திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது, ஆனால், உண்மையில் நடப்பதென்ன? எல்லா திருமணங்களும் வெற்றிகரமானதாக இருக்கிறதா? இந்த கேள்விக்கு பதில் இல்லை என்றே இப்போது பெரும்பாலானோர் சொல்கின்றனர். கோர்ட்களில் இப்போது உள்ள வழக்குகளில், மிக அதிக வழக்குகள் விவாகரத்து வழக்குகள்தான்.
காதல் திருமணம் செய்தவர்களும் சரி... பெற்றோர் பார்த்து, பேசி முடித்து, நடத்தி வைத்த திருமணங்களும் சரி... பெரும்பாலானவை கோர்ட்களில் போய் நின்று விடுகின்றன. இதற்கு காரணம், தம்பதியினரிடையே சரியான புரிதல் இல்லாததுதான். திருமணம் முடிந்த உடனேயே ஒருவருக்கொருவர் ஈகோ பிரச்னை, பணப் பிரச்னை, உடல் நல பிரச்னை என, பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விடுகின்றன. இந்த பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு, திருமணத்திற்கு முன்பே இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளுதல் தான்.
திருமணம் செய்து கொள்ளப்போகும் இருவரும், மனம் விட்டு பேசினால் மட்டும் போதாது. உண்மையான பிரச்னை என்ன என்று அப்போது தெரியாது. கீழ்க்கண்ட கேள்விகளை கேட்டு , பதிலை பெற்ற பின் முடிவு செய்தால் போதும். பின்னர், திருமண வாழ்க்கையில் எந்த பிரச்னையும் வராது என்கின்றனர் நிபுணர்கள்.
இதோ அந்த கேள்விகள்:
1. உங்களை கை பிடிக்கப் போகிறவரின் மொத்த வருமானம் எவ்வளவு?
2. தனிப்பட்ட முறையில் ஏதாவது கடனை திருப்பி செலுத்தி வருகிறாரா?
3. வீட்டுக்கடனுக்கான தவணையில் இன்னும் எத்தனை தவணைகள் திருப்பி செலுத்த வேண்டும்?
4. திருமணத்திற்குப் பின்பும் இருவரும் தனித்தனி பாங்க் கணக்கு வைத்திருந்தால் தப்பில்லையே?
5. இதுவரை எத்தனை முறை வேலையை மாற்றியிருக்கிறீர்கள்? அதற்கு ஏதாவது முக்கிய காரணம் உண்டா?
6. வெளிநாட்டில் வேலை கிடைத்தால், அதை ஏற்றுக் கொள்ளலாமா? குடும்பத்தினரை அழைத்துச் செல்ல அனுமதிக்கா விட்டால் என்ன செய்வீர்கள்?
7. உங்கள் குடும்ப டாக்டரிடம், எச்.ஐ.வி., டெஸ்ட் செய்து கொள்ள சம்மதமா?
8. கோபம் வரும்போது, மிகவும் ஆவேசமடைவீர்களா?
9. செக்ஸ் உறவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
10.திருமணத்திற்குப் பின் பெற்றோருடன் வசிக்கப் போகிறீர்களா? தனியாகவா?
கேள்விகள் இவ்வளவுதான். திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் இந்த கேள்விகளை கேட்டு பதிலை பெற்றுக் கொள்ள வேண்டும். கேள்விகள் கடினமாக தோன்றலாம்; ஆனால், திருமணத்திற்குப் பின், பெரும்பாலான தம்பதிகள், இதே விவகாரங்களில் தான் பிரிந்து விடுகின்றனர். எனவே, திருமணத்திற்கு முன்பே, எல்லா சந்தேகங்களையும் போக்கிக் கொண்டால், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
முயற்சி செய்யுங்கள்.
0 comments:
Post a Comment