மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் புதிய பதிப்பினை (பதிப்பு 4.0.) பல மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளது. இனி வரும் பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகள், இந்த புதிய கட்டமைப்பில் தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு சோதனை பதிப்புதான். யார் வேண்டுமானாலும் இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தி, இதன் நிறை மற்றும் குறைகள் குறித்து மொஸில்லாவிற்குத் தெரிவிக்கலாம். முழுமையான பதிப்பு இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படலாம். இதன் புதிய சிறப்பம்சங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
1.புதிய ஆட் ஆன் மேனேஜர்: கூடுதல் வசதிகள் தரும் ஆட் ஆன் தொகுப்புகளுக்குப் பயர்பாக்ஸ் பிரவுசர் புகழ்பெற்றது. இவற்றைத் தனியே வைத்து நிர்வகிக்க புதிய வசதி தரப்பட்டுள்ளது. புதிய ஆட் ஆன் தொகுப்புகளை, நமக்கேற்ற வகையில் பிரவுசருடன் இணைக்கவும், தேவைப்படாத போது நீக்கவும் வழி தரப்பட்டுள்ளது. இருப்பினும் இது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இறுதி வெளியீட்டின்போது இதன் முழுமையான பயன்பாட்டு வடிவம் கிடைக்கும்.
2. வெப்–எம் பார்மட்: ஹை டெபனிஷன் வீடியோ எனப்படும் உயர் வகை வீடியோ காட்சிகளை பிரவுசரில் யு–ட்யூப் வழியாகக் காண, எச்.டி. தன்மையுடன் கூடிய எச்.டி.எம்.எல். 5 வீடியோ தரப்பட்டுள்ளது.
3. தனிநபர் தகவல்கள் பாதுகாப்பு: மொஸில்லா எப்போதும் தன் வாடிக்கையாளர்களின் தனி நபர் தகவல்களைக் காப்பதில் முன்னுரிமை தரும். ஏற்கனவே உள்ள பிரவுசர் ஹிஸ்டரியில் பயன் படுத்தப்பட்ட வெப் வரையறைகள், பெர்சனல் தகவல்களைக் காப்பதில் சில குறைகளைக் கொண்டிருந்தது. அது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
4.முடங்கிப் போகாது: பிரவுசரின் ப்ளக் இன் புரோகிராம் ஏதேனும் கிராஷ் ஆனால், பிரவுசரின் இயக்கம் முழுமையாக நின்று போய், மீண்டும் இயக்க வேண்டிய நிலையில் பிரவுசர் முடங்கிப் போகும். தற்போது இது களையப்பட்டுள்ளது. தொடர்ந்து தடையின்றி இன்டர்நெட் தேடலை மேற்கொள்ளலாம். அந்த பக்கத்தை மட்டும் மீண்டும் திறந்தால் போதும்.
5. இயங்கு திறன்: பயர்பாக்ஸ் பிரவுசர் முதலில் தொடங்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்பது பலரின் குற்றச்சாட்டாக இருந்து வந்தது. இதனையும், இணையப் பக்கங்கள் இறக்கிக் காட்டப்படும் நேரத்தினையும் மொஸில்லா கணிசமாகக் குறைத்துள்ளது.
6.தோற்றம்: பிரவுசரைத் திறந்தவுடனேயே நம் கண்ணில் படுவது அதன் புதிய தோற்றமே. இணையத் தளங்களில் உள்ள தகவல்களுக்கு அதிக இடம் தரும் வகையில் டேப்கள் மேலே கொண்டு செல்லப்பட்டுள்ளன.
பயன்படுத்துபவரை வழி நடத்தும் இன்டர்பேஸ் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. இந்த வகையில் ஆப்பரா மற்றும் கூகுள் குரோம் பிரவுசர்களில் காணப்படும் சில அம்சங்களை, மொஸில்லா புதிய பதிப்பில் கொண்டு வந்துள்ளது எனக் கூறலாம். பல புதிய பட்டன்களும், ஒருங்கிணைந்த மெனுவும் தரப்பட்டுள்ளது. மெனுக்கள் அனைத்தும் பயர்பாக்ஸ் என்ற இடது ஓரம் உள்ள பட்டனுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கூகுள் குரோம் பிரவுசரில் இருப்பதைப் போல, டேப்கள் அனைத்தும் மேலாக நிறுத்தப் பட்டுள்ளன. கூகுளின் பிரவுசரில் இவை வட்டமாக இருக்கின்றன. இங்கே சரியான சதுரமாக உள்ளன. இருப்பினும் மெனுபார் தொடக்கத்தில் மறைத்துவைக்கப்படுகிறது. பயன்படுத்துபவர் விரும்பினால், அதனை பழைய பதிப்புகளில் இருந்தாற்போல வைத்துப் பயன்படுத்தலாம்.
7.புக்மார்க் பட்டன்: சர்ச் பாக்ஸுக்கு அடுத்தபடியாக, புக்மார்க் பட்டன் தரப்பட்டுள்ளது. இதில் கிளிக் செய்வதன் மூலம், அனைத்து புக்மார்க்குகளும் போல்டர்களும் நமக்குத் தேடிப் பார்க்க கிடைக்கின்றன.
8. தேவையான டேப் கிடைக்க: பல டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரை இயக்குகையில், நாம் செல்ல விரும்பும் தளம் எந்த டேப்பில் உள்ளது என்பதைக் காண நமக்குச் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். இதற்கான ஒரு தீர்வை இந்த பதிப்பு கொண்டுள்ளது. ஸ்மார்ட் லொகேஷன் பாரில், விரும்பும் தள முகவரி அல்லது அதன் தலைப்பு பெயரினை டைப் செய்து நேரடியாகவும், விரைவாகவும் அந்த தளத்திற்குச் செல்லலாம்.
9.விண்டோஸ் 7 ஒருங்கிணப்பு: இந்த புதிய பதிப்பு விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் முழுமையான முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. டேப்களின் பிரிவியூ மற்றும் ஜம்ப் லிஸ்ட் இதிலும் தரப்பட்டுள்ளது. டேப் பிரிவியூவில் திறக்கப்பட்டுள்ள அனைத்து தளங்கள் குறித்த தகவல்களைப் பார்வையிடலாம். ஜம்ப்லிஸ்ட் மூலம் அடிக்கடி திறந்து காணும் தளங்களுக்கு எளிதாகச் செல்லலாம்.
10. வேகம்: குரோம் மற்றும் ஆப்பராவுடன் ஒப்பிடுகையில், இந்த பதிப்பின் வேகம் குறைவாகவே உள்ளது. ஆனால் முந்தைய 3.6 பதிப்பினைக் காட்டிலும் வேகம் கூடுதலாக உள்ளது.
இந்த பதிப்பு குறித்த வீடியோ காட்சி ஒன்றினை http://videoscdn.mozilla.net/firefox4beta/ Firefox_4_beta. webm என்ற முகவரியில் மொஸில்லா வெளியிட்டு ள்ளது. புதிய சோதனைப் பதிப்பினை http://www.mozilla.com/enUS/firefox/beta/ என்ற முகவரி யில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சோதனைப் பதிப்பில் இருக்கும் அனைத்தும், இறுதியாக வெளியிடப்படும் தொகுப்பில் கிடைக்கும் என்று உறுதி கூற முடியாது. இதனைப் பயன்படுத்து பவர்களின் கருத்துக்களின் அடிப்படை யிலேயே இறுதி வடிவம் முழுமையாக்கப்படும் என மொஸில்லா அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment