சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களில் செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. இது, தூசிகளும், சிறியதும் பெரியதுமான பாறைகளையும் கொண்டது.
இந்த பாறைகளும், தூசிகளும், பூமியைப் போல் சூரியனை வலம் வந்து கொண்டிருக் கின்றன. இவை சில நேரங்களில் பூமிக்கு மிக அருகில் வரும்போது, பூமியின் ஈர்ப்பு சக்தி காரணமாக ஈர்க்கப்படுகின்றன. இதனால், அவை பூமியின் ஈர்ப்பு பாதைக்குள் வந்து, காற்று மண்டலத்தில் நுழைந்து, பூமியை நோக்கி மிக வேகமாக ஊடுருவுகின்றன. அப்போது, காற்றின் உராய்வு காரணமாக தீப்பிடித்து அவை எரிந்து போய் விடுகின்றன. இவை தான் எரிகற்கள் என அழைக்கப்படுகின்றன.
நாசாவின் சமீபத்திய ஆய்வில் தூசிகள், பாறைகள் கொண்ட பிரமாண்டமான ஒரு தூசி மண்டலம் கண்டறியப்பட்டுள்ளது. நாசா அனுப்பியுள்ள ஹம்பிள் விண்வெளி தொலைநோக்கி இதை கண்டுபிடித்துள்ளது.
ஹம்பிள் தொலை நோக்கி மூலம், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சோதனையில், கடந்த மாதம் இரண்டு சிறிய கோள்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக புதியதாக ஒரு தூசு மண்டலம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சூரியனில் இருந்து 18 கோடி மைல் தூரத்திலும், பூமியில் இருந்து ஒன்பது கோடி மைல் தூரத்திலும் இந்த தூசி மண்டலம் காணப்படுகிறது. இதன் பெயர் பி/2010 ஏ2 என்பதாகும்.
கடந்த ஜனவரி இறுதியில் இந்த தூசி மண்டலத்தின் மையப் புள்ளியை தொடர்ந்து ஆய்வு செய்தபோது, இதன் தோற்றம் வழக்கமாக காணப்படும் சிறிய கோள்களை போன்று இல்லாமல் வேறுபட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
பிரபஞ்ச வெளியில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தை தொலைநோக்கி மூலம் காணும் போது, அது இழை போன்று நீண்டு, எக்ஸ் வடிவில் காட்சியளிக்கிறது.
இந்த தூசி மண்டலத்தை நிறமாலை பகுப்பு முறையில் ஆய்வு செய்ததில், இது, "புளோரா' கோள் குடும்பத்தை சேர்ந்தது என்றும், 10 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மோதலில் உடைந்ததால் பி/2010 ஏ2 தூசி மண்டலம் தோன்றியுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு வந்த ஒரு பொருள் மோதி தான் பூமியில் இருந்த டைனோசர்கள் அழிந்தன. ஆனால், அதுபோன்ற மோதல்கள் தற்போது ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
0 comments:
Post a Comment