அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

அழிவை நோக்கி தவளைகள்




அழிந்து கொண்டிருக்கின்ற  பல அரிய விலங்குகளைப்போல, பறவைகளைப்போல தவளைகளும் அழிந்து கொண்டிருக்கின்றன. இயற்கையைப் பாதுகாப்பதில் தவளைகளுக்கு முக்கியமான பங்கு உண்டு என்று நம் பாடப் புத்தகங்கள் சொல்கின்றன. அப்படிப்பட்ட தவளைகள்தான் பூமியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.



இரவுகளில் நாம் தாலாட்டுபோல தவளைச் சப்தம் கேட்டு உறங்கிய நாட்கள் உண்டுதானே! நம் மழைக்கால இரவுகளையும், தவளைகளின் கொண்டாட்டக் கூச்சல்களையும் பிரித்துப் பார்க்க முடியுமா! டெலிவிஷனும் ரேடியோவும் வந்தவுடன்,   அந்தத் தவளைக் குரல் அகன்றுபோகத் தொடங்கியது. ஆயினும், இன்றும் பகல் நேரங்களில் குளங்களிலும் வயல்களிலும் தென்படும் தவளைகள், எதிர்காலத்தில் இருக்குமா என்பது சந்தேகம்தான்.


புவி வெப்பமடைவதால் முதலில் பலியாகும் உயிரினம் தவளைதான் என்று விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகிறார்கள். "ஜெய்ஸவேஜ்' எனும் அமெரிக்க ஆய்வாளர் கண்டுபிடித்த "தங்கத் தவளை' இன்றில்லை. இதன் அறிவியல் பெயர் "ப்யூபோ பெரிக்லெனஸ்' என்பது. அமெரிக்காவின் வடமேற்குப் பிரதேசங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்ட "தி வெஸ்டன் டோட்' எனும் அரிய வகைத் தவளைகளும் அழிந்துவிட்டன. 1972-ல் கண்டுபிடிக்கப்பட்ட "கேஸ்டிக் ப்ரூடிங்' எனும் தவளை இனமும் சந்ததி இன்றி அழிந்துபோனது. இது, அபூர்வமான தவளையாக அறிவியல் உலகத்தால் கருதப்பட்டது. மருத்துவ ஆராய்ச்சிக்குப் பெருமளவில் பயன்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இத் தவளை இன்று முற்றிலும் அழிந்துவிட்டது.


தவளைகளின் அழிவிற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று, தவளையை உணவாகச் சாப்பிடும் பழக்கம்தான். வயல்களும், குளங்களும்தான் தவளைகளின் இருப்பிடங்கள். விவசாய வயல்கள் மெல்ல மெல்ல சமப்படுத்தப்பட்டு வருவதாலும், குளங்கள் தூர்க்கப்படுவதாலும் தவளைகள் போக்கிடமின்றி அழிகின்றன. தண்ணீர்ப் பஞ்சத்தின்போதும் தவளைகள் கூட்டம் கூட்டமாகச் சாகின்றன.


இந்தியாவில் தவளைகளின் அழிவு ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள், தவளைக் கால்களை உண்ணத் தொடங்கியதிலிருந்து, தவளைகளுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. அந்த நாடுகளில் தவளைக் கால்களை மிகவும் சுவையான உணவாக விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இதனால் இந்தியாவிலும், பங்களாதேஷிலும் உள்ள தவளைகளுக்கு வெளிநாட்டுச் சந்தையில் மதிப்பு அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, இந்தியாவும், பங்களாதேஷும் மிகப் பெரிய அளவில் தவளைக் கால்களை ஏற்றுமதி செய்தன.


1978-ல் இந்தியா, 3,500 டன் தவளைக் கால்களை ஏற்றுமதி செய்தது. இவ்வளவு தவளைக் கால்களைச் சேகரிக்க வேண்டும் என்றால் ஆறு கோடித் தவளைகளையாவது கொன்றிருக்க வேண்டும் என்று "தி ஸ்டேட்மென்' எனும் பத்திரிகை குறிப்பிட்டது. இது ஒரு வருடக் கணக்குதான். 1981-ல் 4,368 டன் தவளைக் கால்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதன்மூலம், ஏறத்தாழ 95 லட்சம் டாலர்கள் வெளிநாட்டுப் பணம் நமக்குக் கிடைத்தது. எனவே, நாம் கோடிக்கணக்கான தவளைகளைக் கொன்றிருக்கிறோம் என்று தெளிவாகிறது.


வயல்களில் பெரும் எண்ணிக்கையிலிருந்த "ராணா டை கரீனா' பச்சை நிறமுள்ள " ராணா ஹெக்ஸடக்டைலா' ஆகிய தவளை இனங்கள்தான் அன்று மிக அதிகமாகக் கொல்லப்பட்டன. இன்றாவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தீவிரமாகச் செயல்படுகின்றனர். ஆனால், அன்று இத்தகைய செயல்பாடுகள் அவ்வளவு தீவிரமாக இல்லாத நேரத்திலும்கூட தவளை ஏற்றுமதியின் ஆபத்துகளை பலரும் சுட்டிக்காட்டினர்.


அன்று பலரும் தவளைகளை, புழு பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு மிகச்சிறந்த வழியாகக் குறிப்பிட்டார்கள். ஒரு ஏக்கர் பரப்பளவில் ஐம்பது தவளைகளாவது இருந்தால்தான் பூச்சிகள் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு பிரத்தியேக பணச் செலவு கிடையாது. கொஞ்சம் ஆர்வமும், கவனமும் இருந்தாலே போதும்.


கொசுக்களைக் கட்டுப்படுத்துவதில் தவளைகளும், தும்பிகளும் நமக்கு மிக அதிகமாக உதவி செய்கின்றன. கொசுக்களை லார்வா பருவத்திலேயே தின்றழிப்பதில் தவளைகளின் பங்கு மிகவும் அதிகம். மாதந்தோறும் கொசுக்களை அழிப்பதற்கும், கொசுக்களால் உருவாகும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் நாம் செலவு செய்கிற தொகை கோடிக்கணக்கில் வரும். வயல்களில் தெளிக்கப்படுகின்ற பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான செலவு வேறு.


தவளைகளை ஏற்றுமதி செய்த பிறகு வந்த வருடங்களில் இந்தியா, கோடிக்கணக்கான ரூபாய் விலை மதிப்புடைய பூச்சிக்கொல்லி மருந்துகளை இறக்குமதி செய்தது. தவளைகள் இருந்தபோது பூச்சிக்கொல்லிகளுக்காக செலவிட்ட தொகையைவிட இது அதிகம். தவளையை ஏற்றுமதி செய்ததன் மூலமாக நாம் பெற்ற வெளிநாட்டுப் பணத்தைவிட அதிகமான தொகையை, பூச்சிக்கொல்லி மருந்து இறக்குமதி செய்ததற்காக நாம் வெளிநாட்டிற்குக் கொடுத்தோம்.


இதைப் பற்றிப் புரிந்துகொண்ட பிறகுதான் அரசு, பிற்காலத்தில் தவளை ஏற்றுமதியைத் தடை செய்தது.
வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, தவளைகளைப் பிடிப்பதும் கொல்வதும் குற்றம். ஆனாலும், இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. கொசுக்களைக் கொல்வதில் நாம் எந்த அளவு ஆர்வம் காட்டுகிறோமோ, அந்தளவு நாம் தவளைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.


புவி வெப்பமடைதல், தவளைகளின் இனப்பெருக்கத்திற்குத் தீங்கு செய்யும் "அல்ட்ரா வயலெட் கதிர்கள்', "அக்வாட்டிக் ஃபங்கஸ்' எனும் தோல் நோய், வயல்களில் தெளிக்கப்படும் பூச்சி மருந்துகளின் வீர்யம் ஆகியவை தவளைகளின் அழிவிற்குக் காரணமாகின்றன. வெளிநாடுகளிலிருந்து வருகிற சிலவகை மீன்களாலும் தவளைகள் அழிகின்றன. "ஸ்போர்ட்ஸ் ஃபிஷ்' எனும் வெளிநாட்டு மீனின் விருப்பமான உணவு, குஞ்சுத் தவளைகள்தான்.


கியூபாவிலிருந்து வடக்கு அமெரிக்காவிற்கு வந்த, கியூபா மரத்தவளையும் சிறு தவளைகளை
அழிக்கக்கூடியது. வடக்கு அமெரிக்காவின் மிகப் பெரிய தவளை இதுதான்.


தவளைகள் அமைதியான பிராணிகள். யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காத பரிதாபமான உயிர்கள். அவற்றை நாம் காப்பாற்றியே ஆகவேண்டும். தவளைகளை நாம் நம் பாதுகாப்பு வீரர்களாக எண்ண வேண்டும். அப்போதுதான் இந்தப் பாவப்பட்ட ஜீவன்கள் மீது நமக்கு அன்பும் மரியாதையும் ஏற்படும்.


நன்றி தினமணி



Post Comment


2 comments:

Vadamally said...

Miga vithiyasamana paarvai. Nanum yen nanbanum siru vayathil vilayataga thavalaikalai thunpurithiyadhundu. antha vayathil athanudaiya aruvaruppana thotram engalai appadi seiya vaithathu. ippozhudhu athai ninaithal migavum vedhanaiyaga irukirathu. unmaiyil thavalai oru sathuvana piranithan.

I Salute thavalai and also You,

Mikka Nandri

டிலீப் said...

ohhh thxxxx

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.