தோட்டிவேலை பார்ப்பவராக இருந்தாலும் மதபோதகராகலாம், மனிதரில் பிறப்பாலும் உழைப்பாலும் உயர்வு தாழ்வு இல்லை எனற கோட்பாட்டுடன் பௌத்த இயக்கத்தைத் தோற்றுவித்தவர் புத்தர் என உலகம் அறிந்த சித்தார்த்த கௌதமர்.
இன்றைய நேபாளத்தில் லும்பினி என்ற கிராமத்தில் சாக்கிய மன்னரான சுத்தோதனாருக்கும், மகாமாயாவிற்கும் கி.மு. 563ம் ஆண்டு வைசாக பௌர்ணமி நாளில் மகனாக பிறந்தார் சித்தார்த்தன். கௌதமர் என்பது குலப்பெயர். 16வது வயதில் யசோதரா என்னும் மங்கையுடன் இணைந்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஒரு நாள் அரண்மனையிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தபோது எதிரில் வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், அடுத்து ஒரு நோயாளியையும், மூன்றாவதாக ஒரு சடலத்தையும் கண்டார். இதற்கு முன்னால் நேரில் கண்டிராத அந்தக் காட்சிகள் அவரது மனதை வெகுவாக பாதித்தன. அதனால் அவர் துறவறம் மேற்கொண்டார் என்றுதான் பொதுவாகக் கூறப்படுகின்றது. ஆனால் அவர் துறவு மேற்கொள்ள காரணமாக அமைந்தது ஒரு நதிநீர்ப் பிரச்சனை.
சங்கத்தைக் கூட்டிய சேனாதிபதி, நம் மக்களை கோசலியர்கள் தாக்கியுள்ளனர். நம் மக்களும் திருப்பித் தாக்க நேர்ந்துள்ளது. இது இப்படியே நீடிக்க முடியாது. இது நிறுத்தப்பட வேண்டும். அதற்கான ஒரே வழி கோசலியர்கள் மேல் போர் அறிவிப்பு செய்வதுதான். என்றார்.
சித்தார்த்தன் எழுந்தார்: எந்தப் பிரச்சனையையும் போர் தீர்ப்பதில்லை. அது மற்றொரு போருக்குத் தான் விதை தெளிக்கும். ஒரு கொலை காரன் மற்றொரு கொலைகாரனால் கொல்லப்படுவான். ஒரு ஆக்கிர மிப்பாளன் மற்றொருவனால் ஆக்கிரமிக்கபடுவான், அழிக்கிறவன் அழிக்கப்படுவான். கோசலியர்கள் மீது போர் அறிவிப்பு செய்வதில் சங்கம் அவசரப்படக் கூடாது என நான் கருதுகிறேன். உண்மையில் எந்தத் தரப்பார் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்படும் வகையில் நன்கு பரிசீலிக்கப்பட வேண்டும். நம்மவர்களும் ஆக்கிரமிப்பாளர்களாய் இருந்ததாக நான் கேள்விப்படுகிறேன். இது உண்மையல்ல என்றால்தான் நாமும் குற்ற மற்றவர்கள் என்பது தெளிவாகும்.
அதைக் கேட்ட சித்தார்த்தன் தெளிவாக எடுத்துரைத்தார்: நாம் குற்றத்திலிருந்து முழுமையாய் விடுபட வில்லை என்பதையே இது காட்டுகின்றது. எனவே, நம்மில் இருவரை நாம் தேர்தெடுப்போம், கோசலியர்களில் இருவரைத் தேர்தெடுக்கச் சொல்வோம், அந்த நால் வரும் ஐந்தாம் நபரை தேர்வு செய்யட்டும். ஐந்து பேர் கொண்ட இக்குழுவினர் வாக்குவாதத்தைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.
சித்தார்த்தன் கொண்டு வந்த இந்தத் தீர்மானம் முறையாக வழி மொழியப்பட்டது. ஆனால் அது பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதாக அறிவிக்கப் பட்டது.
சேனாதிபதி கோசலம் மீது போர் தொடுக்க வேண் டும் என்ற தனது தீர்மானத்தை வாக்கெடுப்புக்குவிட்டார். கௌதமர் எழுந்து நின்று அதை எதிர்த்தார். பகைமையால் பகைமை ஒழியாது என்று அறிவதே தர்மம் என்று நான் புரிந்து வைத்திருக்கிறேன். அன்பால் மட்டுமே அதை வெல்லமுடியும், என்றார். பொறுமையிழந்த சேனாதிபதி, தத்துவ விவாதங்களுக்கு நுழைவது அவசியமற்றது. வாக்கெடுப்பு நடத்தி, இதைப் பற்றி சங்கம் என்ன சொல்ல விரும்பு கின்றது என்பதை நாம் உறுதி செய்து கொள்ளலாம், என்றார். மறுநாள் சங்கம் கூடியபோது சித்தார்த்தனோடு சேர்ந்து சேனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து ஒரு சிறு பகுதியினர் வாக்களித்தனர், அவர்கள் பெரும் பான்மையினரின் முடிவுக்கு உடன்படுவது இல்லை என்று முடிவெடுத்தார்கள். ஆனால் அதை வெளிப்படையாக கூற துணிவற்றவர்களாக இருந்தனர். இதை அறிந்துகொண்ட சித்தார்த்தன் சங்கத்தாரை நோக்கிக் கூறினார்:
நண்பர்களே நீங்கள் விரும்பியதை நீங்கள் செய்யலாம். உங்கள் பக்கம் பெரும்பான்மையுள்ளது. போருக்கான ஆயுத்தங்களை மேற்கொள்ளும் உங்கள் முடிவை நான் எதிர்த்தாக வேண்டியிருப்பதற்காக வருந்துகிறேன். நான் உங்கள் படையில் சேரமாட்டேன். நான் போரில் பங்கேற்க மாட்டேன், என்றார்.
சேனாதிபதி, சங்கத்தில் சேர்க்கப்பட்டபோது நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகளை நினைத்து பாருங்கள். அவற்றில் எதையேனும் கடைப்பிடிக்கத் தவறுபவர்களே ஆனால் நீங்கள் பொது அவமானத்திற்கு ஆளாவீர்கள், என்றார்.
அதற்கு பதிலாக சித்தார்த்தன், ஆம்! என் உடலாலும், மனதாலும், உடைமையாலும், சாக்கியர்களின் மேலான நலன்களை பாதுகாப்பேன் என்பது உண்மைதான். ஆனால் இந்தப் போர் சாக்கியர்களின் மேலான நலனுக்கானது என்று நான் நினைக்கவில்லை. சாக்கியர்களின் உயர் நலன்களுக்கு முன்னால் என் பொது அவமானத்திற்கு என்ன முக்கியத்துவம்? முன்பு கோசலியர்களோடு சண்டையிட்ட காரணத்தாலாயே எப்படி சாக்கியர்கள் கோசல மன்னரை சார்ந்திருக்க வேண்டியதானது என்பதை சங்கதாருக்கு நினைவூட்டி எச்சரிக்க விரும்பு கிறேன், என்று கூறியவர் தொடர்ந்தார். இந்தப் போரினால் மேலும் சாக்கியர்களின் சுதந்திரத்தை மேலும் குலைக்க எண்ணுவது கோசல மன்னனுக்கு ஒன்றும் கடினம் இல்லை, என்று அவர் கூறினார்.
போர் தொடுப்பதை தாம் எதிர்ப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளை எண்ணி பார்த்தார் சித்தார்த்தர் அவர் முன் மூன்று வழிகளே இருந்தன:
1) படையில் சேர்ந்து போர் புரிவது,
2) தூக்கிலிடப்படவோ நாடு கடத்தப்படவோ சம்மதிப்பது,
3) அவருடைய குடும்பத்தினர் சமூக புறக்கணிப்பிலிருந்து தண்டிக்கப்படவும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவும் அனுமதிப்பது. முதலாவதை ஏற்பதில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். மூன்றாவதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
சங்கத்தாரிடம் சித்தார்த்தன், தயவு செய்து என் குடும்பத்தை தண்டிக்காதீர்கள். சமூகபுறக் கணிப்புக்கு உட்படுத்தி அவர்களை துன்பத்தில் ஆழ்த்தவேண்டாம். அவர்கள் வாழ்க்கைக் குரிய ஒரு சாதனமாக உள்ள அவர்களின் நிலங்களை பறிமுதல் செய்து அவர்களை வறியவர்களாக்காதீர்கள். அவர்கள் குற்றமற்றவர்கள் - நான்தானே குற்றவாளி? என் தவறுக்காக நானே துன்புறுகிறேன். நீங்கள் விரும்பும் தண்டனையை எனக்கு அளியுங்கள். நான் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் மன்னரிடம் முறையிடமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன், என்றார்.
உடனே சித்தார்த்தன், இதுதான் இடர்ப்பாடு என்றால் நான் ஒரு எளிய தீர்வைச் சொல்லுகிறேன். நான் துறவரம் பூண்டு நாட்டை விட்டு வெளியேறி விடுகிறேன். அதுவும் ஒரு வகையான நாடு கடத்தல்தானே. என்று சொன்னார்.
இதை சித்தார்த்தன் நடைமுறைப்படுத்து வாரா, என்று கேட்டார் சேனாதிபதி. உங்களின் பெற்றோர்கள், மற்றும் மனைவியின் ஒப்புதல் பெறாமல் எப்படித் துறவறம் மேற்கொள்ள முடியும்?
அவர்களின் ஒப்புதலை பெற்றாலும் பெறாவிட்டாலும் உடனே நாட்டைவிட்டு வெளியேறுவேன் என்று உறுதி கூறுகிறேன், என்ற சித்தார்த்தனின் உறுதியை ஒப்பு கொண்டனர். சித்தார்த்தன் உறுதி கூறியபடியே துறவறம் மேற்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறினார். இப்படியாக சித்தார்த்த கௌதமர் தமது 29வது வயதில் இல்லற வாழ்க்கையைத் துறந்து துறவறத்தை மேற்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நதி நீர்ப் பங்கீடு காரணமாக சாக்கிய நாட்டுக்கும், கோசல நாட்டுக்கும் நடக்க இருந்த போரை நிறுத்தும் முயற்சியில் துறவறம் மேற்கொண்ட புத்தராகிய சித்தார்த்த கௌதமன் பேச்சு வார்த்தை மூலமே இருநாட்டுப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், ஒருபோர் மற்றொரு போருக்கு விதை தெளிப்பதாக அமையுமே ஒழிய தீர்வாகாது என்றும், அன்பால் மட்டுமே வெல்லமுடியும் என்று உணர்த்தியது என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கது.
(உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கில் முன்வைக்கப்பட்ட ஒரு கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. கட்டுரையாளர் ஆ.ப.கௌதம சித்தார்த்தன். அவரும் ஒரு பத்திரிகையாளர்.)
நன்றி: வண்ணக்கதிர்
1 comments:
Hi see this link
http://bit.ly/bJHGXf
Post a Comment