தகவல் உலகம் மீண்டும் தனது சூழற்ச்சியை ஆரம்பித்துள்ளது.
........................................................................................................................................................
இந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டுக்கு இந்திய அரசின் அமைச்சரவை வியாழனன்று ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்காக தேவநாகரி "ரா" மற்றும் ரோமன் "ஆர்" ஆகிய இரண்டும் இணைந்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அமெரி்க்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளின் நாணயங்களின் வரிசையில், இந்திய ரூபாயின் குறியீடும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. தற்போதைய நிலையில், Rs அல்லது INR என்றே இந்திய ரூபாய் குறிப்பிடப்படுகிறது.
புதிய குறியீட்டை வடிவமைத்திருப்பவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மும்பை ஐஐடி முதுகலை பட்டதாரியுமான டி.உதயகுமார் ஆவார். இந்தப் புதிய குறியீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி நேற்று தெரிவித்தார்.
ரூபாய் குறியீட்டுக்காக வந்த 3000 வடிவங்களிலிருந்து உதயகுமார் வடிவமைத்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு 2.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
"இந்தப் புதிய குறியீடு, இந்திய ரூபாயை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு மொழிகளில் ஒரே மாதிரியாகத் தெரியப்படுத்துவதற்கு வழிவகுக்கும். மேலும், பாக்கிஸ்தான், நேபாளம், இலங்கை, இந்தோனேசியா போன்ற பல நாடுகள் ரூபாய் அல்லது ரூபயா என்ற பெயரில் தங்கள் நாணயங்களை அழைக்கும் நிலையில், புதிய குறியீடு இந்திய ரூபாயின் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்கும் உதவும்," என்றார் அமைச்சர் அம்பிகா சோனி.
"புதிய குறியீடு, ரூபாய் நோட்டு அல்லது நாணயங்களில் அச்சிடப்படும் என்று தெரிவித்த அம்பிகா சோனி, அடுத்த 6 மாதங்களில் இந்தியாவிலும், 18 முதல் 24 மாதங்களில் உலகளாவிய அளவிலும் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபடும்," என்று அம்பிகா சோனி கூறினார்.
புதிய குறியீட்டை அச்சில் வெளியிடவும், கணினிப் பயன்பாட்டுக்கு உதவும் வகையில், கணினியின் விசைப்பலகையிலும், கணினி மென்பொருள்களிலும் இடம் பெறச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் ரூபாய்க்கான புதிய அடையாள குறியீட்டை உருவாக்கி சாதனை படைத்திருக்கும் த.உதயகுமார், சென்னையை சேர்ந்த தமிழர் ஆவார். இவர் சென்னை ரிஷிவந்தியம் தொகுதியின் தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன்.
உதயகுமார், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஆர்க் பட்டம் பெற்றார். பி.ஆர்க் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றார். அதன்பிறகு மும்பை ஐ.ஐ.டி.யில் தொழில் டிசைனிங் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். அங்கு பி.எச்டி. பட்டம் பெற்று உள்ளார்.
ரூபாய்க்கான அடையாள குறியீடாக தனது படைப்பு தேர்வானது குறித்து உதயகுமார் கூறுகையில், "என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. உண்மையில் மெய்சிலிர்த்து போய் இருக்கிறேன் என்றார்.
உதயகுமார், கவுகாத்தி ஐ.ஐ.டி.யின் வடிவமைப்பு துறையில் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
0 comments:
Post a Comment