உலககோப்பை கால்பந்து தொடரின் பைனலுக்கு முதல் முறையாக முன்னேறி வரலாறு படைத்தது ஸ்பெயின் அணி. நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது. படுசொதப்பலாக ஆடிய ஜெர்மனி அணியின் கோப்பைக் கனவு தகர்ந்தது.
தென் ஆப்ரிக்காவில் 19 வது உலககோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் கால்பந்து ரேங்கிங் பட்டியலில் 2 வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணி, ஜெர்மனியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் ஆரம்பம் முதலே, ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 6 வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெட்ரோவிடம் பந்தை பெற்றுக் கொண்ட நட்சத்திர வீரர் டேவிட் வில்லா கோலடிக்க முயன்றார். ஆனால் ஜெர்மனி கோல் கீப்பர் நியூர் சாமர்த்தியமாக தடுத்தார். ஸ்பெயின் (13 வது நிமிடம்), ஜெர்மனி (15 மற்றும் 16 வது நிமிடம்) அணிகள் அடுத்தடுத்த "கார்னர் கிக்' வாய்ப்புகளை வீணடித்தன.
பொடோல்ஸ்கி காயம்:
ஆட்டத்தின் 27 வது நிமிடத்தில் ஜெர்மனியின் நட்சத்திர வீரர் பொடோல்ஸ்கியின் காலில் வேண்டுமென்றே பலமாக தாக்கினார் ஸ்பெயினின் ரோமாஸ். இதனால் பொடோல்ஸ்கி காயம் அடைந்தார். இதனை "ரெப்ரி' கவனிக்காததால், ரோமாஸ் தப்பித்தார். 44 வது நிமிடத்தில் கிடைத்த "பிரீ கிக்' வாய்ப்பை, ஸ்பெயின் வீரர் புயோல் வீணடித்தார். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க வில்லை.
புயோல் அசத்தல்:
இரண்டாவது பாதியில், ஸ்பெயின் ஆக்ரோஷமாக ஆடியது. ஆட்டத்தின் 58 வது நிமிடத்தில், இரண்டு முறை ஸ்பெயினுக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் பெட்ரோ, டேவிட் வில்லா ஆகியோர் நூலிழையில் தவற விட்டனர். 73 வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு அடித்தது அதிர்ஷ்டம். "கார்னர் கிக்' வாய்ப்பில் ஷேவி அடித்த பந்தை தலையால் முட்டி சூப்பர் கோல் அடித்தார் கார்லஸ் புயோல். இப்போட்டியில் பெரும் ஏமாற்றம் அளித்த ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா 81 வது நிமிடத்தில் வெளியேறினார். இவருக்குப் பதில், டோரஸ் களமிறங்கினார்.
ஜெர்மனி ஏமாற்றம்: ஸ்பெயினுக்கு பதிலடி கொடுக்க ஜெர்மனி போராடியது. இருப்பினும் பலன் எதுவும் கிடைக்க வில்லை. இத்தொடரின் காலிறுதிப் போட்டியில் "எல்லோ(Yellow) கார்டு' பெற்ற தாமஸ் முல்லர் இடம் பெறாதது, ஜெர்மனிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் அணியின் மத்திய கள வீரர்களின் செயல்பாடு படுமந்தமாக இருந்தது. குளோஸ், பொடோல்ஸ்கி இருவரும் சாதிக்க தவறினர். இறுதியில் ஜெர்மனி, பைனல் வாய்ப்பை கோட்டை விட்டது. துடிப்புடன் ஆடிய யூரோ சாம்பியன் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக உலககோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியது.
ஆக்டோபஸ் வெற்றி
ஜெர்மனியின் ஓபர்ஹாசினில் கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சியகம் உள்ளது. இங்குள்ள ஆக்டோபஸ், தென் ஆப்ரிக்காவில் நடக்கும் உலககோப்பை கால்பந்து தொடரில், ஜெர்மனியின் வெற்றி, தோல்விகளை சரியாக கணித்து வந்தது. அரையிறுதியில் ஸ்பெயினிடம், ஜெர்மனி தோல்வி அடையும் என சுட்டிக் காட்டியது. இதன் படியே ஸ்பெயின் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆக்டோபசின் கணிப்பு 100 சதவீதம் உண்மையாகி உள்ளது. ஜெர்மனி தோல்வி அடையும் என கணித்த ஆக்டோபஸ் மீது அந்நாட்டு ரசிர்கள், கடும் கோபத்தில் உள்ளனர். ஜெர்மனி தோல்வி அடைந்தால், அதனை சமைத்து சாப்பிட்டு விடுவதாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். ஜெர்மனி ரசிகர்களின் கைகளுக்கு ஆக்டோபஸ் தப்புமா?
நெதர்லாந்துடன் மோதல்
அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி, பைனல் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. பைனல் போட்டி வரும் 11 ம் தேதி "சாக்கர் சிட்டி' மைதானத்தில் நடக்க உள்ளது.
1 comments:
Hi
See the link
http://alturl.com/rwty
Post a Comment