
வேலையில்லாமல், மனைவியின் வருமானத்தில் வாழும் ஆண்கள், தங்கள் துணையை அதிகம் ஏமாற்றுவதாக புதிய ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. கணவனை நம்பி வாழும் பெண் இதற்கு நேரெதிராக அதிக நேர்மையை கடைபிடிக்கின்றனர்.
அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக்கழகம். அதன் சமூகவியல் பேராசிரியர் கிறிஸ்டின் மன்ச். அவரது தலைமையில் ஒரு குழுவினர், தம்பதிகளிடையே பொருளாதார அடிப்படையில் நம்பகத்தன்மை பற்றி விரிவான ஆராய்ச்சி நடத்தினர்.
அதன் முடிவில் வெளியான தகவல்கள்: 18 முதல் 28 வயதுக்கு உட்பட்ட திருமணமானவர்கள், திருமணம் செய்யாமல் ஓராண்டுக்கு மேல் சேர்ந்து வாழும் ஜோடிகள் இந்த ஆய்வில் ஆராயப்பட்டனர். வேலை அல்லது சொந்த தொழில் செய்து வீட்டுக்கு பணம் கொடுக்கும் ஆண்களைவிட வேலையின்றி மனைவி சம்பளத்தை நம்பி வாழும் ஆண்கள் 5 மடங்கு கூடுதலாக மனைவிக்கு துரோகம் செய்கின்றனர்.
அதுவே கணவன் அல்லது காதலரின் வருமானத்தை நம்பி வாழும் பெண்களில் பெரும்பாலோர் தங்கள் துணை மீது முழு நம்பிக்கை வைத்து நேர்மையாக நடக்கின்றனர். ஒரு சிலரே விதிவிலக்காக கணவனுக்கு துரோகம் செய்பவர்களாக இருந்தனர். இருவரும் வேலை பார்க்கும் தம்பதிகளில் மனைவியை விட குறைந்த வருமானம் ஈட்டும் கணவர்கள் மகிழ்ச்சியின்றி இருக்கின்றனர்.
மனைவி வருமானத்தைவிட அதிகம் சம்பாதிக்கும் கணவர்களிடம் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. இதிலும் ஆண்களுக்கு பெண்கள் நேரெதிராக உள்ளனர். கணவரை விட குறைவாக சம்பாதிக்கும் பெண்கள் அதிக மகிழ்ச்சியாகவும், அதிகமாக சம்பாதிப்பவர்கள் விரக்தியாகவும் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
இதுபற்றி பேராசிரியர் மன்ச் கூறுகையில், ‘‘துணையை விட குறைவாக பெண்கள் சம்பாதிப்பது அவர்களுக்கு ஆபத்தில்லாதது. கவுரவக் குறைச்சலாக அதை கருதுவதில்லை. அதுவே, பெண்ணை விட குறைவாக சம்பாதிக்கும் ஆண்கள் கவுரவ பிரச்னையாக கருதுகின்றனர். துணையை ஏமாற்ற நினைக்கின்றனர். இது உறவு முறையின் விநோதம்’’ என்றார். இந்த ஆராய்ச்சி முடிவு, விரைவில் நடைபெற உள்ள அமெரிக்க சமூகவியல் சங்கத்தின் 105வது ஆண்டு கூட்டத்தில் வெளியிடப்படுகிறது.
நன்றி தினகரன்
0 comments:
Post a Comment