முதல் கவர்னர் ஜெனரலாக ஜின்னா பதவி ஏற்றார். ஏறத்தாழ 200 ஆண்டு காலம் வெள்ளையர் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியா, 1947 ஆகஸ்டு 15_ந்தேதி சுதந்திரம் அடைந்தபோது, அது இரண்டாக பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் தனி சுதந்திர நாடாகப் பிரிந்து சென்றது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில், மகாத்மா காந்தியுடன் இணைந்து செயல்பட்டவர் ஜின்னா. ஆனால், 1920_ம் ஆண்டு, காந்தியின் கொள்கை பிடிக்காமல் காங்கிரசை விட்டு விலகினார்.
ஜின்னா
1940_ம் ஆண்டில், "முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் என்ற தனி சுதந்திர நாடு வேண்டும்" என்ற கோரிக்கையை எழுப்பினார். பிரிவினையைத் தவிர்க்க, மகாத்மா காந்தி எவ்வளவோ முயன்றும், ஜின்னா சமரசத்துக்கு இணங்கவில்லை.
1945_ல் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தது. அந்த ஆண்டு ஜுலை மாதத்தில் இங்கிலாந்து நாட்டில் பொதுத் தேர்தல் நடந்தது. போர்க்காலத்தில் பிரதமராக இருந்து, நேச நாடுகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சர்ச்சிலின் கட்சி ("கன்சர்வேடிவ்") இந்த தேர்தலில் எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்தது. தொழிற்கட்சி வெற்றி பெற்று, அதன் தலைவர் ஆட்லி பிரதமர் ஆனார்.
ஆட்லி, இந்தியர்கள் மீது அன்பு கொண்டவர். "நான் வெற்றி பெற்றால், இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பேன்" என்று தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, சுதந்திரம் அளிப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், இந்தியாவில் நேரு தலைமையில் இடைக்கால அரசை இங்கிலாந்து அரசு அமைத்தது. மந்திரிசபையில், முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 இடங்கள் உண்டு என்றும், அதை எப்போது வேண்டுமானாலும் நிரப்பிக்கொள்ள ஜின்னாவுக்கு உரிமை உண்டு என்றும் வைஸ்ராய் அறிவித்தார்.
மந்திரிசபை அமைக்க நேருவை வைஸ்ராய் அழைத்ததால், ஜின்னா ஆத்திரம் அடைந்தார். "முஸ்லிம் சமுதாயத்தை வைஸ்ராய் அவமதித்து விட்டார்" என்று குற்றம் சாட்டினார். 16_8_1946_ந்தேதியை "நேரடி நடவடிக்கை நாளாக" முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவித்தார்.
நேரடி நடவடிக்கை நாளன்று, பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. குறிப்பாக வங்காள மாநிலத்தின் தலைநகரான கல்கத்தாவில் (இன்றைய கொல்கத்தா) கொலை, கொள்ளை, தீ வைப்பு, கற்பழிப்பு, கட்டாய மத மாற்றம் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மூன்று நாட்கள் இந்த கலவரம் நீடித்தது.
வங்காளத்தில் நடந்த கலவரத்தில், நவகாளி என்ற பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. கலவரத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும், இந்து_முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தவும் காந்தியடிகள் நவகாளியில், காலில் செருப்பு கூட அணியாமல் பாத யாத்திரை செய்தார். 166 மைல்கள் நடந்து 47 கிராமங்களுக்கு சென்றார்.
ஜின்னா அறிவித்த "நேரடி நடவடிக்கை நாள்" கடைப்பிடிக்கப்பட்டபோது நடந்த கலவரங்களில், 5 ஆயிரம் பேர் மாண்டதாகவும், 15 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்ததாகவும், ஒரு லட்சம் பேர் வீடு இழந்ததாகவும் பின்னர் அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, பாகிஸ்தான் பிரிவினையைத் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு ஆட்லி வந்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய புதிய "வைஸ்ராய்" ஆக மவுண்ட் பேட்டன் பிரபுவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். 1947 மார்ச் 23_ந்தேதி இந்தியாவின் வைஸ்ராயாக பதவி ஏற்றார்.
அவர் மகாத்மா காந்தியையும், மற்ற தலைவர்களையும் சந்தித்தார். "இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க இங்கிலாந்து முடிவு செய்து விட்டது. இந்தியத் தலைவர்களுக்கும், ஜின்னாவுக்கும் உடன்பாடு ஏற்படாவிட்டால், இந்தியா இன்று எப்படி இருக்கிறதோ அப்படியே விட்டு விட்டு, வெள்ளையர்கள் லண்டனுக்கு திரும்பி விடுவார்கள்" என்று தெரிவித்தார்.
இந்த சமயத்தில், இந்தியா முழுவதும் 565 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. நவாபுகள், ராஜாக்கள், சிற்றரசர்கள் இவற்றை ஆண்டனர். ஆகஸ்டு 15_ந்தேதி வெள்ளையர்கள் வெளியேறிவிட்டால், தங்கள் சமஸ்தானங்களை சுதந்திர நாடுகளாகப் பிரகடனம் செய்துவிட அவர்கள் தயாரானார்கள்.
இப்படி இந்தியா சிறு சிறு நாடுகளாக சிதறிவிடக்கூடிய ஆபத்தை உணர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்தனர். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், பிரிவினைக்கு ஆதரவாக நேரு, பட்டேல், கோவிந்த வல்லப பந்த் உள்பட 157 பேரும், எதிர்த்து 29 பேரும் ஓட்டளித்தனர். 32 பேர் நடு நிலைமை வகித்தனர். இதன் காரணமாக, பிரிவினைக்கு மகாத்மா காந்தியும் சம்மதிக்க வேண்டியதாயிற்று.
1947_ம் ஆண்டு ஆகஸ்டு 15_ந்தேதி (அதாவது 14_ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு) இந்தியாவின் சுதந்திர தின விழாவைக் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேருவும், முதல் கவர்னர் ஜெனரலாக மவுண்ட்பேட்டன் பிரபுவும் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. (கவர்னர் ஜெனரல் பதவி, ஜனாதி பதி பதவிக்கு சமமானது.)
இதற்கு ஒரு நாள் முன்னதாக (14_ந்தேதி காலை 9 மணிக்கு) பாகிஸ்தான் தொடக்க விழா கராச்சி நகரில் நடந்தது. இந்த விழாவில் மவுண்ட்பேட்டன் பிரபு கலந்து கொண்டார்.
"பாகிஸ்தானுக்கும் மவுண்ட்பேட்டன்தான் கவர்னர் ஜெனரலாக இருப்பார்" என்று ஜின்னா அறிவித்திருந்தார். ஆனால், பின்னர் தன் முடிவை மாற்றிக்கொண்டு, பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக ஜின்னாவே பதவி ஏற்றார்.
ஜின்னாவும், மவுண்ட் பேட்டனும் திறந்த காரில் ஊர்வலமாக செல்லும்போது கார் மீது குண்டு வீச இந்து தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை மூலம் மவுண்ட்பேட்டனுக்குத் தகவல் வந்திருந்தது. எனினும் திட்டமிட்டபடி ஊர்வலம் நடந்தது. அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.
அதிகாரங்களை ஜின்னாவிடம் ஒப்படைத்து விட்டு மவுண்ட்பேட்டன் டெல்லி திரும்பினார். டெல்லியில் நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார். பாகிஸ்தான் நாட்டின் அமைப்பு விசித்திரமானதாக இருந்தது.
பஞ்சாப் மாகாணத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய "மேற்கு பாகிஸ்தான்", வங்காளத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய "கிழக்கு பாகிஸ்தான்" என்ற இரண்டு துண்டுகளாக பாகிஸ்தான் இருந்தது. இரண்டுக்கும் இடைவெளி 1,000 மைல்களுக்கு மேல்!
"மேற்கு பாகிஸ்தானையும், கிழக்கு பாகிஸ்தானையும் இணைக்க ரோடு போடவேண்டும்" என்ற கோரிக்கையை பாகிஸ்தான் வலியுறுத்தியது. அந்த யோசனையை இந்தியா நிராகரித்தது.
0 comments:
Post a Comment