ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர். இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர் ஆங்கிலத்தில் After the death என்ற ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதில் ஆவிகள் பற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களைத் தெரிவித்திருக்கிறார்.
கிருஷ்ணய்யரின் மனைவி பெயர் சாரதா. அவர் இருதயக் கோளாறால் இறந்து விட்டார். இது கிருஷ்ண அய்யருக்கு மிகுந்த சோகத்தைத் தந்தது. 33 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இணை தன்னை விட்டுப் பிரிந்ததைப் பற்றி மிகவும் கவலை கொண்டார். மரணம் என்றால் என்ன, அதன் பின் மனிதர்களின் நிலை என்னவாகிறது என்பது பற்றியெல்லாம் ஆராய்ந்தார். ஆவிகளுடன் பேசும் முறைகள் பற்றியும் ஆய்வுகள் செய்தார். உலகெங்கும் பயணம் செய்து பல புகழ்பெற்ற மீடியம்களை சந்தித்தார். பல அதிசய அனுபவங்களை, தகவல்களைப் பெற்றார் என்றாலும் நேரடியாக அவரால் அவரது மனைவியின் ஆவியுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருந்தது.
அவர் மனைவி சாரதாவின் ஆவி பிறர் கண்களுக்குத் தட்டுப்பட்டது. அவர்களோடு பேசியது. பல எதிர்கால தகவல்களைக் கூறி எச்சரிக்கை செய்தது. ஆனால் கிருஷ்ணய்யருக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணத்தை சாரதாவின் ஆவியிடம் ஒரு நண்பர் வினவிய போது, ‘அவர் என் பிரிவால் அடைந்திருக்கும் சோகமும், அதனால் ஏற்படும் துயரமுமே மிகப் பெரிய திரையாகச் சூழ்ந்து அவரை என்னோடு தொடர்பு கொள்ள இயலாமல் செய்திருக்கிறது. அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக வாழ முயல வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.
இதனை அறிந்த கிருஷ்ணய்யர் மிகவும் துயரம் கொண்டார். ஒருநாள் கிருஷ்ணய்யரின் இல்லத்திற்கு ஒரு சாது வந்தார். அவர் புராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். மட்டுமல்ல’ ஆவிகளுடன் பேசுவதிலும் பயிற்சி பெற்றவர். அவர் கிருஷ்ணய்யருக்கு ஆவிகளுடன் பேசுவதற்காக சில பயிற்சி முறைகளை சொல்லித் தந்தார். ஆனால் அய்யர் அப்போது உச்ச நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வந்ததால் மிகுந்த வேலைப்பளு இருந்தது. அதனால் அந்தப் பயிற்சிகளைச் செய்ய இயலவில்லை. இனி கிருஷ்ணய்யர் கூற்றாகவே வருவதைக் காண்போம்.
அந்தச் சாது என்னோடு சிலநாட்கள் தங்கினார். என்னை தனது சிஷ்யப் பொறுப்பிலிருந்து விடுவித்தார். ஒருநாள்… பௌர்ணமி… இரவு… அன்று அவர் தியானத்தில் அமர்ந்தார். பின் தான் தற்போது சாரதாவின் ஆவியுடன் தொடர்பு கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். நானும் அதற்குச் சம்மதித்தேன்.
மறுநாள் காலை எழுந்ததும் அந்தச் சாது என்னைச் சந்தித்தார். தனது தியானத்தில் என் மனைவியைக் கண்டதாகவும் (அவர் முன்னமேயே என் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்திருந்தார்), அவர் பத்மா, காந்தா என்னும் இரண்டு பெயர்களை மட்டும் கூறி விட்டு உடனடியாக மறைந்து விட்டதாகவும் சொன்னார். நான் அதிர்ச்சியுற்றேன். காரணம், இந்த முன்பின் தெரியாத சாதுவால் அந்தப் பெயர்களை கற்பனை செய்து கூடச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பத்மா என்பது மனைவியின் சகோதரி பெயர். காந்தா என்பது என் மனைவியின் சகோதரர் பெயர் (காந்தா என்றுதான் அவரை அனைவரும் அழைப்பார்கள்). ஆக, இவர் என் மனைவியைக் கண்டதாகச் சொல்வது உண்மைதான் என உணர்ந்தேன்.
சில நாட்கள் போயிற்று. மீண்டும் அவர் ஒரு நாள் தியானத்தில் அமர்ந்தார். மறுநாள் அவர் தியானத்தில் கண்டவற்றை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். ”என் தியானத்தில் உன் மனைவியைக் கண்டேன். ’ நான் என் கணவரது வருகைக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குள் ஒருவேளை நான் மறுபிறவி எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம். அப்படி நான் மறுபிறவி எடுத்தால், சென்னையிலுள்ள டாக்டர் சந்தானம் – ஜெயா சந்தானம் தம்பதிகளுக்குக் குழந்தையாகப் பிறப்பேன்’ என்றாள் அவள்” என்றார் சாது.
நான் திகைத்துப் போய் நின்று விட்டேன், காரணம், சந்தானம் என்பது என் மனைவி சாரதாவின் இளைய சகோதரர் பெயர். அவர் சென்னயில் டாக்டராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் ஜெயா. இதை அந்தச் சாது கற்பனை கூடப் பண்ணிச் சொல்லியிருக்க முடியாது. இந்த விஷயங்களை அவரிடம் சொல்வதற்கான ஆட்களும் அப்போது என் வீட்டில் இல்லை. இது உண்மைதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணய்யர்.
இதுமட்டுமல்ல; முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் போன்றவர்களும் ஆவி உலக ஆய்வில் நம்பிக்கை கொண்டதாகவும் அவர் அந்நூலில் தெரிவித்திருக்கிறார்.
அனுபவமே உண்மை ஆசான்!
2 comments:
புத்தகத்தைப் படிக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு. புத்தக விவரங்களை வெளியிடுவீர்களா?
’Twenty Cases Suggestive of Reincarnation"
ஆவிஉலகத்தொடர்பு பற்றி நிறைய ஆராய்ச்சிகள்.
கீழே கொடுத்துள்ள தளத்தையும் பார்க்கவும்
http://www.pureinsight.org/node/1165
Post a Comment