ஹிரோஷிமா நாகசாகி மீது அணுகுண்டு வீச்சு நடத்தி அடுத்த மாதம் 6ம்; திகதியுடன் 65 ஆண்டுகள்.ஆதலால் அதை பற்றிய பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன். பதிவு மிக நீண்டதாக இருக்குமென்று நினைக்கறன்.ஆனால் பொறுமையுடன் வாசியுங்கள் உங்களுக்கு தெரியாத விஷயங்கள் நிறைய தெரிய வரும்.
ஆகஸ்ட் 6, 1945 விடியற்காலை நேரத்தில், எனோலா கே (Enola Gay)என்ற பெயருடைய அமெரிக்க B-29 போர்விமானம் ஒன்று பசிபிக் தீவான டினியனில் இருந்த அமெரிக்க விமானதளத்தை விட்டு சீறிப்புறப்பட்டது. தரையில் இருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் அது பறந்தது.
உள்ளூர் நேரம் காலை 8.15க்கு இந்த விமானம், 255,000 மக்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டிருந்த ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவின் தெளிவான வானில் தான் சுமந்துவந்திருந்த சுமையைப் போட்டது. இந்த விமானம் கொண்டுவந்திருந்த, "சிறு பையன்" (Little Boy) என்று பெயரிடப்பட்டிருந்த அணுக் குண்டு நகர மையத்திற்குமேல் 600 மீட்டர்களில் வெடித்தது; இதன் விளைவாக, கிட்டத்தட்ட அங்கிருந்த 30 சதவிகிதத்தினர், 80,000 மக்கள், உடனடியாகவோ அல்லது வெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயோ கொல்லப்பட்டனர்
|
ஒரு புதிய வகையிலான குண்டு
ஜூலை 26, 1945 அன்று நேச நாடுகள் வெளியிட்ட பொஸ்ட்டாம் பிரகடனம், நிபந்தனையற்ற சரணாகதிக்கு ஜப்பான் உடன்படவில்லை என்றால் "விரைவில் முழு அழிவு" அதன்மீது விளைவிக்கப்படும் என்ற உறுதிமொழியை கொண்டிருந்தது. நாகசாகி மற்றும் ஹிரோஷிமா நகரங்களை பொறுத்தவரையில் அணுகுண்டு கொண்டுவந்தது நிச்சயமாக இதுதான்.
ஹிரோஷிமாவின்மீது குண்டுவீச்சு நடப்பதற்குள்ளேயே, ஜப்பானின் பல பெருநகரங்கள் அமெரிக்க விமானப்படை சக்தியின் மூலம் கடுமையாக தாக்கப்பட்டிருந்தன. அமெரிக்க இராணுவம் ஜப்பானிய வான்பரப்பின் கட்டுப்பாட்டை கொண்டபிறகு, அவ்வாண்டின் முற்பகுதியில் டோக்கியோவின் மீது 87,000 மக்களை கொன்ற பேரழிவு தரும் தீக்குண்டுகளை வீசியது உள்பட, முறையாக பெருநகரப் பகுதிகளில் குண்டுவீசத் தொடங்கியது. குடிமக்கள் உற்பத்தித் தொழில் வசதிவாய்ப்புக்களை மேற்கொண்டிருந்ததுடன், அந்நகரம் முக்கிய இராணுவத் தலைமையகத்தையும் கொண்டிருந்ததால், இதுகாறும் ஹிரோஷிமா இலக்கு வைக்கப்பட்டிருக்கவில்லை என்ற உண்மை அங்கு வசித்துவந்த மக்களால் ஒரு முரண்பாடான செயலாகவே கருதப்பட்டது.
ஆயினும்கூட குண்டுவீச்சு, ஹிரோஷிமா மக்கள் தயாரற்ற நிலையில் இருந்தபோதுதான் நடத்தப்பட்டது. வானிலை ஆய்வு விமானம் ஒன்று அவ்வழியே அன்று காலை சென்றபோது அதிகாரிகள் சங்கொலிகளை எழுப்பி மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினாலும், அது சென்றபின் இனி அச்சமில்லை என்ற அறிவிப்புத்தான் கொடுக்கப்பட்டது.எனோலா கேயும் அத்துடன் தொடர்ந்து வந்திருந்த இரு விமானங்களும் முன்னாய்வு நடத்தும் விமானங்கள் என்றுதான் கருதப்பட்டதால், அவை நகரத்தின் மேலே பறந்தபோது, எச்சரிக்கை சங்குகள் முழங்கப்படவில்லை.
ஹிரோஷிமா நகரத்தின் மீது போடப்பட்ட யூரேனியம் குண்டுவெடிப்பின் சக்தி 13,000 டன்கள் TNT க்கு ஒப்பானவை ஆகும். குண்டுவிளைவினால் வெளிப்பட்ட அணுக் கதிரியக்கம் பல மில்லியன் சென்டிகிரேட் டிகிரிக்கள் வெப்பத்தை தோற்றுவித்தது. மையக் கருப்பகுதியில், அதாவது 600 மீட்டர்கள் கீழே இருந்த நிலப்பகுதியில் வெப்பம் 3,000த்தில் இருந்து 4,000சென்டிகிரடாக, அதாவது இரும்பை உருக்குவதற்குத் தேவையான வெப்பத்தைப் போல் இரண்டு மடங்கு இருந்தது. மிக ஆழ்ந்த தன்மையில் வெளிப்பட்டிருந்த வெப்பமும் ஒளியும் இலக்குப்பகுதிக்கு ஒன்றரைக் கிலோமீட்டர் சுற்றுப் பகுதி முழுவதையும் கருகச் செய்துவிட்டது; மேலும் இதைத் தொடர்ந்து வெளிவந்த மகத்தான அதிர்ச்சி அலை இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த கட்டிடங்கள் பலவற்றையும் அழித்துவிட்டது.
ஹிரோஷிமா குண்டு Aioi Bridge என்ற இலக்கைக் குறி கொண்டிருந்தது; ஆனால் 250 மீட்டர் அளவில் அந்த இலக்கை அது எய்தத்தவறியது. அதற்குப் பதிலாக, டாக்டர் ஷிமா என்பவர் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனைக்கு நேர் எதிரே அது வெடித்தது: "ஷிமா மருத்துவமனை மற்றும் அதில் இருந்த நோயாளிகள் அனைவரும் காற்றுருவாகக் கரைந்தனர்.... 1,500 அடி அரைவிட்ட வட்டத்திற்குள் இருந்தவர்களில் 88 சதவிகிதத்தினர் உடனடியாகவோ அல்லது அன்றைய பொழுதிற்குள்ளாகவோ மடிந்தனர். வட்டத்தில் எஞ்சியிருந்தவர்கள் இதற்குப் பின் சில வாரங்களிலோ, மாதங்களிலோ மாண்டு போயினர்."
மையக் கருவட்டத்திற்கு அருகில் இருந்தவர்கள் உடனடியாக எவ்வித தடயமும் இன்றி கருகிப்போயினர்; ஒரு சுவர் அல்லது தெரு அவர்களது அங்கத்தை பாதுகாத்திருந்தால் கூட மிகச் சிறிய கணமே அவர்கள் ஆரம்ப வெப்ப வெடிப்பில் இருந்து உயிர்பிழைத்தனர். வெடிப்பிற்கு அருகில் இருந்தவர்கள் "எந்த மனித உடற்கூறும் பதிவுசெய்ய முடியாத வேகத்தில் சூனியத்தில் கரைந்து போயினர்" என்று ஒரு நூலாசிரியர் எழுதியுள்ளார்.
வெடிப்பின் மையத்திற்கு சற்றே தள்ளியிருந்தவர்கள் உடனடியாக இறக்கவில்லை; ஆனால் மூன்றாந்தர தீப்புண்கள் அவர்கள் உடல்களெங்கும் கடுமையாக பற்றின; அதிலும் நேரடியாக வெப்பத்திற்கு வெளியான உடற்பகுதிகள் அந்நிலையை அடைந்தன. காயங்களால் அவர்கள் இறக்கும்முன்னர் ஆழ்ந்த வலியைக் கொடுத்த காலத்தாலும் அவர்கள் பாதிக்கப்பட்டனர். வெடிப்பை கண்ணுற்றவர்கள், தப்பியவர்கள் மிகக்கொடூரமான முறையில் இந்த பாதிப்பாளர்கள் மாய்ந்தனர் என்று ஒரேசீராக விவரித்தனர்.
வெடிப்பு நடந்தபொழுது நகரத்தின் வெளிப்பகுதியில் இருந்த ஒரு டாக்டர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஓடோடி வந்தபோது தான் பார்த்தவற்றை எழுதி வைத்துள்ளார். நகர மையப் பகுதியை அடைந்தபோது, "ஒரு வினோதமான உருவம் தன்னுடைய தடுமாறிய கால்களுடன் மெதுவாக என்னருகே வந்தது. ஒரு மனித வடிவத்தைக் கொண்டிருந்தாலும், அது முற்றிலும் நிர்வாணமாக இருந்து, இரத்தம் தோய்ந்த சகதியால் மூடப்பட்டிருந்தது. உடல் முற்றிலும் ஊதிப்போயிருந்தது. அதனுடைய திறந்த மார்பு, இடுப்புப் பகுதிகளில் இருந்து கந்தல் துணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. கைகள் மார்பைக் கட்டிய வண்ணமும், உள்ளங்கைகள் கீழ்நோக்கியும் இருந்தன.
கந்தல்துணியில் இருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. உண்மையில் நான் கந்தல்கள் என்று நினைத்தது மனிதத் தோலின் துகள்களாகும், நீர் என்று நினைத்தது மனித இரத்தமாகும்... எனக்கு முன்பு இருந்த சாலையைப் பார்த்தேன். அரைநிர்வாணமாய், எரிக்கப்பட்டும், குருதி கொட்டிக்கொண்டும் கணக்கிலாடங்கா தப்பித்தவர்கள் என் பாதைக்கு முன் நின்றிருந்தனர். அவர்கள் மொத்தத் தொகுப்பாக இருந்தனர்; சிலர் முழங்கால்களால் ஊர்ந்த வண்ணமும், சிலர் இரண்டு கைகள், இரண்டு கால்கள் இவற்றைப் பயன்படுத்தி ஊர்ந்ததையும், சிலர் கஷ்டப்பட்டு நின்றிருந்த நிலையையும் அல்லது மற்றவர் தோள்களின்மீது சாய்ந்திருந்ததையும் பார்த்தேன்."
"கந்தல் போலத் தோல் தொங்கிக் கொண்டிருந்த நிலையில்" மக்கள் இருந்தனர் என்ற விவரிப்பு, பொதுவாக தப்பிப் பிழைத்த பலராலும் அவர்கள் கண்ட காட்சியை பற்றிக் கூறப்பட்டுள்ளது. பலரும் மக்கள் தெருக்களில் அலைந்து கொண்டிருப்பதையும், பெரும் வேதனையில் இருப்பதையும், வெடிப்பினால் செவிடாகி விட்டநிலையிலும், தீப்பிழப்பு தாக்குதலினால் குருடாகி விட்ட நிலையிலும், அவர்களுடைய கைகள் அவர்களுக்கு முன் நீட்டப்பட்டிருந்த நிலையில் "முன்னங் கைகள் தொங்கிக் கொண்டிருந்தது ...வெடிப்புப் பாளங்கள் உடலில் ஒன்றோடொன்று உராய்வதால் ஏற்பட்ட பெரும் வலியில் துடித்த வண்ணமும்" இருந்தனர் , சிலர் "தூக்கத்தில் நடப்பவர்கள் போல் தள்ளாடிக் கொண்டு இருந்தனர்."
ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வகையில் மரித்துப் போயிருக்கக் கூடும். Tabuchi என்ற பெயர்கொண்ட டாக்டர் ஒருவர், "இரவு முழுவதும் நூற்றுக்கணக்கான காயமுற்ற மக்கள் எங்கள் வீடு வழியாகச் சென்று கொண்டிருந்தனர்; ஆனால் இன்று காலை [ஆகஸ்ட் 7] எல்லாம் நின்றுவிட்டது. அவர்கள் அனைரும் தெருவின் இருபுறமும் படுத்துக் கொண்டிருந்தது; தொகுப்பின் அடர்த்தி அவர்கள் மீது கால்வைக்காமல் நகர முடியாது என்று இருந்தது." . தான் பார்த்ததை ஒரு தப்பிப் பிழைத்தவர், "அதில் தப்பிப் பிழைத்த நூற்றுக் கணக்கானவர்கள் எவ்வித உணர்வும் இன்றி சென்று கொண்டிருக்கின்றனர். தங்கள் பெரும் துயரப்பளுவில் வேதனையுற்று சிலர் பாதி இறந்து விட்டார்கள்.... அவர்கள் நடைபிணம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை." என விவரிக்கிறார்.
உடனடியாக மரணம் அடையாதவர்கள் ஆற்றங்கரைகளுக்கோ, நீர்நிலைகளுக்கோ சென்று நீரில் அமிழ்ந்து தீப்புண்கள் வேதனையில் இருந்து விடுவித்துக் கொள்ள முற்பட்டனர். "Choju-Em ஆற்றின் நீண்ட கரையில் எவ்வாறு ஏராளமான எரிந்திருந்த மனிதர்கள் இருந்தனர் என்பதை நான் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவர்கள்தான் அங்கு நிறைந்திருந்தனர். மிக அதிகமான மக்களின் உடல்கள், நீரில் மூழ்கியவகையில் அல்லது கரையோரத்தில் இறந்த நிலையில், தண்ணீரில் நனைந்த வண்ணம் அலைகளுக்கேற்ப அசைந்து கிடந்ததை நான் பார்த்தேன்." என்று தப்பிப் பிழைத்தவர் ஒருவர் விவரித்துள்ளார். மற்றொரு டாக்டரான Hanoka, "நெருப்புக் காப்பகங்கள் முழுவதுமாக இறந்த மக்களால் நிரம்பியிருந்தன; அவர்கள் உயிரோடு வெந்ததைப் போன்று இருந்தது" எனத் தான் பார்த்ததாக விவரித்துள்ளார்.
வெடிப்பின் மையத்தைச் சுற்றி நகரத்தில் பல கிலோமீட்டர் தூரம் வரை அனைத்தும் முற்றிலும் அழிந்துவிட்டன. வெடிப்பினால் தகர்ந்து விழாத கட்டிடங்கள், அதைத் தொடர்ந்து அண்மையில் இருந்த மரவீடுகளில் சூழ்ந்திருந்த நெருப்பு பரவத் தொடங்கவே, அவற்றில் எரியுண்டன. இந்தத் தீயினால் அவர்களுடைய வீடுகள் சரிந்தபொழுது அதில் சிக்கிக் கொண்ட பலரும் அவற்றின் கீழே அகப்பட்டு மாண்டுபோயினர்.
Dr.Hachiya எழுதுகிறார்: "ஹிரோஷிமா இனி ஒரு நகரமாக இல்லை; ஒரு தீயில் கருகிய புல் தரைத் தளமாகத்தான் அது காட்சியளித்தது. கிழக்கிலும், மேற்கிலும் அனைத்தும் தரைமட்டமாயின. தொலைவில் இருந்த மலைகள் நான் நினைத்தும் பார்க்கமுடியாத வகையில் அருகே இருந்ததைப் போல் தோன்றியது. உஷிடா மலைகளும் நிகிட்சு காடுகளும் புகைப்படலத்திற்கப்பால், ஒரு முகத்தின் மூக்கு, கைகள் போல் தோன்றின. வீடுகள் அனைத்தும் போனபின்னர் ஹிரோஷிமாதான் எவ்வளவு சிறியதாக இருந்தது."
ஹிரோஷிமா, நாகசாகி இரண்டு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்களின் ஒரு வாரத்திற்குள் கடுமையான காயமடைந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்து விட்டனர் அல்லது பிழைக்க முயன்றனர். இந்தக் கட்டத்தில்தான் ஆயிரக்கணக்கான நோயாளிகள் "40 டிகிரி செல்சியசுக்கும் மேலான காய்ச்சலின் பாதிப்பால் தாக்குண்டனர்.... இதன் பின்னர் அவர்கள் மூக்கில் இருந்தும் தொண்டையில் இருந்தும் இரத்தக் கசிவு ஏற்பட்டது; பின்பு அவர்கள் ஏராளமான இரத்தத்தை உமிழ்ந்தனர்.... இக்காலக் கட்டத்தில்தான் ஒரு மர்மமான முறையில் முடிஉதிர்தல் அல்லது முடி இழப்பு தப்பிப் பிழைத்தவர்களிடையே ஏற்பட்டது. வலியினால் துடிக்கும்போது தங்கள் கைகளினால் தலையைப் பிடித்துக் கொள்ள நோயாளிகள் முற்பட்டபோது, அவர்களுடைய முடியானது விரல்கள் பட்டவுடனேயே உதிரத் தலைப்பட்டன."
இது அணுக் கதிரியக்கத்தினால் விளைவிக்கப்பட்ட நோயாகும்; அக்கதிரியக்கம் ஏராளமான gamma கதிர்களை வெளியிட்டது. அந்த நேரத்தில், நகரத்தில் இருந்த டாக்டர்கள் நகரத்தின் மீது எறியப்பட்டிருந்த குண்டின் வினோதத் தன்மை பற்றி இன்னும் அறிந்திருக்கவில்லை; அவர்கள் மக்கள் ஒருவேளை கடுமையான வயிற்றுப் போக்கினால் அவதியுறுகின்றனரோ என நினைத்தனர்; அல்லது குண்டின் மூலம் வெளிப்பட்ட இரசாயனப்பொருளின் பாதிப்பு ஏதேனும் இருக்கலாம் என்று நினைத்தனர்.
ஒரு பிரிட்டிஷ் மருத்துவ அறிக்கை விளக்கியதாவது, இந்த வெடிப்பில் இருந்து வெளியான கதிரியக்கம் இரத்தத்தில் உள்ள உயிரணுக்களை அழிக்காமல் "இரத்தத்தில் உள்ள பல்வேறு வகையான செல்கள் உருவாகக் காரணமாக உள்ள எலும்புப் பகுதிக்குள் இருக்கும் பழமையான அணுக்களை அழித்தன. இதன் விளைவாக தீவிரமான விளைவுகள் ஏற்பட்டன;
அதவாது இரத்தத்தில் முற்றிலும் வடிவமைப்பு கொண்டுள்ள அணுக்கள் தாமே மடியும்போது, எலும்பின் மஜ்ஜையில் இருந்து வெளிப்படும் புது அணுக்கள் தோன்றுவது நிகழவில்லை... சிகப்பு அணுக்கள் தோன்றுவது நின்றவுடன், நோயாளி பெருகி வந்த இரத்தச்சோகையால் அவதியுற்றார். சிவப்பணு உருவாக்கம் நின்றவுடன், தோல், கண்ணின் விழிபடலம், சில சமயம் குடல்கள், சிறுநீரகங்கள் ஆகியவற்றிலும் நலிந்த இரத்தமானது சிறிய, பெரிய கசிவுகளாக வெளிப்பட்டது. இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் வீழ்ச்சி கடுமையான நோய்களின் எதிர்ப்பைக் குறைத்தது; இதன் விளைவாக நோயாளி எளிதில் ஏதேனும் தொத்துவியாதிக்கு இரையாக நேர்ந்தது; இது வாயில் தோன்றி அல்லது உதடுகள், நாக்கு, சில சமயம் தொண்டை என்பவற்றில் எல்லாம் பெரும் புண்களாக வடிவெடுத்தது.
...சில சமயம் குண்டுவெடிப்பிற்கு ஒரு வாரம் கழித்து மரணங்கள் துவங்கி மூன்று வாரகாலத்தில் உச்சக்கட்ட எண்ணிக்கையை எய்தின. ஆறு அல்லது எட்டு வாரங்களுக்கு பின்னர் பாதிப்பு இல்லை.
கதிரியக்க நோய், வெடிப்பிற்கு அருகில் இருந்தவர்களை கடுமையாகத் தாக்கியது. ஆனால் தப்பிப் பிழைத்தவர்கள் பலரிடமும் உளரீதியாக இது பெரும் வடுக்களை ஏற்படுத்தியது; அவர்கள் இன்று நலமாக இருந்தாலும் நாளையே இறக்க நேரிடும் என்ற பெரும் கவலையில் இடையறா வேதனையை அடைந்தனர்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரிப்பு ஹிரோஷிமா தாக்குதலில் தப்பித்தவர்களின் சாட்சியத்தில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும். நாகசாகியிலும் விளைவுகள் இதையொத்துத்தான் இருந்தன. ஹிரோஷிமா குண்டுவீச்சின் முழு விளைவும் அறியப்படுவதற்குள், நாகசாகி குண்டுவீச்சு நடைபெற்றது. ஆகஸ்ட் 11ல் போடப்படுவதாக இருந்தது ஆகஸ்ட் 9 அன்று முன்கூட்டியே போடப்படவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது; ஏனெனில் அடுத்த நாட்களில் வானிலை சாதமாக இருக்காது என்று கருதப்பட்டது.
நீண்டகாலமாக நாகசாகி ஒரு முக்கிய துறைமுகமாக இருந்ததோடு, ஜப்பானிய தீவான கியூஷூவில் இருந்த அழகிய நகரங்களில் ஒன்றாகவும் இருந்தது. அங்கு முக்கியமான தொழில், கப்பல் கட்டுதல் ஆகும்; அதனால்தான் இரண்டாம் குண்டுவீச்சின் இலக்காக அது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. கிழக்கு ஆசியாவிலேயே அப்பொழுது மிகப் பெரிய தேவலாயத்தை கொண்டிருந்த உரகாமியின் புறநகரில் குண்டுவீச்சு நடைபெற்றது.
இரண்டாம் உலகப்போரின்போது பல கொடுமைகள் இழைக்கப்பட்டிருந்த அதேவேளை,. ஹிரோஷிமா, நாகசாகி மீதான குண்டுவீச்சுக்கள் ஐயத்திற்கிடமின்றி ஆணவம்மிக்க அழிவு நடவடிக்கையின் மிகப் பெரும் ஒற்றை நடவடிக்கையின் இரு உதாரணங்கள் ஆகும், அதில் பெரும்பாலும் நூறாயிரக்கணக்கான மக்கள், பிரதானமாக சாதாரண குடிமக்கள் துடைத்து அழிக்கப்பட்டுவிட்டனர். அவை உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்க மக்களுடைய நினைவில் இருந்து அழிந்துவிட அனுமதிக்கக்கூடாத நிகழ்வுகள் ஆகும் --அமெரிக்க இராணுவவாதத்தின் இரக்கமற்ற தன்மைக்கும் அழிக்கும் திறனுக்கும் ஒரு விருப்புறுதி ஆவணமாகும்.
கொஞ்சம் Alignement
Problem
இருக்கு Adjust பண்ணுக அணுகுண்டு தொடரும்...
0 comments:
Post a Comment