
இந்தியப் பெருங்கடலில் உள்ள பவளப் பாறைகளான உயிரினங்களிடையே கூட்டம், கூட்டமாக வாழும் உயிரினமே வண்ணத்துப்பூச்சி மீன்கள்.
பவளப் பாறைகளின் இடுக்குகள் இடையே வாழும் பல ஆயிரக்கணக்கான வண்ண மீன் இனங்களில் ஒன்றே வண்ணத்துப் பூச்சி மீன். இதன் விலங்கியல் பெயர் கீட்டோடான். பார்ப்பதற்குப் பட்டாம் பூச்சிகளைப் போன்ற நிறமும் வண்ணத் துடுப்பு அசைவும் இருப்பதால் இவை இப்பெயரை பெற்றுள்ளன. சிறிய வாய், உறுதியான பல் மற்றும் தாடைகளை உடையது. இந்த அமைப்பு தான் பவள உயிரிகளைப் பிடித்து தின்பதற்கு உதவுகிறது. சுமார் 30 செ.மீ. வரை வளரும் இவற்றின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மையுடையவை.
முட்டையிலிருந்து வெளிவரும் சின்னஞ்சிறு உயிரினங்கள் முதல் 2 மாதங்கள் நீரில் மிதவைகளாகவே காலம் தள்ளும். பிறகு பொரிந்து சிறு மீனாக உருமாறுகின்றன. பெண் மீன்கள் ஒரே சமயத்தில் 3000 முதல் 4000 முட்டைகள் வரை இடுகின்றன. ஒரு முறை ஜோடி சேர்ந்துவிட்டால் ஆயுள் வரை அதே ஜோடிதான். ஜோடிகளுக்குக் குஷி வந்துவிட்டால் கடலுக்குள் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளும். கறுப்பும், மஞ்சளும் கலந்த வித்தியாசமான நிறக்கலவையால் மிக அழகாகக் காட்சியளிக்கும். இவற்றில் பல சிற்றினங்கள் இருந்தாலும் பாகிஸ்தானி பட்டர்பிளை எனப்படும் பட்டாம் பூச்சி மீன்தான் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகமாக காணப்படுகின்றது.
உடலில் கோடுகளை உடைய வரி வண்ணத்துப் பூச்சி மீன், உடலில் புள்ளிகள் உடைய நான்கு கண் வண்ணத்துப் பூச்சி மீன், நீண்ட மூக்கு வண்ணத்துப் பூச்சி மீன் இப்படியாக பல வகைகளும் உள்ளன.தனது உணவுத் தேவைக்காகவும் மறைவான இருப்பிடத் தேவைக்காகவும் பவளப்பாறைகளை சார்ந்தே உயிர் வாழ்கின்றன. பகலில் சுறுசுறுப்பாகவும் இரவில் அசைவில்லாமல் பாறைகளின் இடுக்குகளில் மறைந்தும் வாழ்கின்றன.

அந்த மண்டலத்துக்குள் மற்ற மீன்கள் வந்தால் அதைக் கூட்டமாக சேர்ந்து கொண்டு விரட்டி விடுகின்றன. ஒரு பெரிய மீனின் இறைச்சியை அதன் கூர்மையான பற்களால் கூட்டமாக வாழும் இம்மீன்கள் ஒன்று சேர்ந்து கூறு போட்டும் சாப்பிடுகின்றன.
பவளப் பாறைகளின் அழிவுகளாலும் வண்ண மீன் சேகரிப்புக்கும் அதிகமாக தேவைப்படுவதால் இந்த இனம் அழிந்து கொண்டே போகிறது. இவற்றின் வாழிடங்களான பவளப் பாறைகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்த அழகிய ஜீவன்களையும் பாதுகாக்கலாம். இந்த உயிரினங்கள் நீந்தத் தெரிந்த ஆனால் பறக்கத் தெரியாத பட்டாம் பூச்சி மீன்கள்.
0 comments:
Post a Comment