அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



சென்னை சிறுவன், தந்தையின் கள்ளக் காதலியால் கொல்லப்பட்டு சூட்கேசில் வைத்து நாகப்பட்டினத்தில் வீசப்பட்ட சம்பவத்தில்,  தன்னை ஏமாற்றிக் கொண்டிருப்பவனை பழிவாங்கும் நோக்கில், சினிமா பாணியில் பூவரசி தனது எண்ணத்தை நிறைவேற்றியிருப்பது தெரியவந்துள்ளது.


பழிவாங்கும் குணம் எல்லார் மத்தியிலும் இருந்தாலும், அனைவருக்கும் பழிதீர்க்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படி சந்தர்ப்பம் அமைந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு உதாரணமாக, பூவரசி என்பவர் தன்னை ஏமாற்றி வந்த காதலனின் மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.இதற்கு அப்பெண்ணின் பழிவாங்கும் குணம் ஒரு காரணமென்றாலும், தற்போது அன்றாடம் "டிவி'க்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நெடுந்தொடர்கள் மற்றும் சில சினிமாக்களும் காரணமாக அமைந்துள்ளன. அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நெடுந்தொடர்கள் பெண்களை வில்லிகளாகவும், கொடூரமான குணம் படைத்தவர்களாகவும், ஒழுக்கக் கேடான உறவு முறைகளையும், கலாசார சீரழிவுகளையுமே முதன்மைப்படுத்தி காட்டி வருகின்றன.

எம்.எஸ்சி., பட்டதாரியான பூவரசி, ராணிப்பேட்டை அருகில் உள்ள திருவலம் கிராமத்தைச் சேர்ந்தவர். சிறு வயது முதலே மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்துள்ளார். பள்ளிப் படிப்பு முடித்து ஆற்காட்டில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்சி., படித்து முடித்த நிலையில், ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய போது பெங்களூரைச் சேர்ந்தவரிடம் தனது மனதை பறிகொடுத்துள்ளார்.இந்த விவகாரத்தில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு கடந்த 2006ம் ஆண்டில் சென்னை வந்தார். சென்னையில் வந்து விடுதியில் தங்கியிருந்து வேலை தேடி வந்த நிலையில், எச்.டி.எப்.சி., வங்கியில் வேலை கிடைத்துள்ளது.அப்போது தான், அங்கு மேலதிகாரியாக இருந்த ஜெயக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் மெல்ல காதலாக மாறிய நிலையில், ஜெயக்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் தகவல் தெரியவந்துள்ளது.இருந்தாலும் தனது காதலை பூவரசி விடவில்லை. இதற்கு காரணம் ஜெயக்குமார் திருமணம் செய்து கொள்வதாக கூறிய வாக்குறுதி தான் என கூறப்படுகிறது. இருவரும் நெருங்கிப் பழகியதில் கர்ப்பமடைந்தார் பூவரசி.ஒரு முறை கருவை கலைக்கச் சொன்ன ஜெயக்குமார், மறுமுறை பூவரசி கர்ப்பமடைந்த போதும் கலைக்குமாறு கூறியுள்ளார். அப்போது தான் ஜெயக்குமாரின் உண்மையான குணம் பூவரசிக்கு தெரிந்தது. இருந்தாலும் தன்னை ஏமாற்ற மாட்டார் என முழுமையாக நம்பியுள்ளார். ஜெயக்குமார் தன் குடும்பத்துடன் நிம்மதி, சந்தோஷத்துடன் வாழ்வதற்காக தனது குழந்தையை கொல்லச் செய்துவிட்டாரே என்ற எண்ணம் அவரின் மனதுக்குள் அடிக்கடி சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தான் பணியாற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பூவரசிக்கு வேலை போட்டுக் கொடுத்த ஜெயக்குமார், தொடர்ந்து தனது உடல் இச்சைக்கு மட்டும் பூவரசியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. திருமண ஆசை காட்டியதை அடுத்து, பூவரசியும் இதற்கு ஒத்துழைத்துள்ளார். சமீபத்தில் திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயக்குமாரை, பூவரசி வற்புறுத்திய நிலையில், ஜெயக்குமார், பூவரசியை தனது நிறுவனத்தின் மதுரை கிளைக்கு மாற்றினார். தன்னை திருமணம் செய்யாததுடன், வேறு ஊருக்கும் மாற்றி விட்டாரே என்ற எண்ணம் முழு பகையாகவும், பழிதீர்க்கும் எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது.விளைவு, சம்பவத்தன்று தனது மகனை  அலுவலகத்திற்கு அழைத்துவந்த ஜெயக்குமாரிடம், அவனை வெளியில் கூட்டிச் செல்வதாக கூறி தனது விடுதி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, ஆதித்யாவுக்கு குளிர்பானம், வடை ஆகியவற்றை வாங்கித் தந்து அவனுடன் சிறிது நேரம் விளையாடிய நிலையில், பூவரசிக்கு பழிவாங்கும் எண்ணம் தலைதூக்கியுள்ளது.

"ஆன்ட்டி...ஆன்ட்டி' என்று செல்லமாக அழைத்த ஆதித்யாவின் கழுத்தை கயிற்றால் இறுக்கியுள்ளார். ஆதித்யா இறந்துவிட்ட நிலையில், பழி வெறி மேலோங்க அவன் தலையில் கறுப்பு பிளாஸ்டிக் பையை மாட்டி அதன் மேல், நயிலான் கயிற்றை வைத்து மேலும் இறுக்கியுள்ளார்.பின், தன்னிடம் இருந்த பழைய சூட்கேசில் உடலை வைத்துள்ளார். அன்று பிற்பகல் சர்ச்சில் சென்று பாவமன்னிப்பு கேட்ட நிலையில் மனக்குழப்பம், இப்படி அவசரப்பட்டுவிட்டோமே என்ற பயத்தில் மயங்கி விழுந்தார்.இருந்தாலும், போலீஸ் விசாரணையில் ஒன்றுமே அறியாதது போல நடித்துள்ளார். அப்போதுதான் அவருக்கும், ஜெயக்குமாருக்கும் உள்ள கள்ளத் தொடர்பு குறித்த "க்ளூ' போலீசிற்கு கிடைத்துள்ளது. அது தான் போலீசின் சந்தேகத்திற்கும் வழி வகுத்துள்ளது.

அப்போதே போலீசுக்கு சந்தேகம் தோன்றினாலும், பூவரசி உடல் நிலை சரியில்லாதது போல் நடித்து ஏமாற் றியுள்ளார். மறுநாள் கிடைத்த சந்தர்ப் பத்தை பயன்படுத்தி, சினிமாவில் வருவது போன்று பலரையும் ஏமாற்றி, சிறுவனின் உடலை பஸ்சில் வைத்து நாகை அனுப்பியுள்ளார். பழிவாங்கும் உணர்ச்சியால் தான் அப்படி செய்துவிட்டதாக கூறும் பூவரசி, இந்த விஷயத்தில் ஜெயக் குமாரையும் மாட்டிவிட முயற்சி எடுத்துள்ளார்; ஆனால் முடிய வில்லை. போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தியதில் உண்மை வெளிவந்துள்ளது. மனதிற்குள் வஞ்சம் இருந்தாலும், அடிக்கடி ஜெயக்குமார் வீட்டிற்கு சென்றுள்ள பூவரசி, இது குறித்து அவர் மனைவி ஆனந்தியிடம் வெளிக்காட்டவில்லை என கூறப்படுகிறது.சமீபத்தில், சென்னை அடுத்த புழல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவன் தன்னை விட்டு வேறு பெண்களிடம் பழகுவதையும், தனது அழகை விமர்சிப்பதையும் பொறுக்க முடியாமல் அவன் மீது நள்ளிரவில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார். அதே போன்று, பல்லாவரத்தில் மற்றொரு பெண், தன்னை அடிக்கடி குடித்துவிட்டு வந்து துன்புறுத்தி வந்த கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

பழிவாங்கும் உணர்ச்சி பெண்களுக்கு இயல்பா?ஒருவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதற்கு உளவியல் ரீதியான பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆண்களால் பாதிக்கப்படும் பெண்கள் பெரும் பாலும் வெறுப்பு, விரக்தியின் உச்சத்திற்கு செல்லும் போது பழிவாங்கும் உணர்ச்சிக்கு ஆட்படுகின்றனர்.

மனோதத்துவ டாக்டர் ஷாலினி: இதுகுறித்து மனோதத்துவ டாக்டர் ஷாலினி கூறும் போது,""பழி வாங்கும் உணர்ச்சிக்கு பாலின பாகு பாடு கிடையாது. மனரீதியாக பாதிக் கப்படும் போது அந்த எண்ணம் மேலோங்குகிறது. சமூக விரோத போக்குகள் இதற்கு மூலகாரணமாக இருக்கிறது. பொதுவாக பெண் களிடத்தில் பழிவாங்கும் உணர்ச்சி இருப்பதை மக்கள் அறிவதில்லை. மனச் சிதைவு ஏற்படும் போது புத்தி சரியாக வேலை செய்யாத நிலையில் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன, '' என்றார்.  

மனநல ஆலோசகர்  பிரபாகரன்: ஆண்களுக்கு தான் அதி கமாக பழிவாங்கும் உணர்ச்சி இருப்பதாக கருத்து இருந்தது. கலா சார சீரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பெண்களுக்கு அந்த உணர்ச்சி மேலோங் கியுள்ளது. முன்பெல்லாம் பெண்கள் கலாசாரம் என்ற வளையத்திற்குள் கட்டுப்பட் டிருந்தனர். இப்போது நிலைமை மாறி விட்டது.பெண்கள் எப்போதும் திட்டமிட்டு எதையும் செய்வதில்லை. தான் நிராகரிக்கப்படுகிறோம் என்ற எண்ணம் மேலோங்கும் நேரத்தில் உடனடியாக இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும் பெண்களுக்கு அன்பு கிடைக்காமல் இருக்கும் போதும், உரிமை மீது பாதிப்பு ஏற்படும் போதும் இம்மாதிரி பழிவாங்கும் எண்ணம் அதிகரிக்கும்.அன்பு கொண்டவர் தன்னை கொடூரமாக நிராகரிக்கும் போது, பெண்களுக்கு உடனடியாக பழி வாங்கும் எண்ணம் ஏற்பட்டு விடும்.

கொலையாளி பூவரசி மாஜிஸ்திரேட் முன் ஆஜர் : கள்ளக்காதல் விபரீதத்தால், சிறுவன் ஆதித்யாவை கழுத் தை நெரித்து கொலை செய்த பூவரசியை போலீசார், மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்தனர்.பூவரசியை நேற்று காலை போலீசார் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர் செய்ய இருந்தனர். இது குறித்த தகவல் பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களுக்கு தெரியவந்தது. அவர்கள், ஜார்ஜ்டவுன் கோர்ட் அருகே காலை முதல் காத்திருந்தனர். கொலையாளி பூவரசியை செருப்பு, கல் ஆகியவற்றால் அடிக்க "ஆத்திரத்துடன்'  பொதுமக்கள் காத்திருந்தனர். மாலை 5 மணியாகியும் போலீசார், பூவரசியை கொண்டு வராததால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பூவரசியை சட்டக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர். தகவல் அறிந்த சில போட்டோகிராபர்கள் மட்டும் அங்கு சென்றனர். ஆனால் அதற்குள் போலீசார், சைதாப்பேட்டையில் உள்ள ஜார்ஜ் டவுன் 7வது கோர்ட் மாஜிஸ்திரேட் சுஜாதாவின் வீட்டிற்கு, பூவரசியை பாதுகாப்பாக அழைத்துச் சென்று ஆஜர் படுத்தினர்.

கேமராக்களில் சிக்கிவிடாதபடி, பூவரசியின் முகம் துணியால் மூடப்பட்டிருந்தது. ஆனாலும், புகைப்படக்காரர்கள் பின்தொடர்ந்தனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்து தப்பிக்கப் போகும் வழியில் போலீஸ் வேனில் இருந்த பூவரசியை ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர்.மாலை 6.10 மணி அளவில் பூவரசியை சட்டக்கல்லூரி போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்து வேனில் ஏற்ற போலீசார் வெளியே அழைத்து வந்த போது, புகைப்படக்காரர்கள் படம் எடுக்க முயற்சித்தனர். அப்போது, கால்பந்தாட்டத்தில் "பெனால்டி கிக்' கோலை தடுக்கும் வீரர்கள் போல், போலீசார் படம் எடுக்க விடாமல் தடுத்தனர். அதையும் மீறி எடுத்த போட்டோகிராபர்களின் கேமரா மற்றும் பையை பிடித்து இழுத்து இடையூறு ஏற்படுத்தினர். இதனால், சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுவன் கொலையில்  புரியாத புதிர்கள் : சென்னை சிறுவன் கொலை வழக்கில், பின்னணியில் இருந்த நபர்கள் யார் என்பது புரியாத புதிராக உள்ளது.  சிறுவன் உடல் நாகையில் அடக்கம் செய்த போது, சிறுவனின் தந்தை அங்கு வராதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இருந்து நாகை வரை சிறுவன் ஆதித்யா உடல் இருந்த சூட்கேஸ் பற்றி பஸ் கண்டக்டர் மற்றும் பயணிகள் அறியாதது எப்படி? நாகை பஸ் ஸ்டாண்டில் சூட்கேசை இறக்கி வைத்தது யார்? போலீசாருக்கு தகவல் தெரிவித்தது யார் என்ற குழப்பம் நிலவுகிறது.இறந்த சிறுவன் உடலை பார்க்க தாய் ஆனந்தி மட்டும் தனியாக அழைத்து வரப்பட்டது ஏன்?  ஆதித்யா உடல், தாய் ஆனந்தி முன்னிலையில் நாகையில் அடக்கம் செய்யப்படும் சூழலில் கூட பிள்ளையை பறிகொடுத்த தந்தை ஜெயக்குமார் வராதது ஏன்? என, விடை தெரியாத கேள்விகள் உள்ளன.நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென்று சென்னை போலீசார், ஜெயக்குமாரை அழைத்து வந்து ஆதித்யா உடலை அடக்கம் செய்த இடத்தை காண்பித்துள்ளனர். சிறுவனின் கொலைக்கும், தந்தைக்கும் தொடர்புள்ளதா? அவரை தப்பிக்க வைக்க போலீசார் கடும் முயற்சி எடுப்பதாகவும் சந்தேகம் வலுத்துள்ளது. அதோடு, பூவரசி மட்டுமே இந்த கொலையை நிகழ்த்தியிருக்க முடியுமா? பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பதும் புரியாத புதிராக உள்ளது.

கணவரையும் தண்டிக்க வேண்டும்: கொலைகாரியை தப்பவிடக்கூடாது:குழந்தை கொலை குறித்து பெண்கள் கருத்து என்ன?

மிகக் கொடூரமாக குழந்தையை ஒரு பெண் கொலை செய்து சூட்கேசில் கொண்டு சென்ற சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த  சம்பவம் குறித்து பெண்கள் சிலர் வெளியிட்ட கருத்து:

பெண் வக்கீல்கள் சங்கத் தலைவி பிரசன்னா: சட்டவிரோதமான, தவறான உறவினால், சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளான். இந்தக் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. இவ்வழக்கில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.இந்த வழக்கில், கணவனும் தண்டிக்கப்பட வேண்டும். அவரது முறைகேடான தொடர்புக்கு, சொந்த மகன் பலியாகியுள்ளான். தனக்கு திருமணமாகி, குழந்தைகளும் இருக்கிறது என தெரிந்தும், சட்டவிரோதமாக ஒரு பெண்ணுடன் ஏன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்?மனநிலை சரியில்லை என்பதால் இந்தக் கொலையை செய்தார் என்கிற வாதத்தை எல்லாம் ஏற்கக் கூடாது.  நமது சமூகம் எந்த பாதையில் செல்கிறது? பெண்கள் உரிமைக்காக போராடுகிற காலகட்டத்தில், இத்தகைய கொடூர கொலையில் பெண்ணே ஈடுபடுவது என்பது அதிர்ச்சிக்குரியது.இதுபோன்ற வழக்குகளை மூன்று மாதங்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மகளிர் கோர்ட் இருப்பது போல், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி கோர்ட் அமைக்க வேண்டும் என, ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு மனு கொடுத்துள்ளோம்.இந்த தனி கோர்ட்டில் பெண் நீதிபதியையும், போலீஸ் தரப்பில் பெண் வக்கீலையும் நியமிக்க வேண்டும் என கோரியுள்ளோம்.

அமுதாதேவி (குடும்பத் தலைவி, மதுரை): தமிழகம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு சென்னை சம்பவம் ஒரு உதாரணம். சமீபகாலமாக கள்ளக்காதல், பெண்களை கடத்திச் செல்வது போன்ற சம்பவங்கள் அதிகரிக்கின்றன. சென்னை சிறுவன் படுகொலைக்கும் கள்ளக்காதல் பிரச்னையை காரணமாக இருந்துள்ளது. ஆனால், அப்பாவி சிறுவன் பலியாகியுள்ளதும், பெண்ணே சிறுவனை நெஞ்சை கல் ஆக்கிக்கொண்டு கொன்றதும், இனி நடக்கக் கூடாது. தவறு செய்தவர்களை கோர்ட்டில் நிறுத்தி கடும் தண்டனையை பெற்று கொடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகளை தவிர்க்கலாம்.

ஜி. சுசீலா (குடும்பத் தலைவி, திண்டுக்கல்): கொலைக்கு ஜெயக்குமாரை பூவரசி காரணம் கூறுவதை ஏற்க முடியாது. திருமணமானவர் என்று தெரிந்தே பூவரசி பழகியுள்ளார். பழக்கம் கள்ளக்காதலாக மாறி கொலையில் முடிந்துள்ளது. கள்ளக்காதலன் செய்த தவறுக்கு அவரது மகனை கொலை செய்த கொடூரம் மன்னிக்க முடியாதது. ஜெயக்குமார் மீதும் தவறுள்ளது. ஆண், பெண் இருவருக்கும் தனிநபர் ஒழுக்கம் முக்கியம். பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தராததே இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை.

எஸ்.அனந்தநாயகி, (விரிவுரையாளர், காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி): ஆண்கள் ஏமாற்றும் அளவிற்கு, பெண்கள் இடம் கொடுக்கக் கூடாது. இருவரின் தவறான நடத்தைக்கு சிறுவன் ஆதித்யா கொலை செய்யப்பட்டுள்ளான். கள்ள உறவுக்கு எந்த வகையிலும் இடம் கொடுக்க கூடாது. இதுபோன்ற உறவுகளால், கொலைகள் அதிகரிக்கின்றன. இதனால், தொடர்பு இல்லாத மற்றொரு உயிர் பலியாகிறது. இருவரின் தவறால் இரு குடும்பங்களும் சீரழிகின்றன. சிறுவனை கொலை செய்த பெண்ணிற்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும். கள்ள உறவு, அது தொடர்புடைய குற்றங்களுக்கு தண்டனை விதிக்க, தனி சட்டம் இயற்ற வேண்டும். ஒழுக்கக்கேடுகளை அனுமதிக்கவே கூடாது.

மரியா (இல்லத்தரசி, விருதுநகர்):  "டிவி'க்களில் நிறைய தொடர்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. தொடர்களை பார்த்து கண்ணீர்விடும் பெண்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் நிஜ வாழ்க்கையில் மனித உணர்வுகளை மதிப்பதில்லை. கள்ளக்காதல் குறித்தும், பழிவாங்குவதற்கு எப்படி கொலை செய்வது என்பது குறித்தும் பல்வேறு வகைகளில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன.

கடலூர், பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவி சித்ரா: கலாசார சீரழிவின் உச்சகட்டமே இந்த கொடூர சம்பவம். ஒன்றும் அறியாத குழந்தையை கொலை செய்த பூவரசிக்கு அதிக பட்சமாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இவருக்கு கொடுக்கும் தண்டனை இனி இதுபோன்ற கொடூரங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் இருக்க வேண்டும்.

கடலூர் முதுநகர் குடும்பத் தலைவி பழனியம்மாள்: ஆரம்பம் முதல் தெரிந்தே தவறு செய்துவிட்டு, தற்போது வருந்துவது சற்றும் நியாயமற்றது. இவர் செய்த செயல், நட்பையே கேவலப்படுத்தியுள்ளது. இதனால், இனி ஒவ்வொருவரும் தங்களது குடும்ப நண்பர்களை சந்தேகிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளார். இவருக்கு, இந்த சமுதாயத்திற்கே பாடம் புகட்டும் வகையில் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

கல்லூரி மாணவி கனகலட்சுமி: ஜெயக்குமாரால், தான் பாதிக்கப்பட்டதாக கூறும் பூவரசி, சட்டத்தின் மூலமாகவே ஜெயக்குமாருக்கு தண்டனை பெற்று தந்திருக்கலாம். அதை விடுத்து, அவரே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, ஜெயக்குமாரை பழிவாங்குவதாக நினைத்து அவரது குழந்தை ஆதித்யாவை கொலை செய்தது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பெண் சமுதாயத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள பூவரசிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

பாரதி குமார் (கல்விக்குழு தலைவர், அனகாபுத்தூர்): கள்ளக்காதலனை பழிவாங்க, ஒரு பாவமும் அறியாத  சிறுவனை ஒரு பெண் கொலை செய்துள்ளார். இந்த செய்தியை பத்திரிகைகளில் படிக்கும் போது, பண்பாடு, கலாசாரத்திற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த தமிழகமா இது என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த படுபாதக செயலை செய்ய அந்த பெண்ணுக்கு எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை. சமீபகாலமாக, கள்ளக்காதல் விவகாரங்கள் கொலையில் தான் முடிகின்றன. ஆனால், காதலனோ, காதலியோ தான் கொலை செய்யப்பட்டு வந்தனர். ஆனால், விருகம்பாக்கம் வழக்கில் சம்பந்தமே இல்லாத ஒரு சிசுவை, அந்த பெண் கொலை செய்திருப்பது ஜீரணிக்க முடியாத விஷயமாக உள்ளது. இதுபோன்ற வழக்குகளை விரைந்து முடித்து, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.அரக்க குணம் கொண்ட இதுபோன்ற பெண்களை, அரபு நாடுகளில் செய்யப்படுவதை போன்று நடுரோட்டில் தூக்கிலிட வேண்டும்.  இந்த வழக்கை பொறுத்த வரையில் சிறுவன் அரவிந்தின் தாய், பூவரசியை தனது கணவனுடன் நெருங்கிப் பழக விட்டிருக்கக் கூடாது. கணவர் மீதும், அந்த பெண் மீதும் அவர் வைத்திருந்த அளவு கடந்த நம்பிக்கை, மகனை இழப்பதற்கு வழிவகுத்து விட்டது. மனைவியை ஏமாற்றிவிட்டு, கள்ளக்காதல் புரிந்து கொண்டிருக்கும் கீழ்த்தரமான கணவன்கள் இந்த சம்பவத்தையே ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு திருந்த வேண்டும்.

வக்கீல் கீதாஞ்சாலி, கோவை: தாய்மையின் உன்னதத்தை தெரிந்து கொள்ளாமல் நடந்த கொடூரமான செயல். தனக்கும், அந்த வயது குழந்தை இருந்திருந்தால் இது நடந்திருக்காது. இச்சம்பவத்தில் ஆண், பெண் இருவருமே குற்றவாளிகள். இக்கொடூர குற்றம் செய்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை வழங்குவது சரியான தீர்ப்பு என்றாலும், சித்ரவதை செய்து, குழந்தையை கொலை செய்து, அதன் தாய்க்கு தாங்காத சோகத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும். கள்ளக்காதலில் ஈடுபடும் இருவருக்கும் இந்த தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்

சுப்புலட்சுமி (கோவை மாநகராட்சி கவுன்சிலர்): குழந்தையால் தான் பெண்ணுக்கு தாய்மை எனும் பெயர் கிடைக்கிறது. குழந்தையை கொன்ற செயல் படுபாதகமானது. மன்னிக்க முடியாத குற்றம். திருமணமான ஆணை விரும்புவது தவறு, அவருடன் தனிமையில் இருப்பது அதை விடக்குற்றம்.அவள் நினைத்திருந்தால் குழந்தையின் அப்பாவுக்கும் கெடுதல் செய்திருக்க முடியும். ஆனால், எதுவுமே அறியாத, பல ஆயிரம் கனவுகளோடு காத்திருந்த அந்த பிஞ்சு நெஞ்சை துடிதுடிக்க கொன்றவள், பெண்ணினத்துக்கே அவமானம். குற்றம் சாட்டப்பட்ட பூவரசியை வாழ்நாள் முழுக்க தனிமைச் சிறையில் அடைக்க வேண்டும்.

கடலூர், தொட்டி கிராமத்தை சேர்ந்த நர்சிங் டிப்ளமோ மாணவி கவுரி: தன்னை பழிவாங்கியவரை பழிவாங்குகிறேன் என்ற பெயரில் குழந்தையை கொலை செய்து பெண் இனத்திற்கே இழிவை ஏற்படுத்திய பூவரசி இனி ஒரு நிமிடம் கூட உலகில் உயிரோடு இருக்க அனுமதிக்கக் கூடாது.

காயத்ரிதேவி (குடும்பத் தலைவி): திருமணமான ஆணும், வேறு ஒரு பெண்ணும் செய்த தவறுக்கு குழந்தையை பழிவாங்குவது தர்மம் ஆகாது. தன்னை கைவிட்ட ஆணைத்தான் அவள் தண்டித்திருக்க வேண்டும். பழி தீர்த்திருக்க வேண்டும். ஏதும் அறியாத அந்த பிஞ்சை அழித்தது பாவம். சட்டப்படி என்ன தண்டனை தரவேண்டுமோ அதை, பாரபட்சமின்றி வழங்க வேண்டும்.

சுசீலா(வீட்டுத் தலைவி): சிறுவன் கொலைக்கு காரணமாக இருந்த கள்ளத் காதலர்கள் இருவரையும், அரபு நாடுகளில் செய்வது போல் நடுரோட்டில் நிற்க வைத்து கல்லால் அடித்து கொல்ல வேண்டும். அப்போதுதான் அதை பார்க்கும் பிறருக்கும் புத்தி வரும்.கோவை மாநகராட்சி சுயேச்சை கவுன்சிலர் ரேவதி: மனசாட்சியையும், மனிதநேயத்தையும் தள்ளி வைத்து விட்டு, பச்சைக்குழந்தையென்றும் பாராமல், மனிதத்தன்மையில்லாமல் சுயநலத்திற்காக, பூவிதழை போன்ற பிஞ்சுமுகத்தை கொன்ற பூவரசிக்கு மன்னிப்பே கிடையாது. மனிதப்பிறப்பிற்கே லாயக்கற்ற இப்பெண்ணிற்கு ஐந்தறிவு படைத்த மிருகங்கள் பயிற்சியின் போது தவறு செய்தால், எப்படி பயிற்சியாளர் அதை வதைத்தெடுக்கிறாறோ அதே போன்று கொடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.

தமிழ் செல்வி  (சமூகஆர்வலர்):  களவாடிய சூழலில் தவறு செய்த அந்த நபருக்கு தண்டனை கொடுக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அதை யோசிக்காமல், எந்தபாவமும் செய்யாத பிஞ்சுமழலையை கொலை செய்தது மனித வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றம்.இதற்கு எந்த உயர்ந்தபட்ச தண்டனையும் வழங்கலாம். இருந்தாலும் இந்திய தண்டனைச் சட்டத்தில் மிகவும் உயர்ந்தபட்ச தண்டனையை, உலக மக்கள் அனைவரும் அரியும் வகையிலும், தெரிந்து கொண்டு மற்றவர்கள் யாரும் இனிமேல் இது போன்ற தவறை செய்யக்கூடாத வகையிலும் மிகப்பெரிய தண்டனையை கொடுக்க வேண்டும்.

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.