எருக்கூரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் மனைவி மிகவும் பொல்லாதவள். தன் கணவனை மிகவும் கொடுமை செய்வாள். தினமும் விளக்குமாற்றால் தன் கணவனை இரண்டு அடி அடித்த பின்பு தான் அவனுக்கு சோறு போடுவாள்.
இப்படியே பலகாலம் நடந்தது. ஒரு நாள் அவனுக்கு மனது வெறுத்துப் போனது. பத்து நாட்களாவது மனைவியிடம் விளக்குமாற்று அடி வாங்காமல், எங்கேயாவது போய் விட ஆசைப்பட்டான்.
""நான் வேலை விஷயமாக பத்து நாட்கள் வெளி ஊருக்கு போகப் போகிறேன்,'' என்றான்.
""அய்யய்யோ! உங்களை விளக்குமாற்றால் அடிக்காமல் இருந்தால் எனக்கு தூக்கமே வராதே,'' என்றாள்.
""இங்கு தோட்டத்தில் நான் வளர்த்த ஒரு மரம் உள்ளது. தினம் ஒரு முறை என்னை அடிப்பது போல நினைத்துக் கொண்டு அடி,'' என்று கூறினான். பின்பு ஊருக்குப் போய்விட்டான்.
மறுநாள் விவசாயியின், மனைவியும் அதே போல மரத்தை விளக்குமாற்றால் அடித்தாள். வெகு நாட்களாக அந்த மரத்தில் தங்கியிருந்த பேயின் மீது அந்த அடிகள் விழுந்தன. அந்த அடி தாங்காத பேய் கதறிக் கொண்டு அந்த மரத்தை விட்டு ஓடியே போய்விட்டது.
அது ஓடிய போது வழியில் விவசாயியைக் கண்டது. அவன் மீது அதிக இரக்கம் கொண்டது. அவனை நெருங்கி, ""நீ எப்படித்தான் உன் மனைவியிடம் விளக்குமாற்றால் அடி வாங்கினாயோ! உன்னை நினைத்தால் பாவமாக உள்ளது. உனக்கு உதவி செய்ய பிரியம் கொள்கிறேன். இந்த நாட்டு மன்னன் மகளை நான் பிடித்துக் கொள்கிறேன். நீ வந்ததும் அவளை விட்டு ஓடி விடுவேன். எனவே, அரசன் தரும் பரிசுகளைப் பெற்று மகிழ்ச்சியாக இரு,'' என்று கூறியது.
விவசாயியும் ஒப்புக் கொண்டான். பேயும் சொன்னபடி அரசன் மகளைப் பிடித்துக் கொண்டது. யாரெல்லாமோ வந்து வைத்தியம் செய்தும். தோற்று விட்டனர். முடிவில் விவசாயி அரண்மனைக்குச் சென்றான். அரசன் மகளிடம் சென்றான். உடனே பேயானது, ""விவசாயியே உன்னிடம் சொன்னபடி உன்னைக் கண்டு அஞ்சி ஓடுகிறேன். இனி என் வழியில் நீ மீண்டும் வந்தால் உன்னைக் கொல்வேன்,'' என்றது. பின் இளவரசியை விட்டு ஓடிவிட்டது.
இது கண்ட மன்னன் விவசாயிக்கு அதிக பொன்னும் பொருளும் தந்தான். இளவரசியை விட்டு ஓடிய பேய் பக்கத்து நாட்டிற்குச் சென்றது. அங்கிருந்த இளவரசியைப் பிடித்துக் கொண்டது. அந்த நாட்டு மன்னன் விவசாயி பேய் விரட்டிய கதையை கேள்விப்பட்டான். எனவே, உடன் விவசாயியை வரவழைத்தான். ""என் மகளுக்கு பிடித்துள்ள பேயை நீதான் விரட்ட வேண்டும். அப்படி நீ அந்தப் பேயை விரட்டவில்லை என்றால் நான் உன்னைக் கொன்று விடுவேன்,'' என்று கூறினார்.
இது கேட்ட விவசாயி திடுக்கிட்டான். பேயை விரட்ட நினைத்தால் பேய் அவனை கொன்றுவிடும். அப்படி பேயை விரட்டாவிட்டால் மன்னன் அவனைக் கொன்று விடுவான். எனவே, சாவை விட்டு எப்படி தப்பிப்பது என்று விவசாயி யோசித்தான்.
முடிவில் ஒரு தந்திரம் செய்தான். அதன்படி பேயும் அவனை கொல்லாமல் இளவரசியிடம் இருந்து ஓடியது. அரசனும் விவசாயியைக் கொல்லாமல் ஏராளமான பணமும் காசும் தந்து அனுப்பினார். அவற்றை கொண்டு போய் வீட்டில் வைத்துவிட்டு புது துடைப்பம் வாங்கி மனைவியை சாத்து சாத்து என சாத்தினான். "இந்த பணம், காசு இல்லை என்றுதானே நீ என்னை அடித்தாய். இனிமேல் வாயை திறந்தால் சாத்திடுவேன் சாத்தி!'' என அடித்தான். வாய் பொத்தி நின்றாள் விவசாயியின் மனைவி!
அப்படி என்ன தந்திரம் செய்து விவசாயி பேயை இளவரசியிடமிருந்து விரட்டி இருப்பான் என்று தெரிந்தால் நன்றாக யோசனை செய்து சொல்லுங்களேன் பார்க்கலாம்.
விடை:
விவசாயி பேய் பிடித்த இளவரசியிடம் சென்று, ""அடப் பேயே! என் மனைவி விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு என்னை அடிக்க ஓடி வருகிறாள். அதனால்தான் நான் தப்பிக்க இங்கு ஓடி வந்தேன்,'' என்றான். உடனே பேய், ""என்ன? விளக்கு மாற்றுடன் உன் மளனைவி ஓடி வருகிறாளா? அய்யய்யோ!'' என்று பயந்து, அலறியபடி இளவரசியை விட்டு விட்டு ஓடியது.
2 comments:
hehehe super
Ayyo Ayyo ..:P
Post a Comment