ்வளவு பெரிய பாம்பைப் பற்றிக் கேள்விப்பட்டது கூடக் கிடையாது.​ பொழுது விடிந்ததும் நாட்டின் எல்லா இடத்திலும் அந்தப் பாம்பைப் பற்றித்தான் பேசிக் கொண்டார்கள்.


எப்படிப் பேசிக்கொள்ளாமல் இருப்பார்கள்.​ அந்தளவு பூதாகரமான பாம்பாக இருந்தது அது.​ அது எவ்வளவு பெரிய பாம்பு என்று யாராலும் கண்டு பிடிக்கக்கூட முடியவில்லை.​ பார்வைக்கெட்டாத தொலைவு வரை நீண்டு கிடந்தது அதன் உடல்.​ அந்தப் பாம்பு எந்தப் பயமும் இல்லாமல் தலையை முன்னால் நீட்டி ஊர்ந்து கொண்டிருந்தது.​ கண்ணில் பட்ட ஆடு மாடுகளையும் மற்ற பிராணிகளையும் பிடித்து விழுங்கியபடியே சென்றது அது.


"அய்யோ..!​ இந்தப் பயங்கரப் பாம்பை இப்படியே விடமுடியாது.​ உடனே ஏதாவது செய்யவில்லையென்றால் பேராபத்து ஏற்பட்டுவிடும்'' என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.


"நாம் இந்த ராட்சசப் பாம்பை தீ வைத்து விரட்டிவிடலாமா?'' அறிவாளியான ஒருவர் கேட்டார்.


சரிதான்.​ தீயின் முன்னால் எந்தப் பாம்பாலும் தாக்குப் பிடித்து நிற்க இயலாது.​ எவ்வளவு முரட்டுத்தனமான பாம்பாக இருந்தாலும் தீயைப் பார்த்தால் திரும்பி ஒரே ஓட்டமாக ஓடிவிடும் என்று எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.


அப்படி,​​ பாம்பு ஊர்ந்து வரும் வழிக்குச் சற்று முன்னால் மக்கள் பெரிய தீக்குண்டம் அமைத்தார்கள்.​ ஆனால் பாம்பு என்ன செய்தது தெரியுமா?​ அது தன் தலையை ​ ​ ​ ​ ​ வேறொரு திசையில் திருப்பிக் கொண்டு அந்த வழியே ஊர்ந்து சென்றது.​ ஆனால் மக்கள் விடவில்லை.​ அவர்கள் அங்கும் தீயிட்டார்கள்.​ அப்போது பாம்பு மற்றொரு திசையில் நகர்ந்தது.​ அப்படி சற்று நேரம் கடந்த பிறகு கிராமமே தீப்பற்றி எரியத் தொடங்கியது.​ வீடுகளும்,​​ வயல்களும் எரிந்து சாம்பலாகத் தொடங்கின.​ அதுமட்டுமல்ல,​​ தீயைப் பார்த்ததும் பாம்பு மேலும் மூர்க்கம் கொண்டுவிட்டது.​ அத்துடன் மக்கள்,​​ தீ வைத்து பாம்பைத் துரத்தும் முயற்சியைக் கைவிட்டார்கள்.


கிராமத்தில் பரவிய தீயை மக்கள் எல்லோரும் சேர்ந்து எப்படியோ அணைத்தார்கள்.​ பிறகு, "இனி எப்படி பாம்பைத் துரத்துவது?' என்று ஆலோசித்தார்கள்.​ ​


"நாம் பெரிய கயிற்றைக் கொண்டு வந்து இந்த மோசக்காரப் பாம்பை வரிந்துக் கட்டினால் என்ன?'' என்று சிலர் கேட்டார்கள்.​ வேறு வழி ஒன்றுமில்லை.​ அதனால் மக்கள் மேற்கொண்டு யோசிக்கவில்லை.​ எங்கிருந்தெல்லாமோ பெரிய கயிறுகளைக் கொண்டுவந்தார்கள்.​ ​


அப்போது எழுந்தது ஒரு பிரச்சினை.​ பாம்பின் அருகே சென்றால் அது மனிதர்களை விழுங்கிவிடுமல்லவா?​ "நாம் தலைப் பகுதியிலிருந்து கொஞ்சம் பின்னோக்கிப் போகலாம்.​ பிறகு பாம்பின் உடலில் எங்காவது இந்தக் கயிறால் கட்டலாம்'' என்றார் ஒருவர்.​ அது நல்ல விஷயம்தான் என்று எல்லோருக்கும் தோன்றியது.


விரைவிலேயே அவர்கள் பாம்பின் உடலை ஒரு மரத்துடன் சேர்த்துக் கட்டினார்கள்.​ ​ ​ பிறகு பாம்பால் அசையவே முடியவில்லை.​ மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பத் தயாரானார்கள்.​ அப்போதுதான்,​​ "கிர்...​ கிர்...' என்ற ஓசை கேட்டது.​ அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.​ கட்டுகளையெல்லாம் அறுத்துக் கொண்டு பாம்பு மீண்டும் முன்னோக்கிச் சென்றது.
மக்கள் அனைவரும் திகைத்துப் போனார்கள்.​ இனி என்ன செய்வது?​ அப்போதுதான் ஷிமோ எனும் முதியவர் அங்கே வந்தார்.


அவர் மென்மையான குரலில் சொன்னார்.​ "இந்தப் பொல்லாத பாம்பை யாராலும் கொல்ல முடியாது.​ இதை உயிருடன் எங்காவது அடைத்து வைக்கத்தான் முடியும்.''


இவ்வளவு பெரிய பாம்பை எங்கே அடைத்து வைப்பது என்று மக்கள் குழம்பினார்கள்.


முதியவர் ஷிமோ உறுதியாகச் சொன்னார்:​ "நம்மால் அது முடியும்.​ இந்தப் பாம்பின் இருபுறத்திலும் பெரிய சுவர்களைக் கட்டியெழுப்புங்கள்.​ அதிலிருந்து ஒருபோதும் இந்தப் பாம்பால் வெளியேற முடியாதபடிக் கட்டுங்கள்.''


பிறகு யாரும் வேறெதையும் யோசிக்கவில்லை.​ சீனத்தில் உள்ள எல்லோரும் சுவர் கட்டுவதற்காக ஒன்றிணைந்தார்கள்.​ அப்படி வளைந்து நெளிந்து கிடந்த பாம்பின் அதே வடிவத்திலேயே சில தினங்களுக்குள் மிகப்பெரிய சுவரைக் கட்டி முடித்தார்கள்.


சுவர் எழுப்பும் வேலை முடிந்தவுடன் பெரும் பாம்பு அதற்குள் அகப்பட்டுக் கொண்டது.
பாம்பினால் ஏற்பட்ட தொல்லைகள் எல்லாம் முடிவிற்கு வந்தன.
அந்தப் பயங்கரப் பாம்பைச் சிறைப்படுத்துவதற்காக சீன மக்கள் கட்டிய பெரிய சுவர் எதுவென்று உங்களுக்குப் புரிந்திருக்கும் அல்லவா?​ உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர்தான் அது.


சீனப் பெருஞ்சுவர் குறித்து ஒரு கட்டுக்கதை



Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.